கடனுக்காக விவசாயியை அடிப்பதா என்ற கேள்வி கேட்கும் சமூக வலைத்தளங்கள், உடனடி பகிர்வு, பதிவீடு என தங்கள் எதிர்வினையை முடித்துக்கொள்கின்றன. அரசியல்வாதிகள், அனைத்து விவசாயக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள். அரசு அவ்வாறு ரத்து செய்தாலும் இந்தக் கடன் தீராது. ஏனெனில், இந்த விவசாயி கடன் பெற்றிருப்பது தனியார் நிதிநிறுவனத்திடம். வாகனங்களுக்குக் கடன் கொடுக்கும் தனியார் நிதி நிறுவனங்களைப்போல, அடித்துப் பறிமுதல் செய்யும் அளவுக்கு அரசு வங்கிகள் கல்நெஞ்சம் கொண்டுவிடவில்லை. மல்லையாவை மட்டுமல்ல, அவர்கள் விவசாயிகளிடமும் இன்னமும் கரிசனத்தோடுதான் இருக்கிறார்கள். ஆனால், தனியார் நிதி நிறுவனங்கள்தான், சட்டத்துக்குப் புறம்பாக காவல் துறையை வைத்து வாகனங்களைப் பறிமுதல் செய்வதிலும், இன்னும் சில நேர்வுகளில் தனிப்பட்ட உள்ளூர் ரவுடிகளை வைத்து வாகனங்களைக் கைப்பற்றவும் செய்கின்றனர்.