இந்தியாவைப் பொருத்தவரை, ஏதாவது குற்றச்சாட்டோ அல்லது தவறோ நிகழ்ந்துவிட்டால் அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நடவடிக்கையையே முடக்கிவிடுவது என்கிற தவறான அணுகுமுறை பல ஆண்டுகளாகவே கடைப்பிடிக்கப்படுகிறது.
போஃபர்ஸ் பீரங்கியில் முறைகேடு நடந்தது என்பதற்காகப் பல ஆண்டுகள் நமது ராணுவத்தில் பீரங்கியே வாங்காமல் இருந்த மடமைபோல, ஏராளமான எடுத்துக்காட்டுகளைப் பட்டியலிட முடியும்.
உபேர், ஓலா, டாக்சி ஃபார் ஷ்யூர் உள்ளிட்ட செல்லிடப்பேசி மூலமும், இணையதளம் மூலமும் செயல்படும் வாடகை மகிழுந்துகளுக்குத் தடை விதிக்கும் அரசின் முடிவு, மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டையே கொளுத்த முற்படும் முட்டாள்தனத்துக்கு ஒப்பானதாகத் தோன்றுகிறது. இப்படி ஒரு முடிவை, தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவதில் முனைப்புக் காட்டும், தேசத்தின் வளர்ச்சியைத் தனது குறிக்கோளாக அறிவித்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசால் எப்படி எடுக்க முடிந்தது என்பதுதான் வியப்பாக இருக்கிறது.
இந்தியா முழுவதும் லட்சக்கணக்கானோர் செல்லிடப்பேசியிலும், "ஆண்ட்ராய்ட்' தொழில்நுட்பம் உள்ள ஏனைய கணினி சார்ந்த தொலைத் தொடர்புக் கருவிகளிலும் உள்ள வசதிகளையும் (ஆப்ஸ்) பயன்படுத்தி வாடகை வாகனங்களை அமர்த்திக் கொள்வது என்பது பரவலாகப் புழக்கத்தில் வந்துவிட்டது. சிறு நகரங்களில்கூட இப்போது உபேர், ஓலா, டாக்சி ஃபார் ஷ்யூர் போன்ற வாடகை மகிழுந்து (கார்) ஒப்பந்த நிறுவனங்களுடன் இணைந்த வாகனங்கள் வளைய வரவும், பயன்படுத்தப்படவும் தொடங்கி விட்டிருக்கின்றன.
சொந்தமாக மகிழுந்து வைத்திருப்பவர்கள் மட்டுமல்ல, ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களும், ஆட்டோவில் பயணிப்பவர்களும்கூட, செல்லிடப்பேசியில் வாடகை வாகனங்களை அழைக்கும் வசதி வந்த பின்னால் அதைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டிருக்கிறார்கள். குறிப்பாக, பெருநகரங்களில் தேவைக்கு ஏற்ப பொதுப் போக்குவரத்து செயல்படாத நிலையிலும், அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப விரிவாக்கம் செய்யப்படாத நிலையிலும் மக்களுக்கு இதுபோன்ற தொழில்நுட்பம் சார்ந்த, எந்தவிதப் பேரத்திலும் ஈடுபடத் தேவையில்லாத வாடகை வாகனங்களின் அவசியம் ஏற்பட்டிருப்பதில் வியப்பொன்றுமில்லை.
பொதுமக்களுக்கு மட்டுமல்ல, வாகன ஓட்டுநர்களுக்கும் ஓலா, உபேர், டாக்சி ஃபார் ஷ்யூர் போன்ற நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியது முதல் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. நிறைய ஓட்டுநர்களுக்கான தேவை அதிகரித்திருப்பது போலவே, அவர்களது சம்பளமும் அதிகரித்திருப்பதை நாம் உணர வேண்டும். இதனால், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இளைஞர்கள் மட்டுமல்ல, வேலை கிடைக்காத பல இளம் பட்டதாரிகளின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்னால், இந்தியத் தலைநகர் தில்லியில் உபேர் வாடகை கார் நிறுவனத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவரால், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் பெண் ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு ஆளானார் என்பதுதான் அரசு ஒட்டுமொத்தமாக இதுபோன்ற நிறுவனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான காரணம். ரயிலிலும், பயணியர் போக்குவரத்து வாகனங்களிலும் (பேருந்து), ஆட்டோ ரிக்ஷாக்களிலும் பல சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதானே இருக்கின்றன. அவற்றை எல்லாம் தடை செய்யப் போகிறோமா, இல்லை, முடியுமா?
மின்னணுவியல் (எலக்ட்ரானிக்ஸ்), தகவல் தொழில்நுட்பத் துறையினரால், தில்லியில் மட்டும் தொழில்நுட்பம் சார்ந்த வாடகை வாகனங்களுக்குத் தடை விதிக்க முடியாது என்பதால், ஒட்டுமொத்த இந்தியாவிலும் அவற்றுக்குத் தடை விதிக்க அரசு முடிவு எடுத்திருப்பதாகக் கூறுவது அதைவிட வேடிக்கையாக இருக்கிறது. ஒருபுறம், புதிய கண்டுபிடிப்புகளையும், தகவல் தொழில்நுட்பத் துறையின் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளையும் ஊக்குவிப்பதாகக் கூறிக்கொண்டு, உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்டு வெற்றிகரமாக நடந்துவரும் ஒரு முயற்சிக்குத் தடை விதிக்க மத்திய அரசு முற்படுகிறதே, இது என்ன முரண்?
தில்லி சம்பவத்துக்குப் பிறகு, தொழில்நுட்பம் சார்ந்த வசதிகளைப் பயன்படுத்தும் வாடகை வாகன நிறுவனங்கள் பல புதிய பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். வாகன ஓட்டுநர்களைத் தேர்ந்தெடுப்பதிலும், அவர்களது செயல்பாடுகளைக் கண்காணிப்பதிலும் மிகவும் கவனம் செலுத்துகிறார்கள். அரசு நிறுவனங்களைப் போல அல்லாமல், தனியார் நிறுவனங்கள் மேலும் தவறு நடந்து விடாமல் பாதுகாப்பதன் மூலம் தங்களது தொழில் தொடர வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டுவது எதிர்பார்க்கக் கூடியதுதான். அவர்கள் தொழில் நடத்தி லாபம் ஈட்ட வேண்டும் என்பதில் அக்கறை காட்டுபவர்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
தொழில்நுட்பம் சார்ந்த வாடகை வாகனங்களை அனுமதிப்பதன் மூலம் மட்டுமே, அடாவடி பேரத்தில் ஈடுபடும் ஏனைய வாடகை வாகனங்களின் செயல்பாட்டை நாம் கட்டுக்குள் கொண்டு வர முடியும். சமூக விரோதிகளின் நடமாட்டத்தையும் இதன் மூலம் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் முடியும்.
அரசின் முடிவுக்குப் பின்னால், ஏதோ ஒரு சுயநலக் கும்பல் (லாபி) செயல்படுகிறதோ என்கிற ஐயப்பாடு எழுகிறது. பிரச்னைக்குத் தகுந்த நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, தொழில்நுட்பம் சார்ந்த வாடகை வாகனங்களுக்குத் தேசிய அளவில் தடை விதிப்பது என்பது ஆண்மையுள்ள அரசுக்கு அழகல்ல.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி

ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு தற்கொலைத் தாக்குதல் மிரட்டல்

நந்தா கலை, அறிவியல் கல்லூரிக்கு மத்திய அரசு ரூ.70 லட்சம் ஊக்க நிதி

கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு ரூ.5.7 கோடி கல்வி ஊக்கத்தொகை
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

