அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய தொழிலதிபர் ரத்தன் டாடா, "பெரு நிறுவன சமூகப் பங்களிப்புத் திட்டத்தில் (கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிடி) நிதி செலவிடப்படும் விதத்தைக் கண்காணிக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் தேவை. பல நிறுவனங்கள் பணத்தை வீணடிக்கின்றன. சிலர் இந்தப் பணத்தை மீண்டும் தங்களுக்கே எடுத்துக் கொள்கின்றனர்' என்று தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு மத்திய அரசின் அறிவிப்புப்படி, ஆண்டுக்கு ரூ.5 கோடி நிகர லாபம் ஈட்டுகிற அல்லது ஆண்டுக்கு ரூ.1,000 கோடி விற்றுமுதல் (டர்ன்ஓவர்) நடைபெற்றுள்ள நிறுவனங்கள் தங்களது நிகர லாபத்தில் 2 சதவீதத்தை பெரு நிறுவன சமூகப் பங்களிப்புக்காக ஒதுக்கீடு செய்வது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகையில் வெறும் 5% தொகை மட்டுமே மனித உழைப்புக்கான ஊதியமாகச் செலவிடப்பட வேண்டும். மற்ற தொகை முழுவதும் அந்த நிறுவனத்தால் மாசுபட்ட சுற்றுச்சூழலை மேம்படுத்துதல், கல்வி உதவித் தொகை, மருத்துவ உதவித் தொகை, கழிப்பறை கட்டுதல், சாலைவாழ் மக்களுக்கான இரவு உறைவிடம் (நைட் ஷெல்டர்), முதியோர் இல்லம் போன்றவற்றை உருவாக்கித் தருதல் ஆகிய சமூகப் பங்களிப்புக்கு பயன்படுத்த வேண்டும். இந்தத் தொகை, தங்கள் நிறுவன ஊழியர்கள், அவர்களின் குடும்ப நலனுக்காக செலவிடப்படுதல் கூடாது. அரசியல் கட்சிகளுக்கோ அல்லது அரசியல்வாதிகளுக்கோ செலவிடக் கூடாது.
இத்தனை நிபந்தனைகள் இருந்தாலும் இது முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. மேலும், இந்தத் தொகை எவ்வாறு செலவிடப்பட்டது என்பதைக் கண்காணிப்பதற்கான நெறிமுறைகளும் இல்லை. பல நிறுவனங்கள் இந்தப் பணத்தை வீணடிக்கின்றன என்று சொல்வதைக் காட்டிலும், இதை முறைகேடுகளுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.
இந்தியாவில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள், அரசு - தனியார் வங்கிகள், நவரத்னா நிறுவனங்கள் உள்பட ஆண்டுக்கு ரூ.5 கோடி நிகர லாபம் ஈட்டும் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. ஆனால், இவர்கள் எவ்வாறு தங்கள் சமூகப் பங்களிப்பைச் செய்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரியாது. இது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுவதும் இல்லை.
சமூகப் பங்களிப்புத் தொகையை, இந்தியாவில் செயல்படும் சேவை அமைப்புகளுக்கு வழங்கலாம் என்ற விதியைப் பலரும் தவறாகப் பயன்படுத்துகின்றனர். பெரு நிறுவனங்கள் சமூகப் பங்களிப்புத் தொகையை செலவிடுவதற்காக ஒரு குழுவை நியமித்து அதன் பொறுப்பில் விட்டுவிட வேண்டும் என்பது அரசின் நிபந்தனை.
ஆனால், இந்தக் குழுவில் உள்ள பல அதிகாரிகள் தங்கள் உறவினர்களைக் கொண்டு சேவை அமைப்புகளைத் தொடங்குதல் அல்லது சேவைத் திட்டங்களை நிறைவேற்றும் முகவர்களாக நியமித்தல் ஆகியவற்றின் மூலம், சமூகப் பங்களிப்பு நிதியின் பெரும் பகுதியை சுய லாபத்துக்காகத் திருப்பிவிடுகின்றனர். பயனாளிகள் யார்? எந்தெந்த நிறுவனம் எத்திட்டத்தைச் செயல்படுத்தியது? அந்த நிறுவனம் கிடைக்கப் பெற்ற தொகையை எவ்வாறு செலவிட்டது? எந்த விவரமும் யாருக்கும் தெரியாமலேயே போய்க் கொண்டிருக்கிறது.
அதிகபட்சமாக, பெரு நிறுவனங்களின் சமூக சேவையை நாம் வெளிப்படையாகப் பார்க்கும் இடங்கள் சாலை நடுவே பூங்காத் திடல்கள்தான். பராமரிப்பு என்ற விளம்பரப் பலகையில் பெரு நிறுவனத்தின் பெயர் இருக்கும். அருகே சிஎஸ்ஆர் என்று குறிப்பிட்டிருப்பார்கள்.
நவரத்னா நிறுவனங்கள் ஒன்றில், சமூகப் பங்களிப்பு நிதி செலவிடும் குழுவிடம் மருத்துவம், கல்வி உதவிக்காக அளிக்கப்பட்ட மனுக்களில் பாரபட்சம் காட்டப்பட்டு, குழு உறுப்பினர்களுக்கு வேண்டியவர்கள் மட்டுமே நிதியுதவி பெற்றதாகவும், இதில் மோசடிகளும் நடந்திருப்பதாகவும் புகார் எழுந்தது. ஆனால், இது யாருடைய கவனத்தையும் பெறாமல் அடங்கிப் போனது. இத்தகைய சமூகப் பங்களிப்பு நிதியை அரசியல்வாதிகளும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்குவதே இல்லை. ஆகவே, தொழிலதிபர் ரத்தன் டாடா சொல்வதைப் போல, இந்தத் தொகை செலவிடும் விதத்தைக் கண்காணிக்கும் நெறிமுறைகள் அவசியம்.
அரசு - தனியார் வங்கிகள் அனைத்துமே 2014-15ஆம் நிதியாண்டில் குறைந்தது ரூ.1,000 கோடி முதல் ரூ.13,000 கோடி வரை நிகர லாபம் ஈட்டியுள்ளன. மற்ற பெரு நிறுவனங்களையும் கணக்கில் கொண்டால் பல ஆயிரம் கோடி ரூபாய், சமூகப் பங்களிப்புக்காக ஒதுக்கப்பட்டாக வேண்டும்.
தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை வசதிகளை உருவாக்க நாடு முழுவதும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும்கூட, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லாத அவலம் தொடர்கிறது. இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு வங்கி, தனது சமூகப் பங்களிப்புத் தொகை முழுவதையும் தமிழ்நாட்டுப் பள்ளிக் கழிப்பறைகள் திட்டத்துக்காக ஒதுக்கினாலும் போதும், அனைத்து மாணவர்களும் கழிப்பறை வசதி பெறுவர்.
சேவை அமைப்புகளுக்குப் பணத்தைக் கொடுக்காமல், அந்தப் பெரு நிறுவனத்தையே நேரடியாக அரசின் திட்டங்களில் பங்கேற்கச் செய்வதாலும், நிதி எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை வெளிப்படையாக அறிவிக்கச் செய்வதாலும் இத்திட்டத்தின் நோக்கம் ஓரளவு முழுமையாக, முறைகேடு அதிகமின்றி நிறைவேற உதவும்.
பெரு நிறுவன சமூகப் பங்களிப்புத் திட்டம் என்பது நிதியாதாரம் இல்லாததால் அரசால் செய்ய முடியாத சமூகப் பணிகளை பெரு நிறுவனங்களை ஏற்றுக் கொள்ளச் செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. நோக்கம் நல்லதுதான். செயல்பாடுதான் சரியில்லை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

