/

மோடிக்கு வாழ்த்துகள்!

பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறாத கேரளம், தமிழகம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கும் போதிய இடமளிக்கப்படாதது ஏன் என்று தெரியவில்லை. இந்த மாநிலங்களில் கட்சி வளர வேண்டுமானால் அமைச்சரவையில் போதிய இடமளித்து முக்கியத்துவம் கொடுப்பது அவசியமல்லவா? கடந்த 25 ஆண்டுகளாக நடந்துவரும் கூட்டணி அரசுகளில், கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தங்கள் பிரதமரின் கையைக் கட்டிப் போட்டன.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:22 am

ஆசிரியர்

இந்தியாவின் 15ஆவது பிரதமராக 64 வயது நரேந்தர் தாமோதர்தாஸ் மோடி 45 அமைச்சர்களுடன் பதவி ஏற்றிருக்கிறார். ஏற்கெனவே வாஜ்பாயி அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்கள் இதில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே. ஏனைய அமைச்சர்கள் புதியவர்கள்.

தனிப்பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றாலும், ஒரு சில கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடமளித்திருப்பது, தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற பிரதமர் மோடியின் நல்லெண்ணத்தையே காட்டுகிறது.

பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறாத கேரளம், தமிழகம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கும் போதிய இடமளிக்கப்படாதது ஏன் என்று தெரியவில்லை. இந்த மாநிலங்களில் கட்சி வளர வேண்டுமானால் அமைச்சரவையில் போதிய இடமளித்து முக்கியத்துவம் கொடுப்பது அவசியமல்லவா?

கடந்த 25 ஆண்டுகளாக நடந்துவரும் கூட்டணி அரசுகளில், கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தங்கள் பிரதமரின் கையைக் கட்டிப் போட்டன. பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்தப் பிரச்னையே இல்லை. மேலதிகமான எதிர்பார்ப்புகளுடன் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் பிரதமர் மோடி, கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தத்தைக் காட்டித் தப்பித்துக்கொள்ள முடியாது. அவரது அமைச்சரவை, மிகக் குறுகிய காலத்தில் செயல்பட்டால் மட்டும் போதாது, மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை நிறைவேற்றி அவர்களது எதிர்பார்ப்பை விரைந்து ஈடுகட்டியாக வேண்டும்.

தனிக்கட்சி ஆட்சி அமைந்தால், மாநிலங்களின் உணர்வுகள் முழுமையாகப் பிரதிபலிக்காமல் போகும் என்கிற குற்றச்சாட்டு எப்போதுமே உண்டு. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்த காங்கிரஸ், பல மாநிலங்களில் செல்வாக்கு இழந்து மாநிலக் கட்சிகளிடம் ஆட்சியைப் பறிகொடுத்ததற்கு அதுதான் காரணம். மோடியின் அமைச்சரவையில் அத்தனை இடங்களையும் பாஜக வென்று குவித்த ராஜஸ்தான் போதிய பிரதிநிதித்துவம் பெறவில்லையே, ஏன்?  ஒரு சில மாதங்களில் அமைச்சரவை விரிவாக்கம் மேற்கொள்ளும் எண்ணத்தில் பிரதமர் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

பிரதமர் உள்ளிட்ட 5 பேர் மாநில முதலமைச்சர்களாக இருந்த அனுபவசாலிகள். அதனால் மத்திய மாநில உறவு புதிய பாதையில் திரும்பும் வாய்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது. மாநில முதல்வராக இருந்தபோது, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்து பல துறைகள் மாநில அரசுக்கு மாறவேண்டும் என்று குரலெழுப்பியவர் நரேந்திர மோடி. இப்போது தானே பிரதமராக அமர்ந்து விட்டிருப்பதால் அதை செயல்படுத்தும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. அதை நழுவ விடமாட்டார் என்று கருதலாம்.

பண்டித ஜவாஹர்லால் நேருவின் அமைச்சரவைக்குப் பிறகு இந்த அளவுக்குச் சிறிய அமைச்சரவை இதுவரை மத்தியில் அமைத்ததில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் 45 உறுப்பினர்கள் கொண்ட அமைச்சரவையில் இன்னொரு புதிய திருப்பம். மத அடிப்படையிலும், ஜாதி அடிப்படையிலும், பிராந்திய அடிப்படையிலும் அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்படாமல், திறமையும் துடிப்பும் உள்ள பல புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரிய அம்சம். அரசியல் வாரிசுகள் ஒருவரும் அமைச்சரவையில் சேர்க்கப்படாதது இன்னொரு சிறப்பம்சம்.

தனது பதவியேற்புக்கு, இந்தியாவின் அண்டை நாட்டுத் தலைவர்களை வரவழைத்தது பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திரத்திற்குக் கிடைத்திருக்கும் முதல் வெற்றி. அவர்கள் அனைவரையுமே தன்னை ஏற்றுக் கொள்ள வைத்திருப்பது புத்திசாலித்தனமான திட்டம். ஒருவகையில், தனது செல்வாக்கை அவர்களுக்கு உணர்த்துவதற்கு பதவியேற்பை பிரதமர் மோடி பயன்படுத்திக் கொண்டார் என்றுகூடக் கருத இடமிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானிலிருந்து உருவாகும் தீவிரவாதத்தை முடக்குவதும், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமையும், இந்திய மாநிலங்களைப் போல செயல்படும் நிலைமையையும் உருவாக்குவதும்தான் நிஜ வெற்றியாக இருக்க முடியும். அவர்களை அழைத்து கைகுலுக்கிப் பிரிவதால் எந்த நன்மையும் ஏற்பட்டுவிடாது.

குறைந்த அமைச்சர்கள், திறமையான அரசு' என்கிற குறிக்கோளில் தவறில்லை. ஆனால் ஒவ்வொரு துறையிலும் பல நூறு பிரச்னைகள் உள்ள, 120 கோடி மக்களையும் 29 மாநிலங்களையும் 7 யூனியன் பிரதேசங்களையும் கொண்ட ஒரு நாட்டைத் திறம்பட நிர்வகிக்க அதிகாரக் குவியல் உதவுமா என்பது சந்தேகமாக இருக்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களை நிர்வகிப்பதுபோல ஒரு தேசத்தை நிர்வகிக்க முயல்வது சரியா? திட்டம் போட்டு செயல்படும் பிரதமர் நரேந்திர மோடியால், இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்கள் வெற்றி பெற நமது வாழ்த்துகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.