ஏற்றம் ஏற்படுத்துவாரா யெச்சூரி?
விசாகப்பட்டினத்தில் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-ஆவது தேசிய மாநாடு 62 வயதான சீதாராம் யெச்சூரியை பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்திருக்கிறது.


விசாகப்பட்டினத்தில் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-ஆவது தேசிய மாநாடு 62 வயதான சீதாராம் யெச்சூரியை பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இதற்கு முந்தைய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் சென்னையில் படித்து வளர்ந்தவர் என்றால், சீதாராம் யெச்சூரி சென்னையில் பிறந்தவர். முன்னவர் தோழர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடின் தயாரிப்பு என்றால், பின்னவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தின் சீடர்.
1952-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி பிறந்த சீதாராம் யெச்சூரி தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவசரநிலையின்போது கைது செய்யப்பட்டதால் முனைவர் பட்டப் படிப்பைப் பாதியில் நிறுத்தினார். தில்லி சர்வகலா சாலையில் இடதுசாரி இயக்கத்துக்கு வலுசேர்த்த பெருமை பிரகாஷ் - சீதாராம் இரட்டையர்களுக்கு உண்டு. கடந்த 10 ஆண்டுகளாக மூன்று முறை பொதுச் செயலாளராக இருந்த பிரகாஷ் காரத்திடமிருந்து தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் சீதாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ இதழான "பீப்பிள்ஸ் டெமாக்ரசி' பத்திரிகையின் ஆசிரியராகக் கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்பவர்.
வர்க்கபேதத்தின் அடிப்படையிலான இடதுசாரி இயக்கங்கள் இப்போது ஜாதிய அரசியல் நடத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. இந்தியாவின் மக்கள்தொகையில் 35 வயதுக்குக் கீழே உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 51.8 சதவீதமாக இருக்கும் நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒரு கோடிக்கும் சற்று அதிகமான மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் வெறும் 6.5 சதவீதம் மட்டும்தான் இளைஞர்கள் என்கிற அவலநிலை. 2004-இல் 44 ஆக இருந்த மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை, இப்போது வெறும் ஒன்பதாகக் குறைந்திருக்கிறது. இடதுசாரிக் கட்சிகளின் வாக்கு விகிதமும் 2009-இல் 7 சதவீதம் இருந்தது, இப்போது 4.5 சதவீதமாகக் குறைந்துவிட்டிருக்கிறது.
இந்தியாவில் 32 இடதுசாரிக் கட்சிகள் இருக்கின்றன. இவற்றை ஒருங்கிணைத்து பலமான மாற்று சக்தியாக்க முடியுமா என்றால் அதுவும் சாத்தியமாகத் தெரியவில்லை. இடதுசாரி இயக்கங்களை ஒருங்கிணைத்து வலுப்படுத்த முடியாததால்தான் தங்களுடன் கொள்கை ரீதியாகத் தொடர்பே இல்லாத மாநிலக் கட்சிகளுடனும், ஜாதியக் கட்சிகளுடனும் கூட்டணி அமைத்துக் கொள்ளும் நிர்பந்தத்துக்கு இடதுசாரி இயக்கங்கள் தள்ளப்பட்டிருக்கின்றன.
கட்சி அமைப்பும், சிந்தனையும் குறிப்பிட்ட வட்டத்துக்குள் சிக்கிவிட்டதால் புதுவிதமான போராட்டங்களை, மக்கள் இயக்கங்களை முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போய்விட்டது மட்டுமே கட்சியின் பின்னடைவுக்குக் காரணமல்ல. இளைஞர்களுடன் தொடர்பை ஏற்படுத்தவோ, அவர்களை ஈர்க்கவோ முடியாமல் போனதுதான் மிகப் பெரிய காரணம்.
பாட்டாளி வர்க்கத்தின் அடையாளங்கள் மாறிவிட்டன. தொழிற்சங்கங்கள் அதிவேகமாக முக்கியத்துவம் இழந்து வருகின்றன. விவசாயிகளும் சரி, போராடும் மனநிலையில் இல்லை. அடுத்த தலைமுறை இளைஞர்கள் விவசாயத்தில் நாட்டம் காட்டத் தயாராக இல்லை. உலகமயத்தின் தாக்கத்தால் நடுத்தர வர்க்க இளைஞர்கள் சந்தைப் பொருளாதார மாயையில் விட்டில் பூச்சிகளைப் போல வலியப் போய் விழுந்து கொண்டிருக்கிறார்கள். செல்லிடப்பேசி யுகத்தில் அவர்களைத் தடுத்து நிறுத்துவது என்பது இயலாது. இதனால், வேலைநிறுத்தம், போராட்டம் போன்ற வழிமுறைகள் எடுபடுவதில்லை.
இடதுசாரி சிந்தனை என்பது அறிவுஜீவிகளின், சமுதாயவாதிகளின் சிந்தனையாக இருந்ததுபோய், ஜாதியவாதிகளின் சிந்தனையாக மாறியிருப்பதுதான், வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையிலான கட்சிகளுக்கு நேர்ந்திருக்கும் மிகப் பெரிய அவலம். அரை நூற்றாண்டுக்கு முன்னால் பேசிய ஏகாதிபத்திய வாதம், தீவிரமான தொழிற்சங்க வாதம், தனியார் துறையே தீமை என்கிற கருத்தாக்கம், ஆயுதப் புரட்சி என்கிற குறிக்கோள் போன்றவை, இப்போது வெற்று கோஷங்களாக மட்டுமே சாமானிய மக்களால் கருதப்படுகின்றன. ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள், சிந்தனாவாதிகள் இடையில் இடதுசாரிக் கட்சிகளுக்கு முன்பு இருந்த அங்கீகாரம் இப்போதும் இருக்கிறதா என்பது சந்தேகமே. அவர்கள் சந்தைப் பொருளாதார மோகத்தில் தடம் புரண்டுவிட்டிருக்கிறார்கள்.
இத்தனை பின்னடைவுக்கும், குறைபாடுகளுக்கும் இடையில், சமுதாயத்தில் சமத்துவச் சமதர்ம சிந்தனையின் அடையாளமாக இன்றைக்கும் தொடர்வது என்னவோ இடதுசாரிகள்தான். தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் விவசாயிகள், தெருவோரம் வானமே கூரையாக வாழும் ஏழை எளியவர், அரசின் பொருளாதாரக் கொள்கையால் இடம்பெயர்ந்து வேலையில்லாமல் அல்லாடும் இழிநிலையினர் என்று இவர்கள் 30 சதவீதத்திற்கு மேல் இருக்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைக்க இடதுசாரிகளால் மட்டுமே முடியும்.
பிரகாஷ் காரத் தனது வழிகாட்டி ஈ.எம்.எஸ். போலக் கொள்கைவாதி என்றால், சீதாராம் யெச்சூரி தனது குருநாதர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தின் மறுபதிப்பான ராஜதந்திரி, செயல் வீரர். மாநிலக் கட்சித் தலைவர்களுடன் நெருக்கமான உறவு வைத்திருப்பவர். திறந்த மனதுடன் பிரச்னைகளை அணுகத் தெரிந்தவர். நகர்ப்புறவாசிகளின் எதிர்பார்ப்புகளைப் புரிந்தவர். சீதாராம் யெச்சூரியின் அணுகுமுறை இடதுசாரி இயக்கங்களுக்குப் புதிய வேகத்தையும் முக்கியத்துவத்தையும் கொடுத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
காங்கிரஸ் பலமிழந்து, செயலிழந்து காணாமல் போய்க் கொண்டிருக்கும் நிலையில், வலதுசாரி பா.ஜ.க.வுக்கு மாற்றாக இடதுசாரிகள் எதிர்க்கட்சியாக வலுப்பெறுவதுதான் இந்திய ஜனநாயகத்துக்கு நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...