தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தற்கொலை அரசியல்!

நிலம் கையக மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து புது தில்லியில் ஆம்ஆத்மி கட்சி நடத்திய பேரணிப் பொதுக்கூட்டத்தின்போது, ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயி கஜேந்திர சிங் தற்கொலை செய்துகொண்டது நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:17 am

ஆசிரியர்

நிலம் கையக மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து புது தில்லியில் ஆம்ஆத்மி கட்சி நடத்திய பேரணிப் பொதுக்கூட்டத்தின்போது, ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயி கஜேந்திர சிங் தற்கொலை செய்துகொண்டது நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது தில்லி காவல் துறையின் முதல் கட்ட விசாரணையில், "இது தற்கொலையாக இருக்க முடியாது; விபத்தாகவே இருக்கக்கூடும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"கஜேந்திர சிங் தற்கொலை செய்துகொள்வதாக அறிவித்து, துண்டை மரக்கிளையில் கட்டி, ஒரு முனையைக் கழுத்தில் கட்டி, தொலைக்காட்சி கேமராக்களின் கவனம் பெற்ற பிறகு, ஏற்கெனவே திட்டமிட்டபடி ஆம் ஆத்மி கட்சியினர் அவரைக் காப்பாற்றிக் கீழே இறக்கிவிட்டிருக்க வேண்டிய நாடகம், எதிர்பாராதவிதமாக விபத்தாக மாறியதால் அவர் இறந்துவிட்டார்' என்பது தில்லி காவல் துறையின் கூற்று.

இது எந்த அளவுக்கு உண்மை என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், அவரது வீடு வசதியானது என்பதும், தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கடன்கள் இல்லை என்பதும், தொலைக்காட்சியில் தோன்றிய பிறகு தனது உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு நிச்சயமாக வருவேன் என்று கூறியிருந்தார் என்பதும், கஜேந்திர சிங் ஒரு விளம்பரப் பிரியர்; அவர் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவருக்குப் பிரச்னைகள் ஏதுமில்லை என்பதும் அவரது கிராமத்துக்குச் சென்று பலரைப் பேட்டியெடுத்த ஊடகங்களும், தில்லி காவல் துறையினரும் கூறுவதைக் கொண்டு இதை உண்மை என்று முடிவு செய்துவிட முடியாது. இதில் மேலும் விசாரணையும் ஆதாரங்களும் தேவை.

கடன் தொல்லையாலும் வறுமையாலும், வறட்சியால் ஏற்பட்ட பயிர் இழப்பை ஈடு செய்ய முடியாமலும் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் உணர்வை வெறும் அரசியல் ஆதாயமாக்கும் அற்பத்தனமாக இது முடிந்துபோகும். இதைவிட விவசாயிகளை அவமதிக்கும் செயல் வேறு எதுவுமில்லை.

கஜேந்திர சிங் குடும்பத்துக்கு தில்லி ஆம்ஆத்மி அரசு ரூ.10 லட்சம் கருணைத் தொகை வழங்கியது. உத்தரப் பிரதேச அரசு ரூ.5 லட்சம் வழங்கியது. ஆனால், இதுவரை பல்வேறு மாநிலங்களில் கடன் தொல்லையாலும், பயிர்ச் சேதத்தால் ஏற்பட்ட மனஉளைச்சலாலும் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் கடன் நிலுவையைக்கூட மாநில அரசுகளோ, வங்கிகளோ ரத்து செய்துவிடவில்லை என்பதே கசப்பான உண்மை. கருணைத் தொகை பெறுவதற்கு விவசாயிகள் தில்லிக்கு வந்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும் போலிருக்கிறது.

2012-ஆம் ஆண்டு குற்றப் பதிவேடு புள்ளிவிவரப்படி இந்தியாவில் 1,35,445 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களில் சுமார் 11% பேர் (13,754) விவசாயிகள். இந்த விவசாயிகளில் 76% பேர் மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், கேரளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்த விவசாயிகளின் மரணம் கேள்வி கேட்பாரில்லாமல், தற்கொலை என்று பதிவு செய்யப்பட்டு மூடப்பட்டுவிட்டது.

அரசியல்வாதிகளின் கருணை(த்தொகை)யைப் பெற மக்களில் சிலரும் போலித்தனத்தில் விழுகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஒரு விவசாயி உண்மையாகவே சொந்தக் காரணங்களுக்காகத் தற்கொலை செய்துகொண்டிருந்தாலும், அவர் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப் பதிவு செய்வதும், இதற்காக அரசின் கருணைத் தொகை கிடைக்க எதிர்க்கட்சிகள் அறிக்கையுமாக அரசியல் நாடகங்கள் ஆங்காங்கே கூச்சமில்லாமல் நடத்தப்படுகின்றன. இவை உண்மையான விவசாயியின் பிரச்னையை மழுங்கடிக்கின்றன.

வரதட்சிணைக் கொடுமையால் பல பெண்கள் இறந்துகொண்டிருந்தபோது அரசு சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, ஒரு பெண், மணமான 7 ஆண்டுகளுக்குள் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனால், அது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டது. வரதட்சிணை புகார் இல்லை என்றாலும்கூட அறிக்கை தாக்கல் செய்வது கட்டாயம்.

அதேபோன்று, இந்தியாவில் எந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டாலும், அவர் சொந்தமாக அல்லது குத்தகை நிலத்தில் மூன்று ஆண்டுகளாக சாகுபடி செய்த பயிர், பரப்பு, விளைச்சல் அளவு, அவர் பெற்ற கடன், நிலுவையில் உள்ள கடன் தொகை, தற்கொலைக்கு முன்பாக அவரது கடிதத் தொடர்புகள், தற்கொலையின்போது அவர் எழுதிய கடிதம் ஆகிய அனைத்தையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்து, அவர் இறந்ததன் காரணத்தை ஆவணப்படுத்த வேண்டும். கடனை ரத்து செய்யவும் (தனியாரிடம் வாங்கியிருந்தாலும்கூட) குடும்பத்தின் மறுவாழ்வுக்கு வழிகாணவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள இந்த ஆவணம் உதவியாக அமையும்.

கஜேந்திர சிங் ஒருவர் மட்டுமே விவசாயி அல்ல. "தற்கொலை அரசியல்' அந்தந்த நேர பரபரப்புக்கு மட்டுமே பயன்படும். உண்மையான பிரச்னை, இந்தியாவில் விவசாயம் என்பது சிறு விவசாயிகளுக்கு லாபகரமாக இல்லை என்பது. ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கவும், வங்கிகளில் கடன் பெறவும் முடியாத குறைந்த அளவு நிலத்தைத் தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டு, வானம் பார்த்த பூமியில் மானாவாரி விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு தற்கொலை என்பதாக இருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை. இதற்கு நிரந்தரத் தீர்வு காணாதவரை இந்தப் பிரச்னை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுமே தவிர, விவசாயிகள் தற்கொலைக்கு முடிவு காணாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.