தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஆர்வக் கோளாறின் எதிர்வினை!

நேபாள நிலநடுக்கத்தின்போது உதவி செய்வதற்காக அங்கு வந்திருந்த இந்தியா உள்ளிட்ட 34 நாடுகளின்

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:26 am

ஆசிரியர்

நேபாள நிலநடுக்கத்தின்போது உதவி செய்வதற்காக அங்கு வந்திருந்த இந்தியா உள்ளிட்ட 34 நாடுகளின் மீட்புக் குழுக்களும் தங்கள் நாடு திரும்பலாம் என்று நேபாள அரசு உதவி செய்ய வந்தவர்களின் முகத்தில் அடித்தாற்போலக் கூறியிருப்பது சற்று மிகையான எதிர்வினைதான். அந்த நாட்டுக்கு ஏற்பட்ட அழுத்தம் அத்தகையது என்பதை உணர்ந்து கொண்டால் மட்டுமே அவர்களது மனநிலையைப் புரிந்து கொள்ள முடியும்.
 "சர்வதேச மீட்பு நடவடிக்கை நெறிமுறைப்படி 7 நாள்களுக்குத்தான் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்தக் கால அளவு முடிந்துவிட்டதால் வெளிநாட்டு மீட்புக் குழுக்களை நாடு திரும்பக் கூறியுள்ளோம்' என்று நேபாள அரசு கூறினாலும், இதுவரை எந்தவொரு நாட்டிலும், நிலநடுக்கம் அல்லது ஆழிப்பேரலை மீட்புப் பணிகளில் இத்தகைய காலவரையறையை யாரும் பொருள்படுத்தியதில்லை. "இந்தியாவே திரும்பிப் போ' என்ற சுட்டுரை (1,76,515) வலம் வந்ததும், இந்தியா ஆதிக்கம் செய்ய முனைகிறது என நேபாள எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டும்தான் இத்தகைய கசப்பான முடிவை எடுக்கும் கட்டாயத்துக்கு நேபாள அரசை உள்படுத்தியது.
 இந்தச் சுட்டுரையில் 70% நேபாளத்திலிருந்து பகிர்ந்து கொள்ளப்பட்டவை அல்ல. மின்அலை கோபுரங்கள் சரிந்து, இணைய வசதிகள் கிடைக்காத சூழலில், உணவுக்கும், குடிநீருக்கும் திண்டாடிக் கொண்டும், காணாமல் போன உறவுகளைத் தேடிக் கொண்டுமிருக்கும் நேபாள மக்களுக்கு இத்தகைய சுட்டுரைகளை அனுப்ப நேரமும் இல்லை. இந்த மோசமான சூழலை சாதகமாகப் பயன்படுத்தி சுட்டுரை உருவான பகுதிகள் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சுட்டுரையிலும் வலைதளத்திலும் இடம்பெற்ற பல தகவல், படங்கள் பொய் என்றாலும், பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே.
 இந்தியா இதற்கெல்லாம் மறுப்பு சொல்லிக் கொண்டிருப்பதைவிட, அடுத்து நடக்க வேண்டிய பணிகளில் கவனம் செலுத்தியது. ஆகவே இந்தச் சுட்டுரை, வலைதளங்களுக்கு அதிக கவனம் தரவில்லை. நேபாளத்துக்கு மிக அருகில் உள்ள நாடு என்பதால் நிலநடுக்கம் நேரிட்ட ஆறு மணி நேரத்தில் இந்தியப் பேரிடர் மீட்புப் பணிக் குழு காத்மாண்டு சென்றுவிட்டது என்பதை நேபாள அரசு இப்போதும்கூட நன்றியுடன் நினைவுகூர்கிறது. வெளிநாட்டு மீட்புக் குழுக்கள் தங்கள் நாடு திரும்பலாம் என்று சொன்னபோது அது இந்தியாவைக் குறிவைத்து அல்ல என்றும் நேபாளத்தின் இந்தியத் தூதர், இந்திய வெளியுறவுச் செயலரை நேரில் சந்தித்து தெளிவுபடுத்தியுள்ளார். ""இனி இடிபாடுகளை அகற்றி, புதிய கட்டடங்களை உருவாக்கும் நிவாரணப் பணிகளுக்கே முன்னுரிமை. இதற்கான தொழில்நுட்ப உதவியை இந்தியாவிடமிருந்துதான் நாங்கள் பெற இருக்கிறோம்'' என்றும் கூறியிருக்கிறார்.
 இந்தியப் பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் மட்டுமே தற்போது திரும்பத் தொடங்கியுள்ளன. இந்திய ராணுவமும், இந்திய விமானப் படையின் 13 ஹெலிகாப்டர்களும் இன்னமும் அங்கேயே இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இடிபாடுகளை அகற்றவும், புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் தேவையான இயந்திரங்களை இந்தியாவிடம்தான் கேட்டுள்ளனர். நேபாளத்துக்கு இந்தியா உறுதுணையாகத் தொடர்ந்து இருக்கும் என்று பிரதமர் மோடியும் உறுதிப்படுத்தியுள்ளார். நம்மிடம்தான் அவர்களும் உதவியை கேட்கத் துணிவார்கள்.
 இப்படி ஒரு கசப்பான சூழல் உருவானதற்கு இந்திய காட்சி ஊடகங்களும் ஒரு காரணம். பாகிஸ்தான் சுட்டுரைகளில் குறிப்பிட்டதைப் போல, இந்த நிலநடுக்கத்தை ஏதோ சினிமா படப்பிடிப்பு போல இந்திய ஊடகங்கள் காட்டிக் கொண்டிருந்தன. அவர்களது துன்பத்தைக் காட்டிலும், இந்தியாவின் பெருமை முந்திக் கொண்டதுதான் இந்த ஒளிபரப்பின் குறைபாடு. இந்திய காட்சி ஊடகங்களின் ஆர்வக் கோளாறும் அனுபவ முதிர்ச்சியின்மையும்தான் உதவி செய்யப் போனவர்களை உபத்திரவமான நிலைமைக்குத் தள்ளியது.
 நேபாளத்தை நட்பு நாடு என்று நாம் சொல்லிக் கொண்டாலும், கடவுச்சீட்டு இல்லாமல் இந்தியர்கள் நேபாளம் சென்றுவர முடியும் என்றாலும், அவர்களது துன்பத்தைவிட நம்முடைய பெருமை விஞ்சி நிற்பதை அவர்கள் விரும்பவில்லை. எந்த சுயமரியாதையுடைய நாடும் விரும்பாது. போதாததற்கு, பாகிஸ்தான், காஷ்மீர் பகுதிகளில் உள்ள இந்தியாவுக்கு எதிரான சிந்தனைப் பரப்புரைக்கு நேபாள அரசு அடிபணிய வேண்டியதாயிற்று.
 நேபாளத்தை இந்தியர்கள் எப்போதுமே தாழ்வாகவே மதித்து வருகிறார்கள் என்ற வருத்தம் பல காலமாக நேபாள மக்களிடம் ஊறிக்கிடக்கிறது. நேபாளி என்றால் இந்தியாவில் காவல்காரன் என்கின்ற அளவுக்குத்தான் மரியாதை தரப்படுவதை அவர்கள் வெறுத்தார்கள். நேபாளத்திலுள்ள லும்பினியில் பிறந்தவர் கெüதம புத்தரான சித்தார்த்தன். ஆனால், பெüத்தத்தின் மொத்தப் பெருமையையும் நாம் புத்த கயைக்கே தந்தோம்.
 நதிகள் மற்றும் புனல்மின் ஒப்பந்தங்களில்கூட இந்தியாவுக்குத்தான் அதிக ஆதாயமே தவிர நேபாளத்துக்கு அதிக ஆதாயம் இல்லை என்பதாக அங்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றன. தங்களை இரண்டாம்பட்ச மனிதர்களாகவே இந்தியா நடத்துகிறது என்ற தாழ்வு மனப்பான்மை இருக்கின்ற சூழலில், இவ்வாறான பேரிடர் காலத்தில் இந்தியப் பெருமைக்கே முன்னுரிமை என்றால், எதிர்ப்புகள் எழுந்ததில் வியப்படைய ஒன்றுமில்லை.
 வலது கை கொடுப்பது இடது கைக்குக்கூடத் தெரியக்கூடாது என்பார்கள். இனி இத்தகைய நேர்வுகளில் ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதற்கு இது ஒரு பாடம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.