ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மனை மற்றும் அடுக்கக வணிக மசோதாவில் தற்போதைய பா.ஜ.க. அரசு சில திருத்தங்கள் செய்துள்ளது. "இது வீடு வாங்குவோருக்குப் பாதகமாகவும், கட்டுமான நிறுவனங்களுக்குச் சாதகமாகவும் அமைந்திருக்கிறது, புதிதாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவில் பல நல்ல அம்சங்களை நீர்த்துப் போகச் செய்துள்ளனர், மசோதாவில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் செய்துவிட்டனர்' என்றும் பொத்தாம் பொதுவாக காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது, அவரது நிர்வாக அனுபவமின்மையையும், அரசியல் முதிர்ச்சி இன்மையையும்தான் காட்டுகிறது.
இதே விவகாரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் அஜய்
மாக்கன் குறிப்பிடும்போது, பா.ஜ.க. அரசு 118 திருத்தங்களைச் செய்துள்ளது என்று குறிப்பிட்டு, மூன்று முக்கிய திருத்தங்கள் நுகர்வோருக்குப் பாதகமானது என்கிறார். அதாவது, பயன்பாட்டுப் பகுதியில் (கார்ப்பட் ஏரியா) சுவர் அளவையும் கணக்கில் சேர்க்க அனு
மதித்துள்ளனர், ஒப்படைப்புக் காலம் தொடர்பான விதிமுறைகள் நிறுவனங்களுக்குச் சாதகமானதாக மாற்றப்பட்டுள்ளன; அடுக்ககம் கட்டும் நிறுவனங்கள் வரைபடத்தில் திருத்தங்கள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன என்பது போன்ற காரணங்களை அவர் முன்வைக்கிறார். ஆனால் இருவருமே, இந்த மசோதாவின் பல திருத்தங்கள் முந்தைய மன்மோகன் சிங்கின் அரசால் 2009-இல் தாக்கல் செய்யப்பட்டு, நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டபோது, அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே செய்யப்பட்டுள்ளன என்பதை வசதியாக மறந்து (மறைத்து) விடுகின்றனர்.
அஜய் மாக்கன் தெரிவிக்கும் மூன்று கருத்துகளும் கட்டுமான நிறுவனங்களுக்குச் சாதகமாகத் திருத்தப்பட்டுள்ளன என்று சொல்வதைக் காட்டிலும், கட்டுமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி, அதில் உள்ள நியாயமான அம்சங்களை
ஏற்றுக்கொண்டு திருத்தப்பட்டவை என்பதுதான் உண்மை. இவை காங்கிரஸ் அரசே ஆட்சியில் தொடர்ந்திருந்தாலும் செய்திருக்க வேண்டிய திருத்தங்களே.
அடுக்ககம் வாங்குவோர் பயன்படுத்தும் பகுதிக்கு மட்டுமே
பத்திரப்பதிவுக் கட்டணம் செலுத்தும் நடைமுறை தற்போது இல்லை. மேலும், கட்டடம் இல்லாத பகுதியை அடுக்கக எண்ணிக்கைக்கு ஏற்ப சமமாகப் பிரித்து அதற்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும். ஆகவே, இந்தப் புதிய நடைமுறையில் தங்களுக்கு நட்டம் ஏற்படாத வகையில் திருத்தம் வேண்டும் என்று கட்டுமான நிறுவனங்கள் கோரிக்கை வைத்ததை ஏற்க மறுப்பது நியாயமில்லை.
முந்தைய மசோதாவில், ஒரு கட்டுமான நிறுவனம் கட்டுகின்ற தனி வீடுகள் அல்லது அடுக்ககங்கள் கொண்ட திட்டத்துக்கு எவ்வளவு பணத்தை - முன்பணமாகவோ மொத்தமாகவோ - பெறுகிறதோ அதில் 70 சதவீதத்தை தனிக் கணக்கில் வைக்க வேண்டும். அந்தத் தொகையை கட்டுமானப் பணிக்காக மட்டுமே எடுக்க வேண்டும். இதில் முறைகேடு கண்டறியப்பட்டால் திட்ட மதிப்பில் 5% அபராதம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. 70% பணத்தையும் கட்டுமானத்துக்காக மட்டுமே ஒதுக்கிவிட்டால், மீதமுள்ள 30% தொகையில் நடைமுறைச் செலவுகளை எதிர்கொள்ளவும் மனைகள் வாங்கவும் இயலாமல் போகும் என்று கட்டுமான நிறுவனங்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, இந்த 70 சதவீதத்தை தற்போது 50 சதவீதமாகத் திருத்தியுள்ளார்கள்.
முன்பணமாகப் பெறும் பணத்தில் 70% தனிக் கணக்கில் வைத்துவிட்டு, சொந்தப் பணத்திலோ, கடன் வாங்கியோ அடுக்ககம் கட்ட பெரு நிறுவனங்களால் மட்டுமே முடியும். அதை நடை
முறைப்படுத்துவதுதான் பெரு முதலாளிகளுக்கும், முன்னணி கட்டுமான நிறுவனங்களுக்கும் சாதகமானதாக இருக்குமே தவிர, புதிய நிபந்தனை அல்ல. சிறு சிறு கட்டுமான நிறுவனங்களுக்கு சாதகமாகத் திருத்தப்பட்டுள்ள, குறிப்பிடும்படியான ஒரேயொரு திருத்தம் இதுமட்டுமாகவே இருக்கும். இதில் குறை காண்பதற்கு ஏதுமில்லை.
அடுக்ககம் அல்லது வீடுகளில் முன்பு இருந்த குறிப்பிட்ட வசதிகளை மாற்றவோ, வடிவங்களை மாற்றவோ கூடாது என்ற விதிமுறை நீக்கப்பட்டுள்ளது என்று அஜய் மாக்கன் தெரிவித்துள்ளார். இந்த விதிமுறை நீக்கப்படவில்லை. மாறாக, அத்திட்டத்தில் வீடு வாங்கும் நுகர்வோரில் மூன்றில் இரண்டு பங்கு பேர் ஒப்புக்கொண்டால், மனைகள் மற்றும் அடுக்கக ஒழுங்காற்று ஆணையத்தில் தெரிவித்து, அவர்கள் திருத்தங்களை முறைப்படுத்திக் கொள்ளலாம் என்பதே புதிய விதிமுறை.
புதிய திருத்தத்தின்படி, தவறுகள், ஏமாற்று வேலைகளுக்கு
கட்டுமான நிறுவனங்கள் மட்டுமன்றி இடைத்தரகர்கள்கூட தண்டிக்கப்படுவார்கள்.
அரசியல்வாதிகளின் துணையோடும், பங்குதாரராகவும் கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் பல லட்சம் கோடி ரூபாயை அன்னிய நேரடி முதலீடாக மனை, அடுக்கக வணிகத்தில் கொட்டவிருக்கின்றன. இத்தகைய சூழலில் அடுக்ககம், மனை வணிக ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்படுவதும், அதில் பதிவு செய்தவர்கள் மட்டுமே இத்தொழிலை நடத்த முடியும் என்பதும் ஒவ்வொரு திட்டத்தையும் ஆணையத்திடம் தனித்தனியாகப் பதிவு செய்து ஆவணங்கள் முறையாகக் கொடுத்த பிறகே விளம்பரம் செய்ய முடியும் என்பதும் வீடு வாங்குவோருக்கு மிகவும் சாதகமான அம்சங்கள். வீடு வாங்குவோர் ஏமாற்றப்பட்டிருப்பின், ஆணையத்திடம் முறையிடலாம். 60 நாள்களில் அதன் நடுவர் மன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்கும்.
அடங்காத குதிரைக்கு கடிவாளம் போடும் நேரத்தில், லாடம் கட்டாமல் கடிவாளம் போடக் கூடாது என்று சொல்வதில் என்ன லாபம்? முதலில் கடிவாளம் போடவிடுங்கள். பிறகு எப்போது வேண்டுமானாலும் லாடம் கட்டலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

நோய்நாடி நோய்முதல் நாடி...

குடிநீா் கேட்டு உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கனிவான இதயம்... துணிச்சலான சிந்தனை
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

