2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

நேரடி மானியம் தீர்வல்ல!

பொது விநியோக முறைக்கு மூடுவிழா நடத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு முனைப்பாக இருப்பதாகத் தெரிகிறது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:09 am

ஆசிரியர்

பொது விநியோக முறைக்கு மூடுவிழா நடத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு முனைப்பாக இருப்பதாகத் தெரிகிறது. பொது விநியோக முறையில் விநியோகம் செய்யப்படும் பொருள்கள் பயனாளிகளைப் போய்ச் சேர்வதில்லை என்பதுதான் அதற்கு அவர்கள் கூறும் காரணம். உணவு தானியங்களைப் பொருத்தவரை, பொது விநியோகத்திற்கு என்று ஒதுக்கப்படுபவை, போலி குடும்ப அட்டைகள் மூலமாக தனியார் சந்தைக்குத் திருப்பிவிடப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே நிலவுகிறது.

சமீபத்தில் பொது விநியோகத் துறையின் செயல்பாடு குறித்து அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது. இதன்படி கடந்த 2011 - 12-ஆம் நிதியாண்டில், பொது விநியோகத்திற்கு ஒதுக்கப்பட்ட அரிசி, கோதுமை ஆகிய உணவு தானியங்களில் 46.7 விழுக்காடு பயனாளிகளைப் போய்ச் சேரவில்லை. அதாவது, நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட வேண்டிய இரண்டரைக் கோடி மெட்ரிக் டன் தானியம், தனியார் சந்தைக்குத் திருப்பிவிடப் பட்டிருக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் 97.8 விழுக்காடு, தில்லியில் 82.6 விழுக்காடு உணவுப் பொருள்கள் பயனாளிகளுக்குத் தரப்படாமல் வெளிச்சந்தைக்கு அனுப்பப்பட்டு விடுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவிலேயே சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும்தான் பொது விநியோகம் எந்தவிதத் தவறோ, குறைபாடோ இல்லாமல் முறையாகச் செயல்படுவதாகக் கூறும் அந்த அறிக்கை, ஆந்திரப் பிரதேசத்திலும், தமிழகத்திலும்கூட நியாய விலைக் கடைகள் ஓரளவு முறையாக நடைபெறுவதாகக் குறிப்பிடுகிறது.

உத்தரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை, இந்தியாவின் ஒட்டுமொத்த பயனாளிகளில் 60 விழுக்காடு என்று சொன்னால் அதிர்ச்சி அடையத் தேவையில்லை. இந்த ஐந்து மாநிலங்கள் பொது விநியோகத்திற்கு வழங்கப்படும் மொத்த உணவு தானியங்களில் 50% தானியங்களை முறையாக வழங்காமல் தனியாருக்கு பயன்பட உதவுகின்றன என்கிறது அந்த அறிக்கை.

இந்தியாவில் ஏறத்தாழ 5,00,000 நியாய விலைக் கடைகள் பொது விநியோகத்தில் ஈடுபட்டிருக்கின்றன. உலகிலேயே இதுபோலப் பொது விநியோக முறையில் உணவுப் பொருள்களை விநியோகம் செய்யும் இவ்வளவு பெரிய சங்கிலித் தொடர் அமைப்பு வேறு எந்த நாட்டிலும் செயல்படுவதாகத் தெரியவில்லை. ஏறத்தாழ 5 கோடி மெட்ரிக் டன் உணவுப் பொருள்கள் பொது விநியோக முறை மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

அடித்தட்டு மக்களின் வாங்கும் சக்தி மிகவும் குறைவு என்பதாலும், விவசாயிகளின் உற்பத்திக்குக் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்படுவதாலும் பொது விநியோக முறை என்பது இந்தியாவைப் பொருத்தவரை மிகவும் அத்தியாவசியமாகிறது. மேலை நாடுகளையும், வளர்ச்சி அடைந்த நாடுகளையும்போல, உணவு தானியங்களின் விஷயத்தில் சந்தையே விலையைத் தீர்மானித்துச் செயல்படும் என்கிற நிலைமை ஏற்படுமானால் அது சமூகப் பிரச்னையாக மாறிவிடக்கூடும். சாமானிய, அடித்தட்டு மக்களின் சக்திக்கு இயலாத சந்தை விலையை அவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பது மட்டுமல்ல, தெருவில் இறங்கிப் போராடவும், தனியார் கிடங்குகளைக் கொள்ளை அடிக்கவும்கூட முற்படுவார்கள் என்பது நிச்சயம்.

கடந்த 2013 - 14-ஆம் நிதியாண்டில் மட்டும் மத்திய அரசு மானியங்களுக்காக ஒதுக்கிய தொகை ரூ.3,60,000 கோடி. இதில் உணவு தானியங்களுக்காக ஒதுக்கப்பட்டது ரூ.1,25,000 கோடி. இந்த மானியம் அரசால் செலவு செய்யப்பட்டும் அதன் பயன், உண்மையான பயனாளிகளைச் சென்றடைவதில்லை என்பதுதான் குற்றச்சாட்டு. போலி குடும்ப அட்டைகள் மூலம் கள்ளச் சந்தைக்குக் கடத்தப்படும் உணவுப் பொருள்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி, மானியத்தை உணவு தானியமாக வழங்காமல், நேரிடையாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்திவிடுவது என்பதுதான் அரசின் திட்டம்.

இப்படி மானியத்தை நேரிடையாக வங்கிக் கணக்குகளில் அரசு செலுத்திவிடுவதன் மூலம், போலி பயனாளிகள் வடிகட்டப்பட்டு அதனால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.33,087 கோடி சேமிப்பாகும் என்பது அந்த அறிக்கையின் கணிப்பு. அதனால்தான் அரசு மறுபடியும் ஆதார் அட்டை வழங்குவதில் முனைப்புக் காட்டுகிறது.

இந்தத் திட்டம் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், பொது விநியோகத்தின் நோக்கத்தை ஈடுகட்டுமா என்பது சந்தேகத்திற்குரியது. வங்கிக் கணக்குகள் குடும்பத் தலைவரின் பெயரில் இருப்பதால், அதில் செலுத்தப்படும் மானியத் தொகை உணவுப் பொருள்கள் வாங்குவதற்குப் பயன்படுத்தப்படுமா என்கிற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். முதலில், சந்தை விலையில் பணம் கொடுத்து உணவுப் பொருள்கள் வாங்கும் நிலையில் அடித்தட்டு மக்கள் இருந்தால், அவர்கள் ஏன் புழுத்துப்போய் நாற்றம் அடிக்கும் அரிசிக்கும், கோதுமைக்கும் நியாய விலைக் கடைகளின் வாசலில் வரிசையில் நிற்கப் போகிறார்கள்?

பொது விநியோக முறையும், நியாய விலைக் கடைகளும் அடித்தட்டு மக்களுக்கும் அரசுக்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்தக் குடிமக்களுக்கும் அரசுக்கும் இடையே உள்ள தொடர்பின் அடையாளம். அதை ஊழலும், முறைகேடுகளும் இல்லாமல் பலப்படுத்துவதை விட்டுவிட்டு, இந்த விநியோக முறையையே கைவிடுவது என்பது மிகப்பெரிய முட்டாள்தனம். இந்தியா போன்று அடிக்கடி இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் ஒரு தேசத்திற்கு, நியாய விலைக் கடைகளின் சங்கிலித் தொடர் இருப்பது மிகப்பெரிய பலம். நேரடி மானியம் பிரச்னைக்குத் தீர்வாகிவிடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.