காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

ஆதார அடையாளம்!

சரக்கு வரி மசோதாவுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்ட நேரத்தில், நிதியமைச்சர் ஜேட்லி குறிப்பிடும்போது, இதனை வேறுவழியில் நிறைவேற்ற முடியும் என்று அறிவித்தார். அப்போது இது குறித்த விவாதங்களில், இந்த மசோதாவைப் பண மசோதாவாக நிறைவேற்றுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், மக்களவையில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை உள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:47 pm

ஆசிரியர்

இந்தியாவில் அனைவருக்கும் ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கும் ஆதார் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு பல்வேறு எதிர்ப்புகள், சில ஆட்சேபணைகள் இருந்தபோதிலும், இது இன்றைய இந்தியாவின் கட்டாயம் என்பதாக மாறிவிட்டது.
 சரக்கு வரி மசோதாவுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்ட நேரத்தில், நிதியமைச்சர் ஜேட்லி குறிப்பிடும்போது, இதனை வேறுவழியில் நிறைவேற்ற முடியும் என்று அறிவித்தார். அப்போது இது குறித்த விவாதங்களில், இந்த மசோதாவைப் பண மசோதாவாக நிறைவேற்றுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், மக்களவையில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை உள்ளது. பண மசோதாவாகக் கொண்டுவந்தால், அதனை மாநிலங்களவையில் விவாதம் மட்டும் நடத்தி, ஒப்புதல் இல்லாவிட்டாலும்கூட, அது 14 நாள்களில் சட்டமாக அமலுக்கு வந்துவிடும். எல்லாரும் ஜி.எஸ்.டி. மசோதாவை பண மசோதாவாக அறிமுகம் செய்வார் என்று எதிர்பார்த்த வேளையில், ஆதார் மசோதாவை பண மசோதாவாக அறிமுகம் செய்திருக்கிறார் ஜேட்லி.
 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்த ஆதார் மசோதாவுக்கு பா.ஜ.க. அன்றைய தினம் எதிர்ப்பு தெரிவித்திருந்தபோதிலும், தற்போது இதை நிறைவேற்றக் காரணம் - இத்திட்டத்தால் அரசு நிதி பெருமளவு வீணாதல் தடுக்கப்படும் என்கின்ற ஒரே நோக்கம்தான். மகாத்மா காந்தி ஊரக வேலைஉறுதித் திட்ட ஊதியம், எரிவாயு உருளைக்கான மானியம் ஆகியவற்றை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தியபோது, அரசுக்கு ஓராண்டில் மட்டுமே ரூ.14,000 கோடி மிச்சமாகியிருக்கிறது. இதன் அடிப்படைக் காரணம், ஆதார் அட்டைதான்.
 ஆதார் அட்டையில் போலிகள் தயாரிக்கும் வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. ஏனெனில், உயிரி அடையாளங்களை வைத்து, (கண் பாவை, விரல் ரேகை) ஆதார் அட்டை தயாரிக்கப்படுவதால், இதில் போலி அட்டைகள் உருவாக முடியாது. ஒவ்வொரு நபரும் பிரத்யேகமான உயிரி அடையாளங்களைப் பெற்றிருக்கிறோம். ரோஜா வனம் முழுதும் பூத்திருந்தாலும், ஒரு ரோஜாவைப் போல மற்றொன்று கிடையாது. இயற்கையின் படைப்பில் ஒன்று போல மற்றொன்று கிடையாது. படைப்பின் அற்புதம் இது.
 இந்த உயிரி அடையாளங்களை ரகசியமாக வைக்காமல் மற்றவர்களுடன் பகிர்வு செய்ய, கசிய வாய்ப்பு உள்ளது, அதனால் தனி மனித உரிமை பாதிக்கப்படுகிறது என்பதுதான் ஆதார் அட்டையை எதிர்ப்பவர்களின் குற்றச்சாட்டு. இதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும், அவ்வாறு நடக்காது என்று இந்தியாவில் யாருமே உறுதி கூற முடியாது. அமைச்சர் ஜேட்லியும்கூட, அவ்வாறு தகவல்கள் கசிந்தால் தண்டனை கடுமையாக இருக்கும் என்று மட்டுமே சொல்லியிருக்கிறார்.
 இந்த அளவுக்கு பயனுள்ள ஆதார் அட்டையைக் கட்டாயமாக்குதல் கூடாது என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு உள்ளதால், ஆதார் அட்டை கட்டாயம் என்பதை சட்டத்தின் வரையறைக்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
 வங்கியில் நேரடியாக மானியம் செலுத்துவதற்காக மட்டுமே ஆதார் கட்டாயம், அரசு சார்ந்த நிதிகள் பெறுவதற்கு மட்டுமே இது கட்டாயம் என்று தற்போது தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இனி ஆதார் அட்டை அனைத்து வகை பயன்பாட்டிலும் நிச்சயமாக கேட்கப்படும் ஒன்றாக மாறிவிடும். தற்போது அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் கட்டாயமாக ஆதார் அட்டை எண்ணைத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் முன்பதிவில்கூட ஆதார் எண் கேட்கப்படுகிறது. இன்றுவரை அது, விருப்பத்தேர்வு மட்டுமே. நாளை முதல் கட்டாயமாக மாற்றப்படலாம்.
 தற்போது ஆதார் அட்டையை 90% இளையோர் சமுதாயம் பெற்றுள்ளது. அதேபோன்று பள்ளிகளில்கூட ஆதார் அட்டைக்கான படம் எடுத்தல் நடத்தப்பட்டதிலும், பெற்றோர்களின் முயற்சியாலும் 60% சிறார்கள் ஆதார் அட்டை பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஆகவே, நாளடைவில் ஆதார் அட்டை என்பது, செல்லிடப்பேசி போல இன்றியமையாத ஓர் அடையாளமாக மாறிவிடும்.
 தமிழகத்தில், அனைத்து குடும்ப அட்டைகளும் அடுத்த ஓராண்டுக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த கால நீட்டிப்புக்கான புதிய தகவல் தொகுப்பில், குடும்பத் தலைவரின் ஆதார் அட்டையை ஒவ்வொரு பொதுவிநியோக மைய ஊழியரும் கேட்டு, பதிவு செய்கிறார். நாளை உணவுப் பாதுகாப்பு சட்டம் தமிழகத்தில் அமலாகும்போது, பொதுவிநியோகப் பொருள்களுக்கான மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதற்கான முன் தயாரிப்பு இது எனலாம்.
 பணப் பரிமாற்றம், மானியம் பெறுவது என எல்லாமும் ஆதார் அட்டையை மையப்படுத்தும் போக்கு வெகுவிரைவில் இந்தியாவில் பரவலாகிவிடும். தற்போது ரூ.2 லட்சத்துக்கு அதிகமாகத் தங்கம் வாங்கினால் பான் எண் கட்டாயம் என்பது போல, எந்தவொரு ரொக்கப் பரிவர்த்தனை சார்ந்த வியாபாரத்திலும் முதல்கட்டமாக ஆதார் அட்டையும் அதற்கு அடுத்த நிலையில் பான் எண்ணும் இடம்பெறும் நிலை விரைவில் வந்துவிடும்.
 2009-இல் முந்தைய மன்மோகன் சிங் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் கடுமையான எதிர்ப்பையும், விவாதத்தையும் எழுப்பிவரும் ஆதார் அட்டை மசோதா, பண மசோதாவாக நிறைவேற்றப்பட்டிருப்பதற்குக் காரணம், எதிர்க்கட்சிகள் அரசியல் காரணங்களுக்காக இந்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற அனுமதிக்காது என்பதுதான். அனைவரது கைகளிலும் செல்லிடப்பேசி வந்துவிட்ட பிறகும், தனி மனித சுதந்திரம் குறித்துப் பேசுவதில் அர்த்தமே கிடையாது. அதிகரித்துவரும் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருதி, இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் இதுபோல் அடையாள அட்டை தரப்படுவதும், ஏன் கண்காணிக்கப்படுவதும்கூட அவசியமாகிறது.
 இந்தியன் என்பதற்கான ஆதாரம்தான் ஆதார் அட்டை!
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.