சாரதா நிதி நிறுவன முறைகேடு விவகாரத்தில், சி.பி.ஐ.யை மத்திய அரசு தனக்கு எதிராகப் பயன்படுத்துகிறது என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குறை கூறினாலும், சி.பி.ஐ. சுதந்திரமாகச் செயல்பட முடியாதபடி தலையீடுகள் இருக்கின்றன என்பதையே, அண்மையில் மத்திய அரசின் உள்துறைச் செயலர் அனில் கோஸ்வாமியின் பதவி நீக்கம் அம்பலப்படுத்தியுள்ளது.
இந்த முறைகேட்டில் திரிணமூல் காங்கிரஸ் மட்டுமல்ல, வேறு பல கட்சிப் பிரமுகர்களுக்கும், வேறு மாநில அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளது என்பதையும் இது உறுதிப்படுத்தியுள்ளது.
நரசிம்ம ராவ் ஆட்சியின்போது மத்திய அமைச்சராக இருந்த மாதங் சிங், சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்படவிருந்தபோது, உள்துறைச் செயலர் அனில் கோஸ்வாமி தலையிட்டு, கைது செய்ய வேண்டாம் என்று கூறியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சி.பி.ஐ. அலுவலர்களிடம் பேசியது உண்மை என்பது உறுதியானவுடன் அவரைப் பதவியிலிருந்து விலகும்படி அறிவுறுத்தியது மத்திய அரசு.
அறுபது வயதான அனில் கோஸ்வாமி முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின்போது இரண்டு ஆண்டுகள் பதவி நீட்டிப்பு பெற்றவர். அவர் காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக செயல்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், அவர் மீது குற்ற நட
வடிக்கை மேற்கொள்ளாமல் அவரை மத்திய அரசு ஏன் விட்டுவிட்டது என்பதுதான் ஆச்சரியம். இத்தகைய நேர்வுகளில் ஓர் அமைச்சர் தலையிட்டால், அவர் பதவி விலக வேண்டும்; அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரும் அரசியல் கட்சிகளும்கூட, அனில் கோஸ்வாமி விவகாரத்தில் மவுனமாக இருந்தது ஏன் என்பது புரியவில்லை.
குற்றம்புரிந்த அதிகாரியை மவுனமாக பதவி விலக அனுமதித்தது ஓர் ஆச்சரியம் என்றால், இன்னொரு ஆச்சரியம் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகியுள்ள அந்நிறுவனத் தலைவர் சுதிப்தோ சென், இரு நாள்களுக்கு முன்பு அலிப்பூர் மத்திய சிறையிலிருந்தபடியே ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு செல்லிடப்பேசியில் பேட்டி அளித்துள்ளார். ஒரு சிறைக்குள் எப்படி செல்லிடப்பேசி கொண்டு செல்லப்பட்டு, இந்தப் பேட்டி பதிவு செய்யப்பட்டது என்பது பெரும் விவகாரமாகிக் கொண்டிருக்கிறது.
இந்தப் பேட்டியில் சுதிப்தோ சென் கூறியிருப்பது என்னவெனில், ""சாரதா நிதி நிறுவனம் வாங்கிய பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கப் பிரிவு உடனடியாக இந்த வழக்கில் இணைக்காவிட்டால், "கொள்ளைக்கார கட்சி' எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டுவிடும்'' என்று கூறியுள்ளார். கட்சியின் பெயரை அவர் குறிப்பிடாவிட்டாலும், அது மாநிலத்தின் ஆளும்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் என்று பேசப்படுகிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள், அமைச்சர் உள்பட பலரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இனியும் மத்திய அரசு பழிவாங்குவதாக மம்தா பானர்ஜி சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
சி.பி.ஐ. விசாரணை, கைதுகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமன்றி, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பிரமுகர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் எனப் பலரும் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். அஸ்ஸாம் மாநிலத்தில் பல அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் இதில் தொடர்புபடுத்தப்படுகிறார்கள். இந்த மோசடியில் தொடர்புடையவர்களுக்கு பாதுகாப்பு அளித்ததாகப் புகார் எழுந்தநிலையில், அஸ்ஸாம் மாநிலத்தின் ஓய்வு பெற்ற டி.ஜி.பி. சங்கர் பருவா தற்கொலை செய்து கொண்டார். தற்போது, உள்துறையின் முன்னாள் செயலர் அனில்கோஸ்வாமி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இவை அனைத்தும், இந்த முறைகேட்டில் பல கட்சிகள், பல அதிகாரிகள் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. ரூ.20,000 கோடி நிதி புழங்கிய இந்த நிறுவனத்தின் ஊழலில், சாரதா நிதி நிறுவன உயர் அதிகாரிகள் பலருக்கும் தொடர்பு இருக்கிறது. திரிணமூல் காங்கிரஸ் மீது பழிவாங்கும் நடவடிக்கை என்பதாக பார்க்காமல், இதில் சி.பி.ஐ. முழுமையாகக் களம் இறங்கி விசாரணை நடத்த மம்தா பானர்ஜி உதவுவது, அவரது அரசியல் தோற்றத்தை மேம்படுத்தும் என்பது மட்டுமல்ல, கட்சியில் களையெடுக்கவும் உதவியாக அமையும்.
சி.பி.ஐ. தனியதிகாரம் படைத்த அமைப்பாக, சுயமாகச் செயல்படவும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதுமான சுதந்திர அமைப்பாகவும் மாற்றப்பட வேண்டிய அவசியம் மிக இன்றியமையாததாக இருக்கிறது.
நிலக்கரிச் சுரங்க வயல் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணை அறிக்கையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சட்டத் துறை அமைச்சர் படித்துப் பார்த்து, திருத்தி எழுதச் சொன்னதால் ஏற்பட்ட சர்ச்சைகளின்போது, சி.பி.ஐ. கூண்டுக்கிளியாக இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.
பின்னர், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில், சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா வீட்டுக்கு, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் வந்து சந்தித்துப் பேசிய விவகாரம், சி.பி.ஐ. என்பது அரசியல் செல்வாக்கு உள்ளவர்களால் வளைக்க முடிந்த அமைப்பு என்பது ஊரறிந்த ரகசியமாக நிறுவப்பட்டது.
தற்போது கைது செய்ய வேண்டாம் என்று மத்திய உள்துறை செயலர் தலையிடும் அளவுக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது. இத்தகைய சூழலில், நாடாளுமன்றத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டதான, ஒரு சுதந்திர அமைப்பாக சி.பி.ஐ. மாற்றப்பட்டால் அது பிரதமர் மோடியின் சாதனையாக சரித்திரத்தில் பேசப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் பாஜக மகளிரணியினா் கண்டன ஊா்வலம், ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி - பெங்களூரு இடையே மே 1 முதல் கூடுதல் விமான சேவை தொடக்கம்

புதுச்சேரியில் பள்ளி மாணவா்களுக்கு களிமண் பொம்மைகள் தயாரிப்பு பயிற்சி

வாக்குச்சாவடி முகவா் மீது தாக்குதல்: 10-க்கும் மேற்பட்டோா் மீது வழக்கு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

