பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

கோ வாடீஸ்? (எங்கே போகிறோம்?)

கடந்த 1989-இல் தொடங்கி, இன்றுவரை நமது "நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் பெருமைப்படும் அளவில் இல்லை.

News image
Updated On :24 ஜனவரி 2024, 7:01 pm

ஆசிரியர்

கடந்த 1989-இல் தொடங்கி, இன்றுவரை நமது "நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் பெருமைப்படும் அளவில் இல்லை. செலாவணி செல்லாதாக்கப்பட்ட பிரச்னையை முன்வைத்து, அவையின் செயல்பாடுகள் அனைத்தும் முடக்கப்பட்டன. மசோதாக்கள் நிறைவேற்றம், கேள்வி நேரம், விவாதம் என்று நாடாளுமன்றம் எதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறதோ அது எதுவுமே நடைபெறவில்லை. கடந்த 15 ஆண்டுகளில் மிகக் குறைவான அலுவல்கள் நடைபெற்ற கூட்டத் தொடர் இதுவாகத்தான் இருக்கும். மக்களவையில் சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன என்றாலும், அவையும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் முடக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் செயல்பாடுதான் இப்படி என்றால், பல மாநில சட்டப்பேரவைகளின் நிலைமை இதைவிட மோசம். அந்தந்த மாநிலங்களுக்கு வெளியே அது தெரிவதில்லை. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எதிர்கொள்ள விரும்பாமல், அவர்களைக் கூண்டோடு வெளியேற்றுவது என்று ஆளும்கட்சியும், அதற்கு ஏற்றாற்போல அவையில் குழப்பம் விளைவிக்கும் எதிர்க்கட்சிகளும் சரிசமமான குற்றவாளிகள். இந்தப் போக்கு எல்லா மாநில சட்டப்பேரவைகளுக்கும் இன்னும் பரவிவிடவில்லை என்பது ஒருவகையில் ஆறுதல் என்றாலும், கடந்த பத்து நாள்களில், இந்தியாவின் வெவ்வேறு மாநில சட்டப்பேரவைகளில் நிகழ்ந்த சம்பவங்கள் வருங்காலம் குறித்த அச்சத்தைத் தோற்றுவிக்கின்றன.
ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையில், முதல்வர் வீரபத்ர சிங் பதவி விலகக் கோரி, எதிர்க்கட்சியான பா.ஜ.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது ஓர் உறுப்பினர் அவைத் தலைவரின் நாற்காலியில் அமர்ந்து போட்டி சபையை நடத்த முற்பட்டார். அத்தனை ஆளும் கட்சி உறுப்பினர்களும் செய்வதறியாது பார்த்துக் கொண்டிருக்க, அந்த உறுப்பினர் சபை கலைவதாக அறிவித்துவிட்டு, சக எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் அவையிலிருந்து வெளியேறினார். எதிர்க்கட்சி பா.ஜ.க.வினர் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியதைக்கூட மன்னித்து விடலாம், ஆனால் சபையின் மாண்புக்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்து செயல்பட முற்பட்டதை எப்படி நியாயப்படுத்த முடியும்?
ஹிமாச்சலப் பிரதேசத்தில் இப்படி என்றால், வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் இதைவிட மோசமான செயல்பாடு அரங்கேறி இருக்கிறது. திரிபுராவில் ஆட்சியில் இருக்கும் இடதுசாரிக் கூட்டணி அமைச்சரவையில் வனத் துறை அமைச்சராக இருக்கும் நரேஷ் ஜமாத்தியா பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருக்கிறார். உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி, அவை நடவடிக்கைகளை முடக்கினர்.
அப்போது, யாரும் சற்றும் எதிர்பாராமல் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் சுதீப்ராய் பர்மன் என்பவர், சுத்தியல் போலக் காட்சியளிக்கும் முத்திரைக் கோலை (மேஸ்) அவைத் தலைவர் ராமேந்திர சந்திர தேவநாத்திடமிருந்து பிடுங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தார். அவரைத் துரத்திக் கொண்டு சில ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பின்னால் ஓடினார்கள்.
இந்தக் கேலிக்கூத்தை, ஏனைய உறுப்பினர்கள் மட்டுமல்ல, பல்வேறு அலுவல்களுக்காக அங்கே வந்திருக்கும் பொதுமக்களும் அரசு ஊழியர்களும்கூட வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். திரிபுரா சட்டப்பேரவையின் நிகழ்ந்திருக்கும் இந்தக் கூத்து ஜனநாயகத்திற்கு ஏற்படுத்தி இருக்கும் இழுக்கு துடைக்க முடியாதது. திரிபுராவில் அவைத் தலைவரின் முத்திரைக் கோல் பறிக்கப்படுவது இது மூன்றாவது தடவை.
இவற்றையெல்லாம் விடப் பெரிய அவலம் பஞ்சாபில் நடந்திருக்கிறது. விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், பஞ்சாப் சட்டப்பேரவை திடீரென்று ஒரு நாளுக்கு மட்டும் கூட்டப்பட்டது. அந்த சிறப்புக் கூட்டத்தில் தேர்தலைக் குறிவைத்து ஒன்பது மசோதாக்கள் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டன.
அப்படி நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், பல்வேறு அரசுத் துறைகளில் தாற்காலிகமாக அல்லது தினசரி ஒப்பந்தத்தில் பணியாற்றும் 30,000 ஊழியர்களைப் பணிநிரந்தரம் செய்யும் மசோதாவும் ஒன்று. இதனால், அடுத்து அமைய இருக்கும் அரசுக்கு ஏற்படப் போகும் நிதிச்சுமை ரூ.2,438 கோடி. இதுகுறித்து எந்தவித விவாதமோ, அரசுத் தரப்பு விளக்கமோ கிடையாது.
திரிபுரா சட்டப்பேரவை 2011-2015-க்கு இடையேயான நான்கு ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 12.4 நாட்கள் மட்டுமே கூடியிருக்கிறது. இதில் ஆளுநர் உரை, இரங்கல் போன்றவையும் அடக்கம். ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை சராசரியாக ஆண்டொன்றுக்கு 31 நாள்கள் மட்டுமே கூடியிருக்கிறது. இதெல்லாம் ஏன், நன்றாக செயல்படும் கேரள சட்டப்பேரவையே ஆண்டொன்றுக்கு 46.7 நாள்கள்தான் சராசரியாகக் கூடியிருக்கிறது.
சட்டப்பேரவை, நாடாளுமன்ற செயல்பாடுகளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் இருப்பதற்குக் காரணம், நமது வாக்காளர்களிடையே விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதுதான். இத்தனைக்கும் மக்களவை, மாநிலங்களவை செயல்பாடுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அப்படி இருந்தும் மக்கள் இதுகுறித்து கவலைப்படாமல் இருப்பது நாம் இன்னும் மக்களாட்சித் தத்துவம் குறித்த புரிதலே இல்லாமல் இருப்பதைத்தான் காட்டுகிறது.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், எந்தவிதக் கேள்வியோ விமர்சனமோ கேட்கப்படாமல் ஆட்சி நடத்த அனுமதி என்கிற நிலைமையைத்தான் நமது அரசியல் கட்சிகள் விரும்புகின்றன. இதன் நீட்சி சர்வாதிகாரத்தில்தான் முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.