பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

தேவைதான் தேர்வு!

அடிக்கடி கல்விக் கொள்கையை மாற்றுவது

News image
Updated On :24 ஜனவரி 2024, 7:01 pm

ஆசிரியர்

அடிக்கடி கல்விக் கொள்கையை மாற்றுவது என்பது சரியில்லைதான். அதேநேரத்தில், கடைப்பிடிக்கப்படும் கல்வி முறையிலோ, கற்பித்தல் முறையிலோ தவறுகள் கண்டறியப்படும்போது, அந்தத் தவறுகள் திருத்தப்படுவதும் அவசியம்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தபோது, கல்விக் கொள்கையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்படி எட்டாம் வகுப்புவரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி, மாணவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே பத்தாம் வகுப்புத் தேர்வு என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த மாற்றங்கள் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன.
மாணவர்கள் படிப்பைப் பாதியிலே நிறுத்திவிடும் போக்கு அதிகமாகக் காணப்படுவதற்கு, ஆண்டுதோறும் தேர்வு நடத்தி அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவது முக்கியமான காரணம் என்று சில மனவியலாளர்கள் கருத்துத் தெரிவித்தனர். மேலும், தேர்வில் வெற்றி பெற முடியவில்லை எனும்போது மாணவர்கள் படிப்பையே நிறுத்திவிடுகிறார்கள் என்பது இன்னொரு காரணம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, தேர்வில் வெற்றி பெற முடியாமல் போனால், அந்தத் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவது தெரிய வந்தது. உலகிலேயே மிக அதிகமான மாணவர் தற்கொலைகள் இந்தியாவில் காணப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து மாணவர்களும் எட்டாம் வகுப்புவரை தடையில்லாமல் தேர்ச்சி பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பாதியில் படிப்பை நிறுத்தும் போக்கு சற்று குறைந்திருந்தது. அதேநேரத்தில், அவர்களது கல்வித் திறன் கணிசமாகக் குறைந்துவிட்டது. 2014-ஆம் ஆண்டுக்கான "ஏசர்' அறிக்கையின்படி, ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் 52 சதவீதம் பேர் இரண்டாம் வகுப்புப் பாடங்களைக்கூட சரியாகப் படிக்க முடியாதவர்களாக இருக்கும் நிலை காணப்படுகிறது. பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களில் 30 சதவீதம் பேர் தவறில்லாமல் தாய்மொழியோ, ஆங்கிலமோ எழுதவோ, கூட்டல், கழித்தல் உள்ளிட்ட அரிச்சுவடிக் கணக்குகள் போடவோகூட முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.
அனைவருக்கும் எட்டாம் வகுப்புவரை தேர்ச்சி என்கிற கொள்கையை மாற்ற வேண்டும் என்று கடந்த மே மாதம் மத்திய மனிதவள அமைச்சகத்திடம் 18 மாநில அரசுகள் கோரிக்கை வைத்தன. அதன் அடிப்படையில், மத்திய கல்வி ஆலோசனைக் குழு இது குறித்த பரிசீலனையை மேற்கொண்டது. இப்போது, அடுத்த கல்வியாண்டிலிருந்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின்கீழ் (சி.பி.எஸ்.இ.) நடத்தப்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்புத் தேர்வு மீண்டும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வோர் ஆண்டு இறுதியிலும் மாணவர்களின் கல்வித் திறனைச் சோதிப்பது என்பது இப்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது என்றாலும், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் தேர்வுகள் நடத்தப்படுவதில்லை. மேலைநாடுகளில் இதுபோன்ற முறைதான் பின்பற்றப்படுகிறது. இங்கே அது வெற்றியடையாமல் போவதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள்.
முதலாவது காரணம், மாணவர்களின் எண்ணிக்கை. அதிகமான மாணவர்களும், குறைவான ஆசிரியர்களும் காணப்படும் சூழலில் ஒவ்வொரு மாணவனின் கல்வித் திறனில் தனிக் கவனம் செலுத்தி மேம்படுத்துவது என்பது இயலாத ஒன்று. அதனால்தான் அனைவருக்கும் தேர்ச்சி என்கிற முறையில், இரண்டாம் வகுப்புப் பாடங்கள்கூடத் தெரியாத நிலையில் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் இருக்கும் நிலைமை ஏற்படுகிறது.
இரண்டாவதாக, ஆசிரியர்களின் தரம். ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசிரியர்கள் திறனாய்வுத் தேர்வில் 90 சதவீதத்தினர் தேர்ச்சி பெறுவதில்லை. ஆங்கில ஆசிரியர்கள் பலருக்கும் சரியாக ஆங்கிலம் பேசக்கூடத் தெரியாது என்பதுதான் எதார்த்த நிலைமை. தரமான ஆசிரியர்கள் இல்லாமல் தரமான கல்வி என்பது சாத்தியமில்லை. மாணவர்களுக்குத் தேர்வு கட்டாயப்படுத்தப்படுவதுபோல, ஆசிரியர்களும் திறன் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே பணியில் நியமிக்கப்படுவார்கள் என்கிற கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும்.
இப்போதைய தேர்வுத் தேர்ச்சி முறை மாற்றப்பட்டு, மாணவர்கள் புரிதலுடன் படித்துத் தெளிவுபெறும் முறைதான் விரும்பத்தக்கது. அதற்கு முன்னால், தரமான ஆசிரியர்கள், அதிக அளவிலான கல்விச்சாலைகள், குறைந்த அளவிலான மாணவர் - ஆசிரியர் விகிதம், போதுமான கட்டமைப்பு வசதிகள் போன்ற பல பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டாக வேண்டும். அதெல்லாம் இல்லாத நிலையில், தேர்வும் தேவையில்லை என்று முடிவெடுத்தால், மாணவர்கள் பெறும் பள்ளியிறுதிப் படிப்பு கல்விச் சான்றிதழ் வெறும் காகிதமாக இருக்குமே தவிர அதற்கு மரியாதை இருக்காது. மேலும், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்விக்கு தேர்வு மதிப்பெண்கள்தான் அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் முடிவைத் தொடர்ந்து ஏனைய கல்வி முறைகளும் பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு முடிவு கட்டும் என்று முந்தைய அரசு எதிர்பார்த்தது. ஆனால் அது நடக்கவில்லை. ஏறத்தாழ 50 மாநிலக் கல்வி வாரியங்களும், வேறு சில மத்திய கல்வி வாரியங்களும் வழக்கம்போல பள்ளி இறுதித் தேர்வு நடத்துவதைத் தொடர்ந்தன. அதனால், மத்திய இடைநிலைக் கல்வி வாரிய முறையில் படிக்கும் மாணவர்களில் 40 சதவீதம் பேர் தேர்வு முறையைத் தேர்ந்தெடுத்தனர். இதுவும்கூட, மீண்டும்
பத்தாம் வகுப்புத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டிருப்பதற்குக் காரணம்.
மேலைநாடுகளைப் பார்த்து நாம் இப்போதே சூடு போட்டுக் கொள்ள முயற்சிக்கக் கூடாது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் முடிவில் தவறில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.