தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பிரமிப்பும் பெருமிதமும்!

ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி தொடங்கி மே மாதம் 12ஆம் தேதி வரை 9 கட்டமாக நடந்து முடிந்த 16ஆவது மக்களவைக்கான தேர்தலின் வாக்கெடுப்பின் முடிவு இன்று தெரிந்துவிடும்.

Updated On :15 மே 2014, 8:02 pm

ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி தொடங்கி மே மாதம் 12ஆம் தேதி வரை 9 கட்டமாக நடந்து முடிந்த 16ஆவது மக்களவைக்கான தேர்தலின் வாக்கெடுப்பின் முடிவு இன்று தெரிந்துவிடும். உலக சரித்திரத்தில் இப்படியொரு பிரம்மாண்டமான தேர்தல் வேறெங்கும் நடந்திருக்க வழியே இல்லை. அதனால்தான், நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையும், அதில் ஏறத்தாழ 30% மக்கள் வறுமையின் கோரப்பிடியிலும் இருக்கும் ஒரு தேசத்தில் எப்படி தேர்தல் நடத்தப்படுகிறது என்பதை நேரில் பார்த்துத் தெரிந்து கொள்வதற்காக ஏறத்தாழ 36 நாடுகளிலிருந்து பார்வையாளர்களும், பத்திரிகையாளர்களும் இந்தியாவில் வந்து குவிந்திருக்கிறார்கள்.

1952இல் நடந்த முதல் தேர்தலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை வெறும் 17.32 கோடி. அதில் வாக்களித்தவர்களோ 10.59 கோடி பேர் மட்டுமே. 16ஆவது மக்களவைக்கான இந்தத் தேர்தலில் முதன்முதலாக வாக்களித்திருக்கும் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கையே பத்து கோடியைத் தாண்டுகிறது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 81 கோடி.

முதல் பொதுத்தேர்தலில் 489 இடங்கள் கொண்டிருந்த மக்களவையில் 401 இடங்களுக்கு 1,874 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இப்போதைய தேர்தலில் பங்குபெறும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 8251. அந்த முதல் தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிட்ட அதிகபட்ச வேட்பாளர்கள் 14 பேர் மட்டுமே. இன்றோ, வாராணசியிலும் தென் சென்னையிலும் அதிகபட்சமாக 42 வேட்பாளர்கள் களமிறங்கி இருக்கிறார்கள்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால், காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகளின் எண்ணிக்கை 84. அதில் அரசியல் சட்டத்தின் அடிப்படையிலான நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்படுத்தி, அனைவருக்கும் வாக்குரிமை என்கிற ஜனநாயகக் கனவை நனவாக்கிக் காட்டியதுடன், தொடர்ந்து 62 ஆண்டுகள் வெற்றிகரமாக மக்களாட்சியை நிலைபெறச் செய்திருக்கும் ஒரே நாடு இந்தியா மட்டுமே. அதற்காக நாம் பெருமைப்பட வேண்டும்!

மக்களின் அபரிமிதமான செல்வாக்குடனும் ஆதரவுடனும் 17 ஆண்டுகள் பதவியில் தொடர்ந்த முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு நினைத்திருந்தால், இந்தியாவில் அமெரிக்காவைப் போன்று குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வழிகோலியிருக்க முடியும். இந்தியா போன்ற பல்வேறு கலாசாரங்களையும், மொழிகளையும் கொண்ட தேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது சர்வாதிகாரத்துக்கு வழிகோலக்கூடும் என்பதை உணர்ந்து கடைசிவரை நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிலைநிறுத்தியதில் அவர் குறியாக இருந்தாரே, அதற்காக நாம் பெருமைப்பட வேண்டும்!

ஐந்தாவது மக்களவையில் 518 இடங்களில் 352 இடங்களை வென்று அசுரப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்த பிரதமர் இந்திரா காந்தி, நீதிமன்றத் தீர்ப்பால் தனது தேர்தல் ரத்து செய்யப்பட்டபோது, அவசரநிலைச் சட்டத்தின் மூலம் அவர் அதிகாரத்தைக் கைப்பற்றியதை எதிர்த்து, கொதித்தெழுந்த இந்தியா நேருவின் மகளை, அவர்கள் நேசித்த இந்திராவை 1977இல் ஆட்சியிலிருந்து அகற்றியதே, அந்த ஜனநாயக உணர்வுக்காக நாம் பெருமைப்பட வேண்டும்!

1999இல் ஒரு வாக்கு வித்தியாசத்தில் நம்பிக்கைத் தீர்மானம் மக்களவையில் தோல்வியடைந்தபோது, அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி சிறிதும் தயங்காமல் குடியரசுத் தலைவரிடம் தனது பதவி விலகல் கடிதத்தை அளித்த அந்த உயர்ந்த ஜனநாயகப் பண்புக்காக நாம் பெருமைப்பட வேண்டும்!

இப்படி நாம் பெருமைப்பட எவ்வளவோ இருக்கின்றன. தேர்தலில் பணம் விளையாடுகிறது. வாக்குகள் விலைக்கு வாங்கப்படுகின்றன என்றெல்லாம் பரவலாகக் குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. இதனால் எல்லாம் ஜனநாயகம் தடம் புரண்டதா, பணநாயகம் ஜெயித்து விட்டதா என்றால் இதுவரையில் இல்லை.

குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. பணம் மட்டுமல்லாமல் ஜாதி, மதம், இன உணர்வு போன்றவை தூண்டப்படுவது இந்தியத் தேர்தலின் அங்கமாகத் தொடர்வது உண்மை. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்களும், தவறிழைத்தவர்கள் என்று ஒரு தேர்தலில் மக்களால் தண்டிக்கப்பட்டவர்களும் அரசியல் வனவாசம் போகாமல், அடுத்து வரும் தேர்தல்களில் போட்டியிட்டு மீண்டும் ஆட்சியில் அமரும் அவலம் தொடரத்தான் செய்கிறது. இந்தக் குறைகளையும் மீறி இந்திய ஜனநாயகம் வெற்றிநடை போடுகிறது என்றால் அதற்குக் காரணம், இந்திய மக்களிடம் பரவலாக இருக்கும் தெளிவும், அடிப்படை புத்திசாலித்தனமும்தான்.

16ஆவது மக்களவைக்கான தேர்தல் முடிவுகள், ஒரு நிலையான ஆட்சிக்கு வழிகோலுமேயானால், கடந்த கால் நூற்றாண்டு கால அரசியல் நிலையின்மைக்கு அது முற்றுப்புள்ளி வைக்க உதவும். இந்திய வாக்காளர்கள் புத்திசாலிகள். வாக்கு இயந்திரங்கள் நல்லதொரு முடிவை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்ப்போமாக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.