நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

உண்மை சுடுகிறது!

சமீபத்தில் ஹரியாணாவில் நடந்த ஜாட் இனத்தவரின் இடஒதுக்கீட்டுக்கான போராட்டமும், அவர்கள் இடஒதுக்கீடு கோருவதற்கான காரணிகளும்கூட ஏறத்தாழ ஒன்றுதான். ஆனால், அந்தப் போராட்டத்தை முதல்வர் மனோகர்லால் கட்டர் கையாண்ட விதமும், அந்தப் போராட்டத்தை மறைமுகமாகத் தூண்டிவிட்டுப் பேரழிவு நடந்ததை வேடிக்கை பார்த்து ரசித்த காங்கிரஸ், இந்திய தேசிய லோக்தளத் தலைமைகளின் அரசியல் வக்கிரத்தனமும் வன்மையான கண்டனத்துக்குரியவை

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:40 pm

ஆசிரியர்

கடந்த மாதம் ஹரியாணாவில் நடைபெற்ற ஜாட் இனத்தவர்களின் போராட்டம் ஏதோ இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் என்பதுவரைதான் இந்தியாவின் ஏனைய பகுதியினருக்குத் தெரியும். அதற்குப் பின்னால் இருந்த அரசியலும், அதனால் ஏற்பட்ட இழப்புகளும் தில்லி, பஞ்சாப், ஹரியாணாவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
 மூன்று மாதங்களுக்கு முன்னால் பெய்த பேய்மழையால் சென்னை மாநகரம் வெள்ளத்தில் மூழ்கித் தத்தளித்ததையும், தமிழகத்தின் ஏனைய பகுதிகளுடனான தொடர்புகள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டு தவித்ததையும் புரிந்துகொள்ள முடியும். அது இயற்கைப் பேரழிவு. ஆனால், கலவரங்களும், போராட்டங்களும் அப்படிப்பட்டவையல்ல.
 ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான வன்னியர் சங்கம் இடஒதுக்கீட்டிற்காகப் போராடியபோது, சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டு, சென்னைக்கு வரும் வாகனங்களைத் தடுத்து நிறுத்தியது நினைவிருக்கும். சுமார் ஒரு வார காலத்திற்கு சென்னை மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டது. பால் இல்லை; உணவுப் பொருள்களுக்கும், காய்கறிகளுக்கும் தட்டுப்பாடு. வெளியூர் பயணிகள் சென்னையிலும், சென்னைவாசிகள் வெளியூரிலும் பயணிக்க வழியில்லாமல் தவித்தனர். ஆனாலும்கூட விமானமும், ஓரளவுக்கு ரயில்களும் இயங்கின. அன்றைய எம்.ஜி.ஆர். அரசும் சரி, போராட்டக்காரர்களின் மிரட்டலுக்குப் பணியாமல் மிகவும் சாதுர்யமாக அந்தப் போராட்டத்தைக் கையாண்டது.
 சமீபத்தில் ஹரியாணாவில் நடந்த ஜாட் இனத்தவரின் இடஒதுக்கீட்டுக்கான போராட்டமும், அவர்கள் இடஒதுக்கீடு கோருவதற்கான காரணிகளும்கூட ஏறத்தாழ ஒன்றுதான். ஆனால், அந்தப் போராட்டத்தை முதல்வர் மனோகர்லால் கட்டர் கையாண்ட விதமும், அந்தப் போராட்டத்தை மறைமுகமாகத் தூண்டிவிட்டுப் பேரழிவு நடந்ததை வேடிக்கை பார்த்து ரசித்த காங்கிரஸ், இந்திய தேசிய லோக்தளத் தலைமைகளின் அரசியல் வக்கிரத்தனமும் வன்மையான கண்டனத்துக்குரியவை. அரசியல் பொறுப்பற்றதனம் ஹரியாணாவில் நடந்தேறியது என்று வருங்காலச் சரித்திரம் இந்தச் சம்பவத்தை வர்ணிக்கக்கூடும்.
 தேசிய நெடுஞ்சாலை ஒன்று என்பது தலைநகர் தில்லியிலிருந்து, இந்திய } பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பஞ்சாப் மாநிலத்தின் அட்டாரி என்கிற நகரத்தை இணைக்கும் 456 கி.மீ. நீளமுள்ள ஆறுவழிச் சாலை. இதுவே தலைநகர் தில்லியை அடையும்போது எட்டு வழிச் சாலையாகி, தில்லியின் சுற்றுவழிப் பாதையாக மாறுகிறது. இந்தச் சாலை வழியாகத்தான் சண்டீகர், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர் போன்ற இடங்களிலிருந்து தில்லிவாழ் மக்களுக்குத் தேவையான பொருள்கள் வந்தாக வேண்டும்; அந்த ஊர்களுக்கு தில்லியிலிருந்து பயணித்தாக வேண்டும்.
 ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கடப்பாரைகளுடன் அந்த அற்புதமான ஆறு வழிச்சாலையைத் தகர்த்தெறிந்து எந்த வாகனமும் பயணிக்க முடியாமல் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி விட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் வன்னியர் போராட்டத்தில் மரங்களை வெட்டிப் போட்டவர்கள் சாலைகளைச் சிதைக்கவில்லை.
 அதுமட்டுமல்ல, தில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், ஹரியாணாவின் முக்கியத் தொழில் நகரங்களிலும் பல தொழிற்சாலைகள் தாக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன. வழிநெடுக உள்ள கடைகள், உணவு விடுதிகள், வீடுகள், வாகனங்கள், பெரிய வணிக வளாகங்கள் என்று தீயிட்டுக் கொளுத்தப்பட்டவை ஏராளம் ஏராளம். வெறிக்கூச்சலுடன் கும்பல் கும்பலாகப் போராட்டக்காரர்கள் தெருக்களை வட்டமிட்டபோது, பொதுமக்கள் பீதியில் உறைந்து முடங்கினார்கள்.
 இதையெல்லாம் வேடிக்கை பார்க்கக்கூடக் காவல் துறையினர் அங்கே இல்லை. பயந்துபோய் அவர்கள் ஒளிந்துகொண்டு விட்டனர். நாசவேலையில் ஈடுபடும் போராட்டக்காரர்களை விடியோ படம் எடுத்து அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றுகூட அவர்களுக்குத் தோன்றவில்லை. ஒரு கட்டத்தில், மாநில அரசு செயலிழந்ததைத் தாமதமாக உணர்ந்த மத்திய அரசு களமிறங்கி, போராட்டக்காரர்களின் காலில் விழுந்து, அவர்களது கோரிக்கையை ஏற்பதாக உறுதியளித்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
 அத்தனை தனியார் விமான நிறுவனங்களும் கூடுதல் விமானங்களை இயக்கின என்பது உண்மை. ஆனால், பயணிகளின் வசதிக்காக அல்ல, தங்கள் லாபத்துக்காக. அவசரநிலைக் காலகட்டத்தைப் பயன்படுத்தி விமானக் கட்டணத்தை ஏலமிட்டனர். சண்டீகருக்கு மூவாயிரம் ரூபாய் கட்டணம், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு ஏலமிடப்பட்டது. இது தனியார்மயத்தின் கோரமுகமல்ல; கையாலாகாத நிர்வாகத்தின் அசட்டுத்தனம்.
 தில்லிக்கு வரும் சாலைகள் அனைத்தும் முடக்கப்பட்டன என்பதுடன் நிற்கவில்லை போராட்டக்காரர்கள். தில்லிக்கு வரும் குடிநீர் குழாய்களைத் துண்டித்து முற்றிலுமாகத் தண்ணீர் கிடைக்காமல் செய்து விட்டனர். தண்ணீர் கால்வாய்கூட முடக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகைவரை தண்ணீர் இல்லாமல் தவித்தது. இதுபோன்ற சூழலில் தலைநகரத்தைப் பாதுகாக்க முன்னேற்பாடு நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்பது அப்போதுதான் புரிந்தது.
 இந்தியாவைக் கைப்பற்ற ராணுவ பலம் தேவையில்லை. அணு ஆயுதங்கள் அவசியமில்லை. நமது அரசியல்வாதிகளின் உதவியுடன், இதுபோலப் போராட்டத்தைத் தூண்டிவிட்டு, தலைநகர் தில்லியை முற்றுகையிட்டாலே போதும்! சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளாகியும் நமது தலைநகரம்கூடப் பாதுகாப்பானதாக இல்லை என்கிற உண்மை சுடுகிறது. ஹரியாணாவில் அரங்கேறியது பொறுப்பற்றத்தனத்தின் உச்சகட்டம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.