

திட்டக் கமிஷனைக் கலைத்து விட்டு "நீதி ஆயோக்' என்கிற அமைப்பை ஏற்படுத்தியதுபோல இப்போது இந்திய மருத்துவக் கவுன்சிலைக் கலைத்துவிட்டு அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் என்கிற அமைப்பை ஏற்படுத்தும் முனைப்பில் இருக்கிறது நரேந்திர மோடி அரசு. நீதி ஆயோக்கின் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழுவில் பிரதமரின் கூடுதல் தனிச் செயலர் பி.கே. மிஸ்ரா, நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த், சுகாதாரத் துறைச் செயலர் பானு பிரதாப் சர்மா ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள்.
மருத்துவக் கல்வி குறித்த முறையான கட்டுப்பாடுகளும், வழிமுறைகளும் இந்திய மருத்துவக் கவுன்சிலால் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுதான் இப்படியொரு சிந்தனைக்குக் காரணம். மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிப்பதில் காட்டும் ஆர்வத்தை, மருத்துவர்களின் செயல்பாடுகள், நோயாளிகளின் பிரச்னைகளில் இந்திய மருத்துவக் கவுன்சில் காட்டவில்லை என்று கருத்துத் தெரிவித்திருந்தது உச்சநீதிமன்றம்.
தேசிய மருத்துவ ஆணையம், மருத்துவத் துறையின் ஒழுங்காற்றல் அமைப்பாக செயல்பட்டு, இந்திய மருத்துவக் கவுன்சில் இதுவரை ஆற்றியப் பணிகளையும், பொறுப்புகளையும் நிர்வகிக்கும். இந்த அமைப்பில், தலைசிறந்த மருத்துவர்களும் நிபுணர்களும் இடம் பெறுவார்கள் என்றும், அவர்கள் இந்தியாவின் மருத்துவக் கல்வி குறித்தும், தரமான மருத்துவம் வழங்கப்படுவது குறித்தும் சரியான, தெளிவான வழிகாட்டுதல்களை வழங்குவார்கள். அதன் மூலம் இந்தியாவின் மருத்துவக் கல்வி, சர்வதேசத் தரத்தில் அமையும் என்பது மத்திய அரசின் எதிர்பார்ப்பு.
அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழு இந்தியாவின் பிரபல மருத்துவர்கள், மருத்துவக் கவுன்சில் உறுப்பினர்கள், முன்னாள் சுகாதாரத் துறை செயலாளர்கள், பல்வேறு மாநிலங்களின் மருத்துவத் துறை நிபுணர்கள் ஆகியோரை எல்லாம் கலந்தாலோசித்திருக்கிறது என்பது உண்மை. இவர்களிடம் உலகத்தரமான, தொழில்முறையான நிர்வாகக் கட்டமைப்பை தேசிய மருத்துவ ஆணையத்தில் ஏற்படுத்துவது குறித்து விவாதித்து அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்திருக்கிறார்கள்.
இந்திய மருத்துவக் கவுன்சிலைக் கலைத்துவிட்டு அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்குவதற்கு மத்திய அரசின் தரப்பில் கூறப்படும் முக்கியமான காரணம், இப்போது மருத்துவக் கவுன்சிலின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதுதான். இந்திய மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்திருக்கும் மருத்துவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவர்கள்தான் இப்போது உறுப்பினர்களாக முடியும். இந்த முறையில், போட்டியிடத் தயாராக இல்லாத, திறமையான, பிரபலமான மருத்துவர்கள் மருத்துவக் கவுன்சிலில் உறுப்பினர்களாவதில்லை என்றும், அவர்களது சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போகிறது என்பதும்தான், மருத்துவக் கவுன்சிலைக் கலைக்கும் அரசின் முனைப்புக்குக் காரணம்.
இது வேடிக்கையான வாதம். பிரபல மருத்துவர்கள் தங்களது வருமான இழப்புக் கருதி தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பதும், அவர்களுக்கு மருத்துவத் துறையின் செயல்பாடுகள் குறித்து அக்கறை கிடையாது என்பதும்தானே உண்மை?
அரசு உருவாக்க இருக்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பதிலாக நியமிக்கப்பட இருக்கிறார்கள். இந்த ஆணையத்தில் 19 முதல் 20 உறுப்பினர்கள் இருப்பார்கள் என்றும், மருத்துவம் சாராத பொருளாதாரம், சட்டம் உள்ளிட்ட துறைகளிலிருந்தும் உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள் என்றும் தெரிகிறது. தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் மருத்துவக் கல்வி, முதுகலை மருத்துவக் கல்வி, மருத்துவ அங்கீகாரம் மற்றும் தகுதி நிர்ணயம், மருத்துவக் கல்லூரி அங்கீகாரம், மருத்துவர்களின் தொழில் நேர்மைக் கண்காணிப்பு என ஐந்து தனித்தனியான அமைப்புகள் செயல்படுமென்றும், அவை ஒவ்வொன்றும் முழுமையான சுதந்திரமும், அதிகாரமும் பெற்ற அமைப்புகளாக இயங்கும் என்று கூறப்படுகிறது.
மருத்துவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் தரமற்றவர்கள், தொழில் ரீதியாக அனுபவமும், திறமையுமற்றவர்கள் என்று சொல்லாமல் சொல்கிறது அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழுவின் அறிக்கை. இந்திய மருத்துவக் கவுன்சிலின் செயல்பாடுகள் சரியில்லை, அவர்கள் மருத்துவக் கல்வி குறித்துக் கவலைப்படாமல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கிறார்கள், மருத்துவர்
களின் சேவைக் குறைவு, தரக் குறைவு போன்றவை குறித்துக் கவலைப்படுவதில்லை என்பதெல்லாம் உண்மை. ஆனால், தேர்ந்தெடுக்கப்படாமல் நியமன உறுப்பினர்களைக் கொண்ட குழு மட்டும் திறமையாகவும், நேர்மையாகவும் செயல்படும் என்பது என்ன நிச்சயம்? அரசால் நியமிக்கப்படுபவர்கள் என்று சொல்லும்போதே, அங்கே அரசியல், செல்வாக்கு என்று வந்து விடுமே, அது குறித்து என்ன சொல்கிறது அரவிந்த் பனகாரியா குழு?
நியமன உறுப்பினர்களால் தேசிய மருத்துவ ஆணையம் அமையுமானால், அது பிரபல தனியார் மருத்துவமனை அதிபர்களுக்கும், அரசியல் தொடர்புள்ள மருத்துவர்களுக்கும், இவர்களது பின் துணையுடன் செயல்படும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும்தான் சாதகமாக இருக்கும். புதிய அமைப்புக்கு பதிலாக, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம், 1956-இல், மாற்றங்கள் ஏற்படுத்தி அரவிந்த் பனகாரியா குழு பரிந்துரைப்பது போல சில நியமன உறுப்பினர்களை இந்திய மருத்துவக் கவுன்சிலில் சேர்த்துக் கொள்வதும், அந்தக் குழு பரிந்துரைத்திருப்பது போல ஐந்து தனித்தனி அமைப்புகளின் உதவியுடன் செயல்படுவதும்தான் புத்திசாலித்தனமாக இருக்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு : மோடி

எய்ம்ஸ் பணிகளை முடக்கும் திமுக: அண்ணாமலை! | செய்திகள்: சில வரிகளில் | 25.02.26

”அரசியல்வாதிகளுக்கு பாடமாக விளங்கியவர்!” நல்லகண்ணு குறித்து முதல்வர் முக ஸ்டாலின்!
வீடியோக்கள்

எய்ம்ஸ் பணிகளை முடக்கும் திமுக: அண்ணாமலை! | செய்திகள்: சில வரிகளில் | 25.02.26
தினமணி வீடியோ செய்தி...

காதல் ரீசெட் ரிபீட் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
#t20wc | குரூப் 2-வில் இருந்து அரையிறுதிக்குள் நுழையப்போவது யார்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

