ஆங்கிலத்தில் யு.ஜி.சி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக் குழு கலைக்கப்படுமா, அப்படியே நீடிக்குமா, அல்லது புதிதாக மாற்றி அமைக்கப்படுமா என்பதுதான் தற்போது உயர் கல்வி உலகில் விவாதப் பொருளாக இருக்கிறது.
பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தவுடன், யு.ஜி.சி.யின் முன்னாள் தலைவர் முனைவர் ஹரி கெளதம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அண்மையில் அளித்த அறிக்கையில், பல்கலைக்கழக மானியக் குழுவை மறுசீரமைப்பதோ அல்லது மறுகட்டமைப்பு செய்வதோ வீண்முயற்சி என்று தெரிவித்துள்ளது. அதனால், பல்கலைக்கழக மானியக் குழு கலைக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. இருப்பினும், இந்த ஆய்வுக்குழு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பரிசீலிக்கவில்லை. யு.ஜி.சி. கலைக்கப்படும் என்ற செய்திகள் தவறானவை என்று அமைச்சகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
அண்மைக் காலமாகவே, மனிதவள மேம்பாட்டுத் துறை, பல்கலைக்கழக மானியக் குழு, பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு இடையே கருத்து மோதல்களும் இடைவெளியும் வெகு அப்பட்டமாகத் தெரியத் தொடங்கி இருக்கின்றன.
தில்லி பல்கலைக்கழகம் அமல்படுத்த விழைந்த நான்கு ஆண்டுகளுக்கான இளநிலைப் பட்டப்படிப்பு, பல்கலைக்கழக மானியக் குழுவின் கடும் எதிர்ப்பினால் விலக்கிக்கொள்ளப்பட்டது. அதேபோன்று, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (ஐ.ஐ.எஸ்சி.) அறிமுகம் செய்த ஒரு பட்டப்படிப்பு குறித்துப் பிரச்னை எழுந்தது. இந்திய அறிவியல் கழகம் ஒரு பல்கலைக்கழகமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் இளநிலை என்கிற பட்டமாக மாணவர்களுக்குச் சான்று அளிப்பதால் தங்களது ஒப்புதல் இல்லாமல் நினைத்தபடி பாடத் திட்டத்தை வகுக்க முடியாது என்று பல்கலைக்கழக மானியக் குழு எதிர்ப்புத் தெரிவித்தது.
பல்கலைக்கழக மானியக் குழுவில் முறைகேடுகள் அதிகமாகிவிட்டன என்பது பரவலான குற்றச்சாட்டு. அதனால்தான், பல்கலைக்கழக மானியக் குழுவை என்ன செய்வது என்று பரிந்துரைக்க ஓர் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழு தேவையில்லை, அதற்குப் பதிலாக உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய ஆணையம் ஒன்றை உருவாக்குவது என்கிற முடிவுடன் அதற்கான மசோதா முந்தைய மன்மோகன் சிங் அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அதற்கு பல மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன.
பல்கலைக்கழக மானியக் குழு அமைக்கப்பட்டதன் அடிப்படை நோக்கம், உலக அளவில் மாறிவரும் உயர் கல்விச் சூழலுக்கு ஏற்ப இந்தியாவில் உயர் கல்வித் தரத்தை உயர்த்தும் நடவடிக்கையில் ஈடுபடுவது, அதற்கான ஆலோசனை மற்றும் செயல்திட்டங்களை வகுப்பது, இந்தியாவில் உயர் கல்வி குறித்து உலக நாடுகளுக்குக் கொண்டு சேர்ப்பது, உயர் கல்விக்கும் தொழிற்கூடங்களுக்குமான இணைப்புப் பாலமாக இருந்து, மனிதவள மேம்பாட்டுக்குத் துணை நிற்பது, புதிய ஆய்வுகளை ஊக்குவிப்பது, அவற்றுக்கு காப்புரிமை பெறச் செய்வது, கல்லூரிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிப்பது எனப் பரந்து விரிந்த நெடிய பணி யு.ஜி.சி.க்கு உள்ளது. ஆனால், அந்த அமைப்பு தன்னை வெறும்- பல்கலைக்கழகங்களுக்கான அங்கீகார அமைப்பாகவும், நிதிநல்கை அமைப்பாகவும் மட்டுமே நிலைநிறுத்திக் கொண்டது என்பதுதான் இவ்வளவு சிக்கலுக்கும் காரணம்.
நிதிநல்கை என்பது மட்டுமே முக்கியமானதாக மாறியதால், தனியார் பல்கலைக்கழகங்களும், தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் அதிகரித்துவிட்ட நிலையில், அவர்கள் தரும் கருத்துருவை அப்படியே ஏற்று, நிதி வழங்குவதில் முறைகேடு நிகழ்ந்தது. தரப்பட்ட நிதிநல்கை எவ்வாறு செலவிடப்பட்டது என்பதிலும் சமரசம் செய்துகொள்ளப்பட்டது.
பல்கலைக்கழகங்களில் புதிய துறைகளை உருவாக்கி, அதற்கான பேராசிரியர், விரிவுரையாளர், பணியாளர் எல்லாவற்றையும் ஏற்படுத்தி பல்கலைக்கழக மானியக் குழுவிடம் நிதியைப் பெறுவார்கள். அந்தத் துறை சில ஆண்டுகளில் மாணவர்கள் பதிவு குறைந்து, வரவேற்பு குறைந்தபோதிலும், பல்கலைக்கழகம் அந்தத் துறையை மூடாது. அவசியமில்லாத ஒரு துறை நிதிச்சுமை என்று தெரிந்தாலும் பல்கலைக்கழக மானியக் குழு இதில் தலையிட்டு அத்துறையை முடித்துவைக்க முயலாது.
நூலகம், ஆய்வுக்கூடம் அமைப்பதற்காக நிதி பெற்ற தனியார் கல்வி நிறுவனங்கள், அவ்வாறு அமைக்காமல், ஆய்வுக்குழு வரும் நாளில் வேறொரு கல்லூரி அல்லது தங்களது மற்றொரு கல்லூரியிலிருந்து அவற்றைக் கொண்டு வந்து வைத்துக் காட்டி ஆய்வுக் குழுவினரைத் திருப்திபடுத்தும் சம்பவங்கள் ஏராளம்.
பல்கலைக்கழகங்களைத் தரவரிசைப்படுத்துவதிலும்கூடப் பெரும் ஊழல்கள், முறைகேடுகள் மலிந்தன. இதனால், பல்கலைக்கழகங்கள் தங்களை உலக அளவுக்குத் தரம் உயர்ந்தவையாக மாற்றிக்கொள்ளும் உந்துதலை இழந்தன. உலகில் உள்ள 200 சிறந்த பல்கலைக்கழகங்களில் இந்தியப் பல்கலைக்கழகங்களில் ஒன்றுகூட இடம் பெறவில்லை என்பதே பல்கலைக்கழக மானிய குழுவின் தோல்விக்குப் போதுமான காரணம்.
இந்தியாவில் உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை உயர்த்த, போதுமான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், காலத்துக்கேற்ற புதுப்புது பாடத் திட்டங்கள் என எதிலும் ஆர்வம் காட்டாத பல்கலைக்கழக மானியக் குழு தொடர வேண்டிய அவசியம் தெரியவில்லை. தற்போது கலைக்கப்படாது என்று மனிதவள மேம்பாட்டுத் துறை மறுப்புத் தெரிவித்தபோதிலும், ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்தே ஆக வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி

ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு தற்கொலைத் தாக்குதல் மிரட்டல்

நந்தா கலை, அறிவியல் கல்லூரிக்கு மத்திய அரசு ரூ.70 லட்சம் ஊக்க நிதி

கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு ரூ.5.7 கோடி கல்வி ஊக்கத்தொகை
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

