அமெரிக்காவில் தொழில்புரியச் செல்லும் இந்தியர்களுக்கான எச்1பி விசா தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கவலைகளைக் கருத்தில் கொண்டு, வேண்டிய விதித் தளர்வுகள் செய்யப்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதி கூறியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் பென் றோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பணியாற்றிய இந்தியத் தூதரக அலுவலர் தேவயானி கோபர்கடே முதலாக, அமெரிக்காவில் கிளை வைத்திருக்கும் தமிழக சங்கிலித்தொடர் ஓட்டல் உள்பட, பலரையும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது எச்1பி விசா. இதில் விதித் தளர்வுகள் தேவையென்றாலும்கூட அமெரிக்கா காட்டும் கடுமைக்கு காரணம் இல்லாமல் இல்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
2012-ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் பணிபுரிய எச்1பி விசா பெற்றவர்கள் 1.36 லட்சம் பேர். விசா புதுப்பித்தோர் 2.60 லட்சம் பேர். ஆக, சுமார் 4 லட்சம் பேர் அமெரிக்காவில் எச்1பி விசா பெற்று பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஒரு லட்சம் பேர் இந்தியர்கள். அவர்களில் பாதிப் பேர் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவோர். ஆகவே, இந்த விதித் தளர்வுகளை இந்தியர்களுக்காக கேட்டுப் பெறும் கடமை நமக்கு உள்ளது.
குறிப்பிட்ட "திறன் சார்ந்த தொழில்'களுக்காக தேவைப்படுகிறவர்கள் என்ற கட்டாயத்தின் பேரில் எச்1பி விசா (பணி அனுமதி) வழங்கப்படுகிறது. இவ்வாறு வருவோர் தங்களை பணிக்கு அழைக்கும் நிறுவனத்தின் பொறுப்பில்தான் இருக்க வேண்டும். பணி அனுமதி கேட்டபோது தெரிவித்த திறனுறு தொழில் தவிர்த்து வேறு தொழில்களில் ஈடுபடக் கூடாது. இவர்களுக்கு, அதே தொழிலில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கர்களுக்கு என்ன சம்பளமோ அதே சம்பளத்தை அந்த நிறுவனம் வழங்க வேண்டும். பணி அனுமதி பெற்றவர்கள் தங்கள் மனைவியையும் 21 வயதுக்கு மிகாத குழந்தைகளையும் உடனுறைபவர்களாக அழைத்துச் செல்லலாம். ஆனால், அவர்கள் அமெரிக்காவில் பணிபுரிய முடியாது.
இந்தப் பணி அனுமதியில், முதல் மோசடி ஊதியத்தில்தான் நடக்கிறது. தேவயானி கோபர்கடே தன் வீட்டுப் பணிப்பெண்ணுக்கு குறைந்த ஊதியம் வழங்கினார் என்ற குற்றச்சாட்டைப்போல, மிகப்பெரிய கணினி நிறுவனங்கள்கூட தங்கள் ஊழியர்களை அமெரிக்காவுக்கு பணி விசாவில் மூன்று ஆண்டுகளுக்கு அனுப்பி, ஆனால் நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தில் பாதியைத்தான் கொடுக்கிறார்கள்.
அமெரிக்காவில் கொடுக்கப்படும் அந்தப் பாதிச் சம்பளமே, இந்தியாவில் அதே தொழில் செய்பவருக்குக் கிடைக்கும் சம்பளத்தில் மூன்று, நான்கு மடங்கு அதிகம் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், அதற்காக இந்த சம்பள மோசடியை நியாயப்படுத்த முடியாது. இதில் சம்பந்தப்பட்ட கணினி நிறுவனங்கள் மட்டுமல்ல, இடைத்தரகர்களும் அந்த ஊழியரின் உழைப்பை மூலதனமாக்கி பயனடைகிறார்கள். இத்தகைய மோசடி காரணமாகத்தான் கடந்த இரு ஆண்டுகளாக, தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த இந்திய நிறுவனங்கள் விண்ணப்பித்த எச்1பி விசாக்களில் பாதிக்குப் பாதி மறுக்கப்பட்டன.
அமெரிக்காவில் வேலை செய்யும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கே இந்தக் கதி என்றால், சிங்கப்பூர், மலேசியாவுக்கு முகவர்கள் மூலம் செல்லும் சாதாரணத் தொழிலாளர்களின் நிலைமை பரிதாபத்திலும் பரிதாபகரமானது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். சில முகவர்கள் இத்தொழிலாளர்களின் ஏடிஎம் அட்டையை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். அரசு நிர்ணயித்த சம்பளத்தை வங்கிக் கணக்கில் போட்டுவிட்டு அதில் பாதியை சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள் உரிய நிறுவனத்திற்கே திருப்பிக் கொடுத்துவிடுகிறார்கள். அவர்களுக்கான கமிஷனையும் எடுத்துக்கொள்கிறார்கள். இதுபோல அமெரிக்காவிலும் நடந்துவிடக் கூடாது என்பதால்தான் சம்பள விவகாரத்தைப் பொருத்தவரை அமெரிக்கா கடுமையாக இருக்கிறது.
பிரச்னை அதுவல்ல, குறிப்பிட்ட திறன் சார்ந்த தொழில் வல்லுநர் என்பதை ஒரேயொரு தொழிலோடு நிறுத்தாமல், சில துணைத் தொழில்களைச் செய்யவும் அமெரிக்கா அனுமதிக்க வேண்டும். ஒரு தோசை மாஸ்டர், ஒரு நாளைக்கு அதே ஓட்டலில் காசாளராக பணியாற்றினால் அதை வேறு தொழிலாகக் கருதுவதும் நடவடிக்கை மேற்கொள்வதும் மிகையானது.
ஒரு குறிப்பிட்ட தொழில் நிபுணத்துவத்திற்காக அவருக்கு பணி அனுமதி அளிக்கப்பட்டாலும், அவர் அதுதொடர்பான வேறு பணிகளையும் மேற்கொள்ளலாம் என்கிற சலுகைகளை அமெரிக்கா அரசு கொடுக்க முன்வர வேண்டும். அதேபோன்று, பணி விசா பெற்றுச் செல்வோருடன் செல்லும் மனைவி அல்லது கணவரும் தொழில் வாய்ப்பு கிடைத்தால், அதைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு எச்1பி விசாவில் பணிபுரியச் செல்பவர்களில் சிலர் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் செயலில் ஈடுபட்டிருப்பதை அமெரிக்க அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்தியாவில் அரசியல்வாதிகளும், உயரதிகாரிகளும் தங்களது லஞ்சப் பணத்தை ஹவாலா மூலம் அமெரிக்காவில் எச்1பி விசாவில் பணிபுரியும் சிலரது கணக்கில் போடுவதும், அதையே அன்னிய முதலீடு என்கிற பெயரில் இந்தியாவுக்கு திரும்பக் கொண்டுவந்து வெள்ளை சொத்தாக மாற்றுவதும் கடந்த 10 ஆண்டுகளாக நடப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
எச்1பி விசா விவகாரத்தில் இந்தியா மிகவும் எச்சரிக்கையாக, இவர்களது பணி, சம்பளம் ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும். பணி அனுமதியில் செல்பவர்கள் என்ன வேலை செய்கிறார்கள், என்ன சம்பளம் பெறுகிறார்கள், அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பும் தொகை அவர்களது பணிக்கு ஏற்றதாக இருக்கிறதா என்பதை அமெரிக்க அரசுடன் இணைந்து கண்காணிப்பது இன்றியமையாதது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை பூட்டி சீல் வைப்பு - மூன்றடுக்கு பாதுகாப்பு

காரைக்குடியில் வாக்குகள் எண்ணும் மையத்துக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

சிறுகம்பையூா் சாலை சேதம்: பொதுமக்கள் அவதி

தொண்டியில் சரக்கு வாகனம் மோதியதில் மின் கம்பங்கள் சேதம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

