நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கதரைக் கதறடிக்கிறார்கள்!

காதி, கிராமத் தொழில்கள் இரண்டுக்கும் மகாத்மா காந்தி முக்கியத்துவம் கொடுத்தார் என்ற ஒரே காரணத்தால், இவை இன்றைய நடைமுறைக்கு ஏற்பில்லாதவை என்பதும், கிராமப் பொருளாதாரம் என்பது இன்றைய வணிக உலகில் எடுபடவில்லை என்பதும்

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:12 am

ஆசிரியர்

காதி மற்றும் கிராமத் தொழில்கள் வளர்ச்சி எவ்வாறு இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அந்தத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் எழுத்து மூலமாக (ஏப்ரல் 20) அளித்த பதிலில், கடந்த மூன்று ஆண்டுகளாக வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

காதியைப் பொருத்தவரை ஆண்டுதோறும் ரூ.50 கோடி விற்பனை அதிகரித்துவருகிறது. கிராமத் தொழில்களைப் பொருத்தவரை ஆண்டுதோறும் ரூ.2,000 கோடி விற்பனை அதிகரித்து வருகிறது. 2013-14 நிதியாண்டில் காதி துணி விற்பனை ரூ.1,081 கோடி. கிராமத் தொழில்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருள்களின் விற்பனை ரூ. 30,098 கோடி. காதி துணிகள் ஏற்றுமதி மூலம் கிடைத்துள்ள வருவாய் ரூ.28 கோடி.இந்தப் புள்ளிவிவரங்களைப் பார்ப்பதற்கு வளர்ச்சி போலத் தோற்றம் அளித்தாலும், உண்மையில் இதன் பயனாளிகள் எண்ணிக்கையைப் பார்க்கும்போதும், அவர்களுக்குக் கிடைக்கும் வருவாய் அளவைப் பார்க்கும்போதும் இதை வளர்ச்சி என்று கூறிவிட முடியாது.

இந்தப் புள்ளிவிவரங்கள் காதி கிராமத் தொழில்கள் ஆணையத்தில் (கே.வி.ஐ.சி.) உறுப்பினராக உள்ள மாநில அரசுகளின் காதி மற்றும் கிராமத் தொழில் வாரியங்களின் விற்பனையும், இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ள தனியார் நிறுவனங்களின் விற்பனையும் சேர்ந்ததுதான். இதில் தனியார் நிறுவன விற்பனைதான் கணிசமானது.

பிரதமர் வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தின் நிதிநல்கையைப் பயன்படுத்தி, கிராமத் தொழில்களுக்கு மானியம் வழங்கி, அந்தத் தொழில்களை ஊக்கப்படுத்தி வருகிறார்கள். 2013-14 ஆண்டில், தமிழக அரசுக்கு கதர் கிராமத் தொழில் ஆணையம் ரூ.61 கோடி மானியம் வழங்கியது. அப்படி இருந்தும், காதி கிராப்ட் (கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமும்கூட) லாபம் ஈட்டும் நிறுவனமாக இல்லை. மேலும், கிராமத் தொழில்கள் ஊக்குவிப்புக்காக அரசு நடத்தும் கண்காட்சிகளும் பெரிய அளவில் விற்பனை வாய்ப்பை உருவாக்கவும் இல்லை.

காதி, கிராமத் தொழில்கள் இரண்டுக்கும் மகாத்மா காந்தி முக்கியத்துவம் கொடுத்தார் என்ற ஒரே காரணத்தால், இவை இன்றைய நடைமுறைக்கு ஏற்பில்லாதவை என்பதும், கிராமப் பொருளாதாரம் என்பது இன்றைய வணிக உலகில் எடுபடவில்லை என்பதும் உண்மையல்ல. காதி துணிக்கும், கிராமத் தொழில் நிறுவனங்களுக்கும் மானியம் கொடுத்துதான் காப்பாற்ற முடியும் என்பதும் உண்மை அல்ல. தனியார் நிறுவனங்கள் இதில் ஈடுபட்டு, வெற்றிகரமாக செயல்படுகின்றன எனும்போது ஏன் காதி நிறுவனங்களும் கிராமத் தொழில் நிறுவனங்களும் சந்தைப் போட்டியில் காணாதொழிந்தன என்பதற்குக் காரணம்- அவை அரசாங்கத்தின் பிடியில் இருப்பதுதான்.

2001-ஆம் ஆண்டு, திட்ட கமிஷன் அமைத்த குழு ஒன்று, கதர் கிராமத் தொழில் திட்டங்கள் மீதான மதிப்பீட்டு ஆய்வு நடத்தி அறிக்கை அளித்தது. அதில் தெரிவிக்கப்பட்டிருந்த எந்த ஆலோசனையையும் அரசோ, கதர் கிராமத் தொழில்கள் ஆணையமோ நடைமுறைப்படுத்தவில்லை என்பதுதான் வேதனைக்குரியது.

மத்திய அரசின் கீழ் செயல்படும் கதர் கிராமத் தொழில்கள் ஆணையம், மாநில அளவிலான கதர் கிராமத் தொழில்கள் வாரியம் ஆகியன கண்காணிப்பு நிறுவனங்களாகச் செயல்பட வேண்டும். தரமான மூலப்பொருள்கள் கிடைக்கச் செய்தல், விலை ஏற்றத்தாழ்வுகளைக் கண்காணித்தல், உற்பத்தி தடையற்று நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்தல், சந்தையில் நிலவும் தேவை மற்றும் புதிய பாணிகளுக்கு ஏற்ப உற்பத்திக்கான பயிற்சி அளித்தல், விலை நிர்ணயிக்கப் பயிற்சி அளித்தல், விற்பனை வாய்ப்புக்கான முகமையாகச் செயல்படுதல் போன்ற அமைப்பாக மாற வேண்டும் என்று அந்த ஆய்வுக் குழு தெரிவித்திருந்தது. மிக முக்கியமாக - சில்லறை விற்பனையில் ஈடுபடக் கூடாது என்றும் அந்தக் குழு வலியுறுத்தியிருந்தது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் சுட்டிக்காட்டிய தவறுகளைத் திருத்திக்கொள்ள இன்றுவரை அரசு முன்வரவில்லை. ஆகவே, முன்னேற்றமும் இல்லை.

விற்பனைக் கிளைகளைத் திறந்து, அதன் மூலம் செலவை அதிகரிப்பதோடு, விற்பனை உத்திகள் இல்லாத நிலையில், தரத்திலும் ஊழல் இருப்பதால், பொருள் தேக்கமும், அவற்றை விற்றுத்தீர்க்கும் கட்டாயத்துக்காக மிக அதிக அளவில் தள்ளுபடியும் கொடுக்கும்போது, மக்கள் வரிப் பணம் வீணாகிறது என்பது ஆய்வின் முடிவு. காதி, கிராமத் தொழில் தயாரிப்புகளுக்கு ஆணையம் முகவர்களாகச் செயல்பட்டு, சந்தையில் விற்பனை இலச்சினை கொண்ட நிறுவனங்களுக்கு நேரடியாக விற்க உதவினாலே போதும் என்றது அந்த அறிக்கை.

தேன், மூலிகை சோப்புகள், துணிகள், ஆயத்த ஆடைகள், ஊதுபத்தி உள்ளிட்ட பொருள்களை உற்பத்தி செய்பவர்கள், சந்தையில் விற்பனை இலச்சினையுடன் உள்ள நிறுவனங்களுக்கு விற்றால், அந்நிறுவனங்கள் தங்கள் இலச்சினையில் விற்றுக்கொள்வார்கள். சந்தையின் தேவைக்கேற்ற தரம், வடிவமைப்பு, புதுமை, பேக்கிங் எல்லாவற்றையும் அவர்களே கேட்டுப் பெறுவார்கள். இந்தத் தொழில் உறவைக் கண்காணிப்பதை மட்டும் ஆணையம் செய்தால் போதும்.

அதாவது, அரசு நிறுவனம் கடை போடக் கூடாது. மானியத்தைக்கூட, தொழிலாளர்களின் உற்பத்தி, விற்றுமுதல் அடிப்படையில் வங்கிகள் மூலம் விநியோகிக்க வேண்டும் என்றும் அந்தக் குழு கூறியிருந்தது. மானியம் தங்களைவிட்டுப் போவதை அதிகாரிகளும் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளும் விரும்பவில்லை. இவர்களது சுயநலத்துக்காக, காதியும், கிராமத் தொழில்களும் வளரவில்லை என்பது மட்டுமல்ல, மக்கள் வரிப் பணமும் விரயமாகிறது. எப்போது இதற்கு முடிவு கட்டப் போகிறோம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.