2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

உழுதவன் கணக்குப் பார்த்தால்...

ராஜஸ்தான் மாநிலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களைப் பார்வையிட்டபோது பலத்தமழை, புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்துவது குறித்து

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:03 am

ஆசிரியர்

ராஜஸ்தான் மாநிலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களைப் பார்வையிட்டபோது பலத்தமழை, புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்துவது குறித்து மாநில அரசுகளுடன் கலந்து பேசி, முடிவு காணப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருக்கிறார்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநிலப் பேரிடர்கால நிவாரண நிதியிலிருந்து பயிரின் வகைப்பாடு, பாதிப்பின் அளவு இவற்றுக்கு ஏற்ப விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. மானாவாரிப் பயிர் என்றால் ஹெக்டேருக்கு ரூ.4,500, பாசன சாகுபடி என்றால் ரூ.9,000, மா, தென்னை, முந்திரி போன்ற நிலைத்த பயிர்களுக்கு ரூ.12,000 என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இதே அளவுகோலின்படி விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைப்பதில்லை. காரணம், இழப்பை மதிப்பீடு செய்யும்போது,  குறைத்தே மதிப்பிடுகிறார்கள்.

பயிர் பாதிப்பின் அளவைத் தீர்மானிப்பதென்பது அதிகாரிகளின் ஆதிக்கமாக இருப்பதால், இதில் விவசாயிகளுக்கேற்பவும், அரசியல் அழுத்தங்களுக்கு ஏற்பவும் மதிப்பீடு மாறுகிறது. பேரிடர் கால இழப்பீட்டில் முழுமையாக இழப்பீடு வழங்குவதென்பது சாத்தியமே இல்லை. இழந்தவன் சொல்லும் கணக்கு எப்போதுமே உயர்வாகத்தான் இருக்கும். இருப்பினும் நடைமுறைக்கு இயலாதபடி இழப்பீட்டுத் தொகை அமைகின்றன என்பதுதான் உண்மை நிலை.

இழப்பீட்டுத் தொகையை உயர்த்துவது என்பது இன்றியமையாதது. அத்துடன் இந்த இழப்பீடுகளைப் பயிர்வாரியாக எவ்வாறு கணக்கிட வேண்டும் என்பதற்கு அரசு ஒரு துல்லியமான மதிப்பீடு அட்டவணையை உருவாக்கி, அதன் விவரம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தெரியும்படி செய்ய வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் தாங்கள் ஏமாற்றப்படவில்லை என்று  ஆறுதல் அடைவார்கள்.

அதேவேளையில், விவசாயிகளுக்கான தேசியக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டிய அவசியமும் உருவாகியிருக்கிறது. விவசாயிகளின் குறைகளைக் களையும் நோக்கோடு அமைக்கப்பட்ட விவசாயிகளுக்கான தேசிய ஆணையம் 2007ம் ஆண்டு அளித்த அறிக்கையில், இந்திய வேளாண்மையை உற்பத்தி சார்ந்ததாக இல்லாமல், வருவாய் சார்ந்ததாக மாற்ற வேண்டும்; இதற்கேற்ப வேளாண் கொள்கை அமைய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது. ஆனால் இதுவரை அது நடைமுறைக்கு வரவே இல்லை. விவசாயியின் உற்பத்திக்கும் வருவாய்க்கும் தொடர்பே இல்லாத நிலை நீடிக்கிறது.

ஒரு குவிண்டால் நெல்லுக்கான ஆதார விலை ரூ.1,400. தமிழ்நாடு அரசின் ஆதார விலை ரூ.70. மொத்தம் ரூ.1,470. அதாவது ஒரு கிலோ நெல் விளைவிக்க ஆகும் செலவு ரூ.14.70 என்கிறார்கள். ஆனால் அதே நெல், உமி நீக்கப்பட்ட பின்னர், கிலோ அரிசி ரூ.45க்கு விற்கப்படுகிறது. 200% லாபம்! இதே ஒரு கிலோ நெல் ரூ.22.50-க்கு கொள்முதல் செய்யப்பட்டாலும் அரிசி வியாபாரிக்கு 100% லாபம் கிடைக்குமே! ஏன் விவசாயிக்கு மட்டும் குறைத்து மதிப்பிடப்படுகிறது?

விவசாய உற்பத்திச் செலவு அனைத்துமே உயர்ந்துவிட்டன. உரம், பூச்சிகொல்லி மருந்துகள், விதை, சாகுபடி செலவு, அறுவடைச் செலவு, களத்திலிருந்து வீட்டுக்கு அல்லது கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு செல்லும் வாடகை என எல்லாமும் கூடிக்கொண்டே இருக்கின்றன. உழுதவன் கணக்குப் பார்த்தால் என்றில்லை, பார்க்காமலேயே ஒன்றும் இருக்காது என்பதை உணர முடியும். விவசாயிகளின் வேளாண் செலவு மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறது. இதில் விவசாயியின் தனிப்பட்ட உழைப்பு, அந்த வேளாண் நிலத்தின் மதிப்பு ஆகியவை கணக்கில் கொள்ளப்படுவதில்லை.

விவசாயிகளுக்கான தேசிய ஆணையம் தனது பரிந்துரையில், விவசாயத்தை வருவாய் சார்ந்ததாக மாற்ற வலியுறுத்தி இருக்கிறது. உற்பத்திச் செலவின் 50% தொகையைக் கூட்டி, ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று வேளாண் அறிஞர் எம்.எஸ். சாமிநாதன் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இந்த ஆணையம் தனது பரிந்துரையில் விவசாயக் கடன் 4% வட்டியில் வழங்க வேண்டும் என்றும், பண்ணை சாரா தொழில்களாக அவர்கள் உற்பத்தி செய்யும் சாகுபடியை மதிப்பூட்டும் தொழில்களில் அவர்களே ஈடுபடும் நிலை உருவாக வேண்டும் என்றும்கூட குறிப்பிட்டிருந்ததாக அவர் கூறியிருந்தார்.

நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நிலை இதுவென்றால், கரும்புச் சாகுபடி செய்வோரின் நிலை இன்னும் மோசம். அவர்கள் விளைவித்துத் தரும் கரும்புக்கு முழுத் தொகையையும் ஆலைகள் உடனே கொடுப்பதில்லை. இத்தனைக்கும், சர்க்கரை ஆலைகள் அனைத்துமே லாபத்தில்தான் இயங்குகின்றன. இருப்பினும்கூட விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை தராமல் இழுத்தடிக்கிறார்கள். சர்க்கரையைக் காட்டிலும், சாராய உற்பத்திக்கு அடிப்படையான மொலாசஸ் மூலம் சர்க்கரை ஆலைகள் ஈட்டும் லாபம் தனிக் கணக்கு. அதில் தங்களுக்கும் பங்கு தர வேண்டும் என்றும் விவசாயிகள் கோரி வருகின்றனர். அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

எந்த மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை எடுத்துக்கொண்டாலும், சர்க்கரை ஆலைகள் பணம் பட்டுவாடா செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இல்லாமல் இல்லை.

விவசாயிகளும் எல்லாவிதமான போராட்டங்களையும் நடத்திப் பார்க்கிறார்கள். ஆட்சியர்களும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள். ஆனால் எதுவுமே நடப்பதில்லை.

 அரசு ஊழியர்களும் வங்கி ஊழியர்களும் இரண்டு நாள் சேர்ந்தாற்போல வேலைநிறுத்தம் செய்தால் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படுகிறது. ஆனால் விவசாயி என்னதான் கத்தினாலும் அழுது புரண்டாலும் ஒன்றும் விளைவதில்லை. ஆனாலும் அவன் விளைவித்துக்கொண்டே இருக்கிறான். அடுத்தவர் உண்பதற்காக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.