2015-16க்கான நெல் கொள்முதல் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு, தற்போது ஒரு குவிண்டால் சாதாரண ரகம் ரூ.1,410 என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதாவது, சென்ற ஆண்டு குறைந்தபட்ச ஆதரவு விலையைக் காட்டிலும் 3.6% உயர்வு.
÷நெல்லுக்கு மிகவும் குறைவாக விலை நிர்ணயம் செய்திருக்கிறார்கள் என்றும், நடைமுறையில் உற்பத்திச் செலவையும், உரம், விவசாயக் கூலி உயர்ந்திருப்பதையும் அரசு கணக்கில் கொள்ளவில்லை என்றும் விவசாயச் சங்கங்கள் பலவும் வேதனையுடன் அறிக்கை வெளியிட்டுள்ளன.
÷2012-13ஆம் ஆண்டுக்கான நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.1,250 ஆக (முந்தைய ஆண்டு ரூ.1,080) உயர்த்தப்பட்டது மட்டுமே அதிகபட்சமாக அளிக்கப்பட்ட விலை. அதாவது 15.7%. அத்துடன் சரி. அதன் பிறகு, நெல்லுக்கு ஆண்டுதோறும் அதிகபட்சமாக 4 சதவீதத்துக்கு மேல் விலை கூட்டப்படவில்லை.
÷ஒரு விவசாயி 100 கிலோ நெல் உற்பத்திக்கு ஆகும் செலவு, விவசாயியின் உழைப்புக்கான கூலி ஆகியவற்றைத் தீர்மானித்து வரும் தொகையில் மேலும் கூடுதலாக 50% சேர்த்து நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை, எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரை எதையுமே எந்த அரசும் பொருள்படுத்துவதில்லை.
÷உற்பத்திச் செலவு உயர்ந்து கொண்டே இருக்கிறது. விவசாயத் தொழிலாளர் கூலி உயர்ந்து கொண்டே இருக்கிறது. உரம் விலையும் குறையவில்லை. 2012-ஆம் ஆண்டு தேநீர்க் கடையில் ஒரு கோப்பை தேநீர் விலை ரூ.4 ஆக இருந்தது. இப்போது ரூ.8 ஆக உயர்ந்துள்ளது. விலை உயர்வு கடந்த நான்கு ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துவிட்டபோதிலும், ரூ.160 மட்டுமே நெல் விலை கூடியுள்ளது. அதாவது, 12.8% மட்டுமே அதிகரித்துள்ளது.
÷பொதுச் சந்தையில், சாதாரண ரக அரிசியின் விலை ஒரு கிலோ ரூ.45. அதாவது, நூறு கிலோ அரிசி விலை ரூ.4,500. நெல்லுக்கு கிடைக்கும் விலையைக் காட்டிலும் மூன்று மடங்காக இருக்கிறது. அரிசி வியாபாரிகள் தொடர்ந்து லாபம் காண்கிறார்கள். நெல் விவசாயிகள் தொடர்ந்து குறைந்த விலைக்கு விற்று உழைப்பைத் தானமாகத் தருகிறார்கள். காவிரிப் பிரச்னையால் குறுவை சாகுபடியை விட்டுவிடும் நிலைமை ஒருபுறம் இருந்தாலும், எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து நெல்லை விளைவித்தால் வெறும் லாபத்தின் விளிம்பை மட்டுமே பார்க்க முடிகிறது.
÷தமிழக அரசு வழக்கம் போல இந்த ஆண்டும் மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் கூடுதலாக (போனஸ்) ரூ.50 (சன்ன ரகத்துக்கு ரூ.70) அறிவிக்கும். ஆனால், மாநில அரசுகள் நெல், கோதுமை கொள்முதலில் இத்தகைய போனஸ் அறிவிப்பு செய்வதற்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. மாநிலத்தின் பொது விநியோகத்துக்கு எந்த அளவுக்கு அரிசி தேவையோ அந்த அளவுக்கு மட்டுமே மத்தியத் தொகுப்புக்காக இந்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்யும். போனஸ் விலை மாநில அரசின் நிதிச் சுமை. ஆகவே, கூடுதலாக போனஸ் தொகை அறிவிக்கும் வாய்ப்பு குறைவு.
÷நெல் சாகுபடி செய்யும் விவசாயிக்கு நெல்லுக்கான உரிய விலை கிடைக்காதது ஒரு புறம் இருக்க, நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் அநீதியையும் அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக, விவசாயச் சங்கங்கள் பலவும் கூறிவரும் புகார் இது:
÷நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ மூட்டைகளாக கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு மூட்டைக்கு ரூ.20 கையூட்டு என அதிகாரிகள் நிர்ணயிக்கிறார்கள். இந்த ஆண்டு ரூ.30 என்று சொல்லப்படுகிறது. அத்தோடு, ஒவ்வொரு மூட்டைக்கும் கூடுதலாக 2 கிலோ சேர்த்து அளக்கிறார்கள். அதாவது 42 கிலோ.
÷இந்த இனாம் நெல் அளவு 40 கிலோவை எட்டியதும் அதை ஒரு மூட்டையாக கணக்கிட்டு அவர்களே பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இந்த முறைகேட்டில் நெல் கொள்முதல் மையத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளி முதல் உயர் அதிகாரி வரை பங்கு உண்டு என்று விவசாயச் சங்கங்கள் புகார் கூறுகின்றன.
÷தஞ்சை பகுதியில் மட்டும் சுமார் 6 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது என்றால், இதன்மூலம் கொள்முதல் நிலையத்தில் உள்ளவர்கள் ரூ.100 கோடி தனியாக சம்பாதிக்கிறார்கள் என்று விவசாயச் சங்கங்கள் கணக்கு சொல்கின்றன. நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடு புல்லுக்கும் ஆங்கே பொசியும். புல்லர்களுக்கும் பொசியும் போலும்!
÷இந்தப் புகாரில் உண்மை இல்லாமல் இருக்காது. அவர்கள் சொல்லும் தொகை மாறுபடக் கூடுமே தவிர, எடையைக் கூடுதலாகப் பெறுவதும், லஞ்சம் கேட்பதும், மறுக்கும் விவசாயி கொண்டுவரும் நெல் மூட்டைகளை எடை போடாமல் இழுத்தடிப்பதுமான பல அவலங்கள் அரங்கேறுவதும் உண்மையே.
÷இந்த நிலையை எவ்வாறு மாற்றுவது என்பது குறித்து விவசாய அமைப்புகளுடன் தமிழக அரசு கலந்து பேச வேண்டும். எந்தெந்த அதிகாரிகள் சென்ற ஆண்டு பயனடைந்தார்கள் என்பதை அறிவதும், அவர்கள் மீது விவசாயிகள் தரும் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதும் இத்தகைய முறைகேட்டை பெருமளவு குறைக்கும்.
÷நெல் கொள்முதல் விலையை மத்திய அரசு மேலதிகமாக உயர்த்தித் தராத நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்றினாலும் போதும். விவசாயிகள் தமிழக அரசுக்கு நன்றிக் கடன் பட்டவர்களாக இருப்பார்கள்.
÷இப்படியே போனால் நரேந்திர மோடி அரசு நிலம் கையகப்படுத்தும் மசோதா எதுவும் கொண்டு வர வேண்டிய அவசியமே இல்லை. விவசாயிகள் பயிர் செய்வதை விட்டுவிட்டுக் கிடைத்த விலைக்கு நிலத்தை விற்றுவிடத் தயாராகி விடுவார்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

