தவறான நேரம், தவறான முடிவு!
கோதுமை மீதான 10 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்து, யார் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் கோதுமையை இறக்குமதி செய்து கொள்ள வழிகோலி


கோதுமை மீதான 10 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்து, யார் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் கோதுமையை இறக்குமதி செய்து கொள்ள வழிகோலியிருப்பது, பரவலான விமர்சனத்திற்கும் கண்டனத்திற்கும் உள்ளாகியிருக்கிறது. வேளாண் அமைச்சகத்தின் தவறான திட்டமிடல்தான் அரசின் முடிவுக்குக் காரணம் என்று தோன்றுகிறது.
வெறும் 10 சதவீத இறக்குமதி வரியை 25 சதவீதமாக அதிகரித்ததும், பிறகு அதை மீண்டும் 10 சதவீதமாகக் குறைத்ததும், இப்போது வரியே கிடையாது என்று ரத்து செய்திருப்பதும் கோதுமை உற்பத்தி விஷயத்தில் வேளாண் அமைச்சகம் எந்த அளவுக்குக் குழம்பிப் போய், செய்வதறியாமல் திகைக்கிறது என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது. இந்த வரி மாற்றங்கள் அனைத்தும் கடந்த 500 நாட்களில் செய்யப்பட்டிருக்கின்றன.
கடந்த மார்ச் மாதமே 2015-16 நிதியாண்டிற்கான கோதுமை உற்பத்தி போதுமானதல்ல என்பது தெளிவாகத் தெரிந்தது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நிலவிய வறட்சியாலும், அதிகரித்த வெப்பத்தாலும், குளிர்கால மழை இல்லாமல் போனதாலும் இது தவிர்க்க முடியாதது என்பது அனைவருக்கும் தெரியும். தொடர்ந்து கொள்முதல் செய்யும்போது, கடந்த ஆண்டில் பெறப்பட்ட 28 மில்லியன் டன்னுக்கு பதிலாக 23 மில்லியன் டன் மட்டுமே கிடைத்தது எனும்போதே அரசு விழித்துக் கொண்டிருக்க வேண்டும்.
ஆனால், நமது மத்திய வேளாண் அமைச்சகம் கற்பனை உலகில் மிதந்தபடி இந்த ஆண்டுக்கான உற்பத்தி 93.82 மில்லியன் டன் என்று கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி அறிவித்தது. பிறகு மே 9-ஆம் தேதி மேலும் அதிகரித்து 94.04 மில்லியன் டன் என்று தெரிவித்தது. கடைசியில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி 93.50 மில்லியன் டன்தான் என்று மாற்றியது. அப்போதே, வல்லுநர்கள் சிலர் இந்த ஆண்டில் கோதுமை உற்பத்தி, 2014-15 ஆம் ஆண்டின் 86.53 மில்லியன் டன்னைக் கூட எட்டாது என்று எச்சரித்தனர். அதை வேளாண் அமைச்சகம் சட்டை செய்யாமல், மிக அதிகமான உற்பத்தியால் கோதுமை விலை குறைந்துவிடக் கூடாது என்கிற அனாவசிய அச்சத்தில் 25 சதவீத இறக்குமதி வரியை அறிவித்தது.
மே மாதம் வெளிச் சந்தையில் விலைகள் ஸ்திரப்பட்டுக் கொண்டிருக்கும்போது இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டிய நேரத்தில் 25 சதவீதமாக வரி அதிகரிக்கப்பட்டது. அப்போது வரியைக் குறைத்திருந்தால் விவசாயிகள் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். அதற்குள் அவர்களது விளைபொருளை விற்றிருப்பார்கள். அதுமட்டுமல்ல, போதிய இறக்குமதி வந்திருந்து, இப்போது காணப்படும் இறுக்கம் ஏற்பட்டிருக்காது.
அது போகட்டும். இப்போது விவசாயிகள் அடுத்த நடவுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும்போது, முதலில் 10 சதவீதமாகவும், இப்போது அதுவும் இல்லையென்றும் முடிவெடுத்திருப்பது, அரசின் சரியான புரிதல் இல்லாமையைத்தான் வெளிச்சம் போடுகிறது.
ஏனைய உணவுப் பொருள்களின் விலை கட்டுக்குள் இருக்கும்போது, கோதுமையின் விலை மட்டும் அதிகரித்து வருகிறது என்பது உண்மை. அடுத்த ஏப்ரல் மாதம் குறைவான விளைச்சலால் கோதுமை விலை மேலும் அதிகரித்துவிடக் கூடாது என்பதுதான் அரசின் அச்சத்துக்குக் காரணம். குறைந்தபட்ச ஆதார விலையின் மூலம் விவசாயிகளையும், இறக்குமதியால் குறைந்த விற்பனை விலை மூலம் பொதுமக்களையும் திருப்திப்படுத்தலாம் என்று கணக்குப் போடுகிறது அரசு.
அரசிடம் இருக்கும் கோதுமைக் கையிருப்பு கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பது என்னவோ உண்மைதான். இதனை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்குப் பார்வையுடன் நமது வேளாண் அமைச்சகம் சிந்தித்திருக்க வேண்டும். தொடர்ந்து இரண்டாண்டு வறட்சியின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இப்போது இறக்குமதி வரியைக் குறைத்துத் தங்கு தடையில்லாத கோதுமை இறக்குமதியை அனுமதித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
சர்வதேச அளவில், மிக அதிகமான விளைச்சலால் கோதுமை விலை சரிந்து விட்டிருக்கிறது. இப்போதே ஆஸ்திரேலிய கோதுமை இந்தியாவில் டன் ஒன்றுக்கு சுமார் 16,000 ரூபாய்க்கு, அதாவது உள்ளூர் கோதுமையைவிட 20 சதவீதம் விலை குறைவாகக் கிடைக்கிறது. இறக்குமதிக்கான வரியை முற்றிலுமாக அகற்றிவிட்ட நிலையில், இனி அமெரிக்கா, பிரான்ஸ், ரஷியா, உக்ரைன், ஆஸ்திரேலியா என்று பல நாடுகளிலிருந்தும் இந்தியாவில் கோதுமை வந்து குவியத் தொடங்கும். அங்கெல்லாம் அமோக விளைச்சல் ஏற்பட்டிருப்பதால் விலை கிடைக்காமல் கோதுமை எரிக்கப்படுகிறது.
ஏற்கெனவே செலாவணியைச் செல்லாததாக்கும் முடிவால் விவசாயிகள் பயிரிடவோ, உரம் வாங்கவோ முடியாமல் மிகுந்த இடர்பாட்டை எதிர்கொள்கிறார்கள். இந்த நிலையில் அவர்களது விளைபொருள்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய விலையும் கிடைக்காமல் போனால், அவர்களது நிலைமைதான் என்ன?
அரசியல் ரீதியாகப் பார்த்தாலும் இது ஒரு தவறான முடிவாகவே தெரிகிறது. இந்தியாவில் அதிக கோதுமை உற்பத்தி செய்யும் இரு மாநிலங்களான பஞ்சாபும், உத்தரப்பிரதேசமும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றன. அந்த மாநிலங்களின் விவசாயிகள் கோதுமை இறக்குமதியால் பாதிக்கப்பட்டால் அதன் விளைவுகள் பா.ஜ.க.வுக்கு பாதகமாக மாறக்கூடும்.
கடந்த ஒன்பது ஆண்டில் இல்லாத அளவு கோதுமை கையிருப்பு குறைந்துவிட்டது என்பதற்காக இறக்குமதிக்குக் கதவை திறந்துவிட்டிருக்கும் இந்த முடிவு, பொதுமக்களுக்கு நன்மையாகவே இருந்தாலும் விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதாக அமைந்துவிடக்கூடாது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...