தமிழகத்தில் கடந்த 2010-11ஆம் கல்வியாண்டில் 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளில் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டம் தற்போது 1 முதல் 10ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும், இதற்கான பாடப் புத்தகங்களில் இன்னமும் நிறைய பிழைகள் உள்ளதாகவும், இத்தகைய புத்தகங்களைப் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாகவும் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பாடப் புத்தகங்களில் காணப்படும் பிழைகளை நீக்கி, ஒவ்வோர் ஆண்டும் மேம்படுத்தி வெளியிட்டால்தான் இந்தக் கல்வி முறை தொடர்ந்து நீடிக்க முடியும் என்ற அவர்களது ஆதங்கம் நியாயமானது.