2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஒதுக்கீடும் செயல்பாடும்!

பிரதமர் தலைமையில் கூடிய மத்திய கொள்கைக் குழுவின் கூட்டத்தில் மாநில முதல்வர்களும், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில முதல்வர்கள் கட்சி வேறுபாடின்றி முன்வைத்த கோரிக்கை,

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:43 am

ஆசிரியர்

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரமும், முடிவும் முக்கியமான ஒரு நிகழ்வைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. மத்திய திட்டக் குழு கலைக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் மத்திய கொள்கைக் குழுவின் (நீதி ஆயோக்) கூட்டம் பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டன.

மாநில முதல்வராக இருந்த ஒருவர் பிரதமராகி இருக்கும் நிலையில், திட்டக் குழுவின் செயல்பாடுகளால் மாநிலங்கள் எதிர்கொண்ட பிரச்னைகள் பற்றிய புரிதல் நடுவண் அரசுக்கு ஏற்பட்டிருப்பதில் வியப்பொன்றும் இல்லை. கூட்டாட்சித் தத்துவத்துக்கு முன்னுரிமை அளிப்பதும், தங்களது தேவைக்கு ஏற்ப வளர்ச்சித் திட்டங்களை வகுத்துக் கொள்ளும் சுதந்திரத்தை மாநிலங்களுக்கு வழங்குவதும்தான் மத்திய திட்டக் குழுவுக்குப் பதிலாக மத்திய கொள்கைக் குழுவை ஏற்படுத்தியதன் காரணம்.

பிரதமர் தலைமையில் கூடிய மத்திய கொள்கைக் குழுவின் கூட்டத்தில் மாநில முதல்வர்களும், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில முதல்வர்கள் கட்சி வேறுபாடின்றி முன்வைத்த கோரிக்கை, தங்களது தேவைக்கேற்ற திட்டங்களைத் தாங்களே தீர்மானிக்கும் உரிமையும், மத்திய அரசு தனது திட்டங்களை மாநிலங்கள்மீது திணிக்காமல் இருக்கும் நிலையும் ஏற்பட வேண்டும் என்பதுதான். மத்திய அரசின் பல திட்டங்கள் எல்லா மாநிலங்களுக்கும் தேவையற்றவை எனும்போது, அந்தந்த மாநிலங்கள் தங்களது தேவைக்கும், வளர்ச்சிக்கும் ஏற்ப திட்டங்களைத் தீட்டிக் கொள்வதும், அதை நிறைவேற்ற மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதும், ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும்.

மாநிலத்துக்கு மாநிலம் தேவையும், பிரச்னையும், இந்தியா போன்ற பல்வேறு மாநிலங்களின் கூட்டமைப்பில் மாறுபடுகிறது. அப்படிப்பட்ட சூழலில், வளர்ச்சிப் பணிகளை மத்திய அரசு திட்டமிடுவது என்பதும் கண்காணிப்பது என்பதும் இயலாத ஒன்று.

மத்திய கொள்கைக் குழு, மாநிலங்களின் கருத்துக்கேற்பத் திட்டங்களைப் பரிந்துரை செய்வதுடனும், நிதி ஒதுக்கீடு செய்வதுடனும் நிறுத்திக் கொண்டு, அந்தத் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பையும், கண்காணிக்கும் பொறுப்பையும் மாநிலங்களுக்கு விட்டுவிட வேண்டும் என்பதுதான் மாநில முதல்வர்களின் கருத்து. முதல்வர்களாக இருந்தபோது நரேந்திர மோடியும், ஜெயலலிதாவும் முன்வைத்த கருத்துத்தான் இது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

மத்திய அரசு, ஆண்டுதோறும் தனது நிதிநிலை அறிக்கையில் மாநிலங்களுக்கான திட்ட ஒதுக்கீடாக மத்திய திட்ட ஒதுக்கீட்டின் 59% நிதியை ஒதுக்குகிறது. இது அல்லாமல், மத்திய அரசின் நேரடித் திட்டங்களுக்காக மீதமுள்ள 41% நிதியை ஒதுக்குகிறது. மத்திய அரசின் நேரடித் திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படாமலும், அப்படியே நடைமுறைப்படுத்தப்படுவது தேவையில்லாமலும் வீணாகிறது என்பதுதான் குற்றச்சாட்டு.

மத்திய அரசின் நேரடித் திட்டங்கள் பல, கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போதே குறைக்கப்பட்டுவிட்டன. மொத்தம் 360 திட்டங்கள் இருந்தது 66 திட்டங்களாகக் குறைக்கப்பட்டுவிட்டன. இந்த 66 திட்டங்களுக்காக மன்மோகன் சிங் அரசு கடந்த ஆண்டு ரூ.3,38,562 கோடி ஒதுக்கி இருந்தது. 11-ஆவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்திற்காக மத்திய அரசின் திட்டங்களுக்காக மட்டும் செய்யப்பட்டிருக்கும் ஒதுக்கீடு ரூ.6.6 லட்சம் கோடி.பிரதமர் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம், பிரதமர் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம், பிரதமர் கிராமப்புறப் பாசனத் திட்டம், பிரதமர் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம் போன்ற 66 திட்டங்கள், மத்திய அரசின் நிதியுதவியுடனும், மாநில அரசின் பங்களிப்புடனும் செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்களுக்கான விதிமுறைகள் கடுமையாக இருப்பதால், இவற்றை முழுமையாக மாநிலங்களால் பயன்படுத்தப்பட முடியவில்லை என்பது உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் குறை. இதுபோன்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசின் பங்களிப்பு 25% மட்டுமாக இருத்தல் வேண்டும் என்பது தமிழகத்தின் கருத்து.

தில்லியில் கூடிய மத்தியக் கொள்கைக் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கும் முக்கியமான முடிவு, முதலமைச்சர்கள் குழு ஒன்றை அமைப்பது என்பது. இந்த முதலமைச்சர்களின் குழு,

மத்திய அரசின் 66 நேரடித் திட்டங்களை ஆய்வு செய்து,அவற்றைத் தொடர்வதா, மாநிலங்களுக்கு மாற்றுவதா, முற்றிலுமாகக் கைவிடுவதா என்பதைத் தீர்மானிக்கும். மத்திய அரசின் நேரடித் திட்டங்கள் 10 முதல் 15 வரைதான் இருக்க வேண்டும் என்பதும், மத்திய நிதி ஒதுக்கீட்டுக்கு ஏற்ப மாநிலங்கள் தங்களது தேவையைக் கருதித் திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதும் பிரதமர் நரேந்திர மோடியின் கருத்து.

மாநில அரசுகள் தங்கள் தேவைக்கேற்பத் திட்டங்களைத் தீட்டிக் கொள்வதும், நடைமுறைப்படுத்திக் கொள்வதும் நிச்சயமாகக் கூட்டாட்சித் தத்துவத்திற்கு வலிமை சேர்க்கும், சந்தேகமில்லை. இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள் உண்டு. சில மாநிலங்கள் நிதி ஒதுக்கீட்டை முறையாகப் பயன்படுத்தி அதீத வளர்ச்சி காண்பதும், சில மாநிலங்களில் திட்டமிடலும், செயல்படுத்துதலும் சரியாக இல்லாமல்  இருப்பதும் ஏற்பட்டுவிடக் கூடாது. சமச்சீரான வளர்ச்சி இல்லாமல் போனால் ஆபத்து. அதேபோல, சில மாநிலங்களில் நிதி ஒதுக்கீடு தவறாகப் பயன்படுத்தப்பட்டு ஆட்சியாளர்களின் சொந்தக் கணக்குக்கு மடைமாற்றம் செய்யப்பட்டு விடும் ஆபத்தும் இருக்கிறது.

அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காகச் செய்யப்படும் ஒதுக்கீடு குறைக்கப்படாத வரை, பிரதமரின் இந்த மாறுபட்ட சிந்தனை கூட்டாட்சித் தத்துவத்திற்கு வலு சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.