மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

அதிபரும் பிரதமரும்!

ஊடகங்களில் பரவலாகக் குறிப்பிடப்படுவதுபோல, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்திய விஜயம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:30 am

ஆசிரியர்

ஊடகங்களில் பரவலாகக் குறிப்பிடப்படுவதுபோல, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்திய விஜயம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் சந்தேகமில்லை.

முதல் முறையாக அமெரிக்க அதிபர் ஒருவர் இந்தியக் குடியரசுதின அணிவகுப்பில் கலந்து கொள்கிறார். இந்தியா விஜயம் செய்யும் ஏழாவது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. இந்தியாவுக்கு இரண்டு முறை விஜயம் செய்திருக்கும் ஒரே அமெரிக்க அதிபரும் பராக் ஒபாமாதான். இப்படி அமெரிக்க அதிபரின் அரசுமுறைப் பயணம் பற்றிப பல தகவல்களைத் தர முடியும்.

இந்திய அமெரிக்க உறவில் கடந்த கால் நூற்றாண்டு காலமாகவே நெருக்கம் அதிகரித்து வந்திருக்கிறது என்றாலும்கூட, இரண்டு நாடுகளுக்கு இடையே ராஜாங்க ரீதியிலான இறுக்கம் மட்டும் தளராமலேதான் இருக்கிறது. இந்திய சந்தையைப் பயன்படுத்த அமெரிக்காவும், அமெரிக்காவின் மூலம் பயனடைய இந்தியாவும் அவசரப்பட்டாலும்கூட, அது அவ்வளவு சுலபமாக சாத்தியப்படக் கூடியதல்ல. அமெரிக்காவுக்கு இருக்கும் சில நிர்பந்தங்களும் இந்தியாவுக்கு இருக்கின்ற நடைமுறைச் சிக்கல்களும்தான் அதற்குகாரணம்.

இந்திய அமெரிக்க வர்த்தகம் இப்போது ஆண்டுக்கு 100 பில்லியன் டாலராக இருந்து வருகிறது. இதை 500 பில்லியன் டாலராக இலக்கை உயர்த்த அதிபர் ஒபாமாவும், பிரதமர் மோடியும் ஆசைப்படலாமே தவிர, அது எளிதில் சாத்தியமல்ல. இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அமெரிக்கச் சந்தையில் அதிகரித்த வரவேற்பு வேண்டும் என்கிற பிரதமர் மோடியின் கோரிக்கையை அதிபர் ஒபாமாவால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமை. வெளிநாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஊக்கமளிப்பது, நுழைவு அனுமதி மற்றும் வேலைசெய்ய அனுமதி (விசா) போன்ற விஷயங்களில் அதிபர் ஒபாமாவின் நிலைப்பாடு அதை ஏற்றுக்கொள்ள அனுமதிக்காது.

இந்திய அமெரிக்க நட்புறவு ஒப்பந்தம், பாதுகாப்பு ஒப்பந்தத்தை அடுத்து பத்தாண்டுகளுக்கு நீட்டிப்பது, ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பில் ஒத்துழைப்பு, ராணுவ விமானங்கள் தயாரிப்பு என்று பல ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றிலும் மிகவும் முன்னுரிமை அளிக்கப்பட்டது அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் இருந்துவந்த முட்டுக்கட்டைகளை அகற்றுவதுதான்.

மன்மோகன் அரசுடன் செய்துகொண்ட இந்த ஒப்பந்தம், இழப்பீடு தொடர்பான நிர்வாகப் பிரச்னைகளால் செயல்படுத்தப்படாமல் முடங்கி விட்டிருந்தது. இப்போது, இந்தியாவும் அமெரிக்காவும் சுமுகமான தீர்வை எட்டியிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களின் நலன் தொடர்பான எந்தவொரு பிரச்னையும் தீர்க்கப்படவில்லை. சூரிய மின்சக்தி தொடர்பான இந்திய முயற்சிக்கு நிதியுதவி தருவதாக அமெரிக்க அதிபர் உறுதி அளித்திருக்கிறார் என்றாலும் குறிப்பிட்டு இவ்வளவு நிதி என்றெல்லாம் எந்தவித வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை.

பிற நாடுகளுடனான உறவு பற்றி அதிபர் ஒபாமாவும் பிரதமர் மோடியும் பெரிய அளவில் விவாதித்து முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் இரண்டு நாடுகளும் உறுதி தெரிவித்தன என்பதுதவிர குறிப்பிடும்படியாக எந்தவித செயல்திட்டமும் தீட்டப்படவில்லை.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் தாங்கள் எடுக்கும் ராஜதந்திர முடிவுகள் அனைத்துக்கும் அடித்தளமாகத் திகழ்வது சீனா பற்றிய கவலையாகத்தான் இருக்க முடியும்.

அதிபரும் பிரதமரும் தனிப்பட்ட முறையில் சீனா பற்றிக் கருத்துப் பரிமாறிக் கொண்டார்களா என்று தெரியாது. ஆனால், சீனா பற்றிய எந்தவித குறிப்போ, அறிவிப்போ இருதரப்பு அறிக்கைகள் எதிலுமே இல்லை.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தியாவுக்கு அமெரிக்காவின் உறவும், நெருக்கமும் அவசியத் தேவை. இன்றைய உலக நடைமுறையும் ஒரு தேசத்தின் பலம் அணுஆயுதங்களிலோ, ராணுவ பலத்திலோ இல்லை. பொருளாதார வலிமைதான் ஒரு தேசத்தின் மிகப்பெரிய பலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கின்றது.

இந்தியாவை வல்லரசாக்க முற்படுவது என்பது இருக்கட்டும். அடிப்படைத் தேவைகளையும், கட்டமைப்பு வசதிகளையும் பெருக்குவது என்பதேகூட அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளின் துணையும், உதவியும், ஒத்துழைப்பும் இல்லாமல் சாத்தியம் அல்ல.

அமெரிக்காவுடனான நட்புறவை சீனாவே நாடுகிறது எனும்போது, இந்தியா பின்தங்கிவிட முடியாது. உலகிலேயே பழைமையான ஜனநாயக நாடான அமெரிக்காவும், உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும் இயற்கையான தோழர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இயற்கையான கூட்டாளிகளாக இருந்தாக வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.

அமெரிக்க அதிபரின் இரண்டாவது இந்திய விஜயத்தின்போது, மரபுகளைமீறி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தானே நேரில் போய் வரவேற்றது; வழக்கமான கைகுலுக்கலுக்குப் பதிலாக ஆரத்தழுவி வரவேற்றது; மிஸ்டர் பிரசிடெண்ட் என்று சம்பிரதாயமாக அழைக்காமல் உரிமையோடு "பராக்' என்று அழைத்து நெருக்கத்தை வெளிப்படுத்தியது என்று பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபரையும், அதன் மூலம் அமெரிக்காவையும் தனது நட்பு வட்டத்திற்குள் இழுத்துக் கொண்டது, வேறு எந்த உலக அரசியல்வாதியும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ராஜதந்திரம், சந்தேகமே இல்லை.

ஆனால் ஒரே ஒரு வார்த்தை. அமெரிக்கர்களின் கோரிக்கைகளையும், தேவைகளையும் நிறைவேற்றி வைப்பதை எப்படி தவிர்க்க முடியாதோ, அதேபோல இந்தியாவின் எதிர்பார்ப்புகளையும், கோரிக்கைகளையும் அமெரிக்காவை ஏற்றுக்கொள்ளச் செய்வது அதைவிட முக்கியம் என்பதை மறந்துவிடக் கூடாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.