சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பெருமை சேர்க்காது!

சிகரெட் அட்டைப் பெட்டிகளின் மீது புகையிலை உயிருக்கு ஆபத்தானது என்பதை உணர்த்துகிற "நிழற்பட எச்சரிக்கை', அந்த அட்டைப் பெட்டிகளின் இரு புறங்களிலும்,

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:05 am

ஆசிரியர்

சிகரெட் அட்டைப் பெட்டிகளின் மீது புகையிலை உயிருக்கு ஆபத்தானது என்பதை உணர்த்துகிற "நிழற்பட எச்சரிக்கை', அந்த அட்டைப் பெட்டிகளின் இரு புறங்களிலும், அட்டையின் 85% அளவுக்கு பெரிதாக இருக்க வேண்டும் என மத்திய அரசு முன்பு எடுத்திருந்த முடிவின்படி, ஏப்ரல் 1, 2015 முதல் நிச்சயமாக அமல்படுத்துவோம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா ஒரு வாரத்துக்கு முன்பு உலக காசநோய் தின நிகழ்வில் உறுதி கூறியிருந்தாலும், இத்திட்டம் இப்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை நிறுத்தப்பட்டதற்குக் காரணம், நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரை. மக்களவை உறுப்பினர் திலிப் காந்தி (பா.ஜ.க.) தலைமையிலான துணை விதிகள் குழு இந்த நடைமுறையை சிறிது காலத்துக்கு நிறுத்திவைக்க அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு வரைபட எச்சரிக்கையைப் பெரிதாக அச்சிடுவதால் பீடி சுற்றும் தொழிலாளர்கள், புகையிலை விவசாயிகள் ஆகியோருக்கு ஏற்படும் சமூக, பொருளாதாரப் பாதிப்புகள் குறித்து மதிப்பீடு செய்யப்படும் வரை இந்த முடிவை நிறுத்திவைக்க வேண்டும் என்று காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காரணமே ஏற்கக்கூடியதாக இல்லை என்றால், திலிப் குமார் காந்தி தனது பேட்டியில், "புகையிலை பயன்படுத்துவதால்தான் புற்றுநோய் ஏற்படுகிறது என்பதை உறுதி செய்யும் இந்திய ஆய்வுகள் ஏதுமில்லை' என்று கூறியிருப்பது அதைவிட வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

இந்த விவகாரத்தில், குழுவின் பரிந்துரையைப் புறக்கணித்துவிட்டு, இந்திய மருத்துவ ஆய்வுக் குழுமம் (ஐ.சி.எம்.ஆர்.), எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் பரிந்துரையை ஏற்று நிறுத்திவைப்பது மத்திய சுகாதாரத் துறை மீது சந்தேகத்தை உண்டாக்குகிறது என்று கூறியிருக்கிறார் இந்தத் துறையின் முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ். புகையிலைக்கு எதிரான அமைப்புகள் பலவும் இதே கருத்தைக் கொண்டிருக்கின்றன.

உலக புகைப் பிடிப்பவர்கள் குறித்த ஆய்வு (GATS) 2010-இல் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் புகையிலைப் பழக்கத்தால் இறப்போர் எண்ணிக்கை ஆண்டுக்கு 10 லட்சம் பேர் என்றும், இவர்களில் 70 விழுக்காட்டினர் 30 வயது முதல் 69 வயது வரை உள்ளவர்கள் என்றும் அறிவித்தது. புகைப் பிடிக்கும் பழக்கம் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் 2020-ஆம் ஆண்டு புகையிலையால் உயிரிழப்போர் எண்ணிக்கை ஆண்டுக்கு 15 லட்சமாக உயரும் என்றும் கூறியுள்ளது.

மேலும், புற்றுநோயை ஏற்படுத்தும் கார்சியோஜெனிக் மூலக்கூறுகளின் 40 வகைப்பாடுகள் புகையிலையில் உள்ளன என்று ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 75,000 பேர் வாய்ப் புற்றுநோய்க்கு ஆட்படுகிறார்கள். இவ்வளவு அடிப்படையான ஆதாரங்கள் இருந்தும்கூட, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஏற்கெனவே முடிவு செய்தபடி வரைபட எச்சரிக்கையை அமல்படுத்தாமல் இருப்பது சரியல்ல.

இதனால், விவசாயிகளும், பீடித் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பது பொருந்தா வாதம். ஏனெனில், புகையிலைக்கு விலை கிடைக்காது எனத் தெரிந்தால், விவசாயிகள் மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய முனைவார்கள். அவர்களுக்கு ஒரு பருவத்துக்கு முன்பாகவே, புகையிலைக்கு இனி சந்தை இல்லை என்பதை உணர்த்திவிட்டாலே போதும். புகையிலையைத் தவிர அவர்களுக்கு வேறு பயிரைச் சாகுபடி செய்யத் தெரியாது என்று சொல்ல முடியாது. மேலும், புகையிலைதான் அவர்களது வாழ்வாதாரம் என்றால், அவர்கள் கஞ்சா விளைவிப்பதைக்கூட நியாயப்படுத்துவதாக ஆகிவிடும்.

இந்தியாவில் சுமார் 40 லட்சம் பேர் பீடித் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். பீடி சுற்றுவது குடிசைத் தொழிலாக வீட்டிலேயே நடைபெறுகிறது. இவர்களில் சரிபாதியினர் பெண்கள். இத்தொழில் நடைபெறும் ஒவ்வொரு வீட்டிலும், பள்ளி செல்லும் குழந்தைகள், வீடு திரும்பியதும் பீடி சுற்றுகிறார்கள் என்பதே கசப்பான உண்மை. "குழந்தை ஈட்டும் வருமானம் குடும்பத்துக்கே அவமானம்' என்ற வாசகம் அந்தக் குடும்பங்களில் செல்லுபடியாவதில்லை.

பீடித் தொழிலில் பதிவு பெற்ற, இலச்சினையுடன் விற்பனை செய்யும் பீடி நிறுவனங்கள் சுமார் 300 உள்ளன. மற்றவை அமைப்புசாராத் தொழிலாக நடைபெறுகிறது. இவர்களுக்கு முறையான ஊதியம் கிடைப்பதில்லை என்பது ஒருபுறமிருக்க, புகைப் பழக்கத்துக்கு அதிகம் ஆட்படுவோராகவும், புகையிலையால் அதிகம் பாதிக்கப்படுவோராகவும் இருப்பவர்கள் பீடித் தொழிலாளர்கள்தான். பீடி சுற்றுவதற்குப் பதிலாக, அதற்கு இணையான குடிசைத் தொழிலுக்கு இவர்களை மாற்றுவது முடியாத செயல் அல்ல.

மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) 5 முதல் 6 விழுக்காடு நிதியை மக்கள் நல்வாழ்வுக்குச் செலவிடும் நாடுகளில் மட்டுமே, அதிலும் அரசு மருத்துவமனை மூலமாக செலவிடும்போதுதான், மக்கள் மருத்துவப் பயன் பெறுகிறார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன. இந்தியாவில் (ஜி.டி.பி.யில்) 1.86% மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில், தொற்றாநோய்களின் (இருதய நோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்) ஒட்டுமொத்த நிலைக்களனாக இந்தியா உருவெடுத்து வருகிறது. இவ்வளவு சிக்கலில் புகைக்குத் தடைகூட அல்ல, நோய் கண்ட உடற்பகுதியை அச்சிட்டு அச்சுறுத்தும் வண்ணப்படமும் இல்லை கண்டாய்.... இது முறையா?

நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்களும், அரசும் பீடித் தொழிலாளர்களின், புகையிலை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக இந்த முடிவை எடுத்ததாகக் கூறுகின்றன. நமக்கென்னவோ, சிகரெட் நிறுவனங்களின் வற்புறுத்தலால் எடுக்கப்பட்ட முடிவாகத்தான் இது தோன்றுகிறது. இந்த முடிவு பிரதமருக்குப் பெருமை சேர்க்காது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.