தீர்ப்பாயம் தீர்வாகாது!
மத்திய அமைச்சரவை டிசம்பர் 15-ஆம் தேதி மாநிலங்களுக்கு இடையேயான, நதிநீர் பிரச்னைகள் சட்டம், 1956-இல் பல்வேறு மாற்றங்களை அறிவித்திருக்கிறது.


மத்திய அமைச்சரவை டிசம்பர் 15-ஆம் தேதி மாநிலங்களுக்கு இடையேயான, நதிநீர் பிரச்னைகள் சட்டம், 1956-இல் பல்வேறு மாற்றங்களை அறிவித்திருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று, பருவமழை, நீர்ப்பாசன வசதிகள், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் ஓட்டம் ஆகியன குறித்த தரவுகளையும் விவரங்களையும் சேகரிப்பதற்கு என்று ஒரு அமைப்பை ஏற்படுத்துவது என்பது. எப்போதோ செய்திருக்க வேண்டிய இந்த முடிவை, இப்போதாவது விழித்துக் கொண்டு மத்திய அரசு செய்ய முற்பட்டிருக்கிறதே என்பது வரை ஆறுதல்.
பல்வேறு நதிநீர் பங்கீடு குறித்த பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், இப்படியொரு அமைப்பு கட்டாயம் தேவை. பருவமழை அளவு, நதிநீர் அளவு குறித்த புள்ளிவிவரங்களையும், தரவுகளையும் சேகரிப்பதற்கு என்று ஒரு தனியான அமைப்பு இருப்பது, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அடிப்படைத் தேவையாக இருக்கும்.
மத்திய அமைச்சரவை எடுத்திருக்கும் இன்னொரு முக்கிய முடிவு, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகளை விசாரித்துத் தீர்ப்பளிக்க நிரந்தரமான அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவது என்பது. இப்போது, ஆங்காங்கே உருவாகும் நதிநீர் பிரச்னைகளைத் தீர்க்க அவ்வப்போது ஒரு நடுவர் மன்றத்தை ஏற்படுத்துவது என்பது வழக்கமாகி விட்டிருக்கிறது. இதுபோல நடுவர் மன்றங்களை ஏற்படுத்துவதும், அவற்றின் முடிவுகள் விமர்சனத்துக்கும், எதிர்ப்புக்கும் உள்ளாகி வருவதும் வழக்கமாகி விட்டது. இதுவரை நடுவர் மன்றங்கள் எந்தவொரு நதிநீர் பிரச்னைக்கும் சுமுகமாகத் தீர்வு கண்டதாகத் தெரியவில்லை.
உதாரணமாக, காவிரி நடுவர் மன்றத்தையே எடுத்துக் கொண்டால், தீர்ப்பை வெளியிட அது 17 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. அப்படியே தீர்ப்பளித்த பிறகும்கூட, பிரச்னை முடிவுக்கு வந்ததா என்றால் இல்லை. இன்னும் தீர்ப்பு நிறைவேற்றப்படாமல், உச்சநீதிமன்றத்தில்தான் இருக்கிறது.
மத்திய அரசு அறிவித்திருக்கும், நதிநீர் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கான தீர்ப்பாயம் என்பது எந்தவிதத்தில், தனித்தனியான நடுவர் மன்றத்திலிருந்து வேறுபடும் என்று தெரியவில்லை.
மத்திய அரசு ஏற்படுத்த இருக்கும் தீர்ப்பாயம், அந்தந்தப் பிரச்னைக்குத் தனித்தனியான அமர்வை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள். இதற்கும், இப்போதைய நடுவர் மன்றங்களுக்கும் என்ன வேறுபாடு?
அதிகரித்துக் கொண்டிருக்கும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டுப் பிரச்னைகளைப் பார்க்கும்போது, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்படும் தேசிய அளவிலான ஒரே தீர்ப்பாயம் எப்படி மூன்றாண்டுகளுக்குள், ஒரு பிரச்னையை விசாரித்துத் தீர்ப்பு வழங்க முடியும் என்று தெரியவில்லை. அப்படியே, அந்தத் தீர்ப்பாயம் முடிவை அறிவித்தாலும், அதுவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனும்போது, அப்படியொரு அமைப்பை ஏற்படுத்துவதால் என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது?
உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அதன்படி, அரசியல் சாசன பிரிவு 136-இன் கீழ், எந்தவொரு நதிநீர் பிரச்னை குறித்த நடுவர்மன்றத் தீர்ப்புக்கும் எதிராக எழுப்பப்படும் மேல் முறையீடுகளை விசாரிக்கத் தனக்கு அதிகாரம் உண்டு என்று தெளிவுபடுத்தி இருக்கிறது. நதிநீர் பிரச்னைகளை நேரடியாக விசாரிக்கத் தனக்கு அதிகாரம் இல்லையே தவிர, நடுவர்மன்றத் தீர்ப்புகள் குறித்த மேல் முறையீடுகளை விசாரிக்கும் உரிமை உண்டு என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு.
அதன்படி பார்த்தால், மத்திய அரசு அமைக்க இருக்கும் தீர்ப்பாயமும் சரி, அதற்கு முன்னால் அமையும் பிரச்னை தீர்வுக் குழுவும் சரி புதிதாக எந்தவித பலனையும் தந்துவிடப் போவதில்லை. இப்போதைய நதிநீர் பிரச்னைகள் குறித்த நடுவர்மன்றத் தீர்ப்புகளைப்போல, இந்தப் புதிய அமைப்பின் தீர்ப்பும் நீதிமன்றத்தில் முடிவில்லாத வாதப் பிரதிவாதங்களிலும், "வாய்தா'க்களிலும் சிக்குமே தவிர முடிவு எட்டப்படுவதற்கு உதவப் போவதில்லை.
கோதாவரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை (ஏப்ரல் 1969), கிருஷ்ணா நதிநீர் பிரச்னை (ஏப்ரல் 1969), நர்மதா நதிநீர் பிரச்னை (அக்டோபர் 1969), ரவிபியாஸ் நதிநீர் பிரச்னை (ஏப்ரல் 1986), காவிரி நதிநீர் பிரச்னை (ஜூலை 1990), இரண்டாவது கிருஷ்ணா நதிநீர் பிரச்னை (ஏப்ரல் 2004), வம்சதாரா நதிநீர் பிரச்னை (பிப்ரவரி 2010), மகாதாயி நதிநீர் பிரச்னை (நவம்பர் 2010) என்று மாநிலங்களுக்கு இடையேயான நடுவர் மன்றங்கள் அந்தப் பிரச்னைகளுக்கு எந்தவிதத் தீர்ப்பையும் அளிக்க முடியாத நிலையில், இப்போது தேசிய அளவிலான ஒரே தீர்ப்பாயம் அமைத்தாலும் எந்தவித முடிவையும் எடுத்துவிட முடியாது.
நதிநீர் நடுவர் நீதிமன்ற முடிவுகளும் சரி, உச்சநீதிமன்ற மேல் முறையீடு குறித்த தீர்ப்புகளும் சரி, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கும் நிலையில், கடைநிலை பயனுறு மாநிலங்களின் உரிமைக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்னைகளையே எடுத்துக்கொண்டால், நடுவர்மன்ற, உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றனவே. இதற்கு மத்திய அமைச்சரவையின் சட்டத் திருத்தம் என்ன தீர்வு கூறப்போகிறது?
தீர்ப்பாயங்களோ, தீர்ப்புகளோ நதிநீர் பிரச்னைகளுக்குத் தீர்வாகாது. தீர்ப்பை நிறைவேற்றுவதற்கும், நதியின் மேல்நிலை பயனுறு மாநிலங்களைத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கும் வழிமுறைகள் வகுத்துச் செயல்படுத்தாமல் இருக்கும்வரை, இதுபோன்ற முயற்சிகளால் எந்தவிதப் பயனும் இருக்கப் போவதில்லை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...