தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

எடைமேடையில் மன்மோகன் சிங்!

பிரதமர் மன்மோகன் சிங் மீண்டும் பிரதமர் பதவிப் போட்டியில் இல்லை என்பது அறிவிக்கப்பட்ட முடிவுதான் என்றாலும், பத்தாண்டு கால ஆட்சிக்குத் தலைமை வகித்தவர் தேர்தலில் விவாதப் பொருளாகவே இருக்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய வேடிக்கை.

Updated On :14 மே 2014, 8:21 pm

பிரதமர் மன்மோகன் சிங் மீண்டும் பிரதமர் பதவிப் போட்டியில் இல்லை என்பது அறிவிக்கப்பட்ட முடிவுதான் என்றாலும், பத்தாண்டு கால ஆட்சிக்குத் தலைமை வகித்தவர் தேர்தலில் விவாதப் பொருளாகவே இருக்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய வேடிக்கை. பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங்கைத் தனது நிதியமைச்சராக்கி தான் விரும்பிய பொருளாதார சீர்திருத்தங்களை அவரது உதவியால் நிறைவேற்றிக் கொண்ட நரசிம்மராவின் புத்திசாலித்தனத்தை இந்திய சரித்திரம் எப்படிப் பதிவு செய்து பாராட்டுமோ, அதேபோல, பிரதமராக சோனியா காந்தியால் நியமிக்கப்பட்ட மன்மோகன் சிங்கை வருங்காலம் பாராட்ட ஏதாவது இருக்குமா என்று தெரியவில்லை.

மன்மோகன் சிங் செயல்படாத பிரதமர் என்கிற குற்றச்சாட்டை, பிரதமர் அலுவலகம் மறுக்கிறது. தனது பத்தாண்டு பதவிக் காலத்தில் பிரதமர் மன்மோகன் சிங் 1198 உரைகள் நிகழ்த்தி இருப்பதாகவும், 1600 பத்திரிகை அறிக்கைகள் வெளியிட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிக்கைகளும், உரைகளும் முன்னுரிமை கொடுத்து ஊடகங்களால் வெளியிடப்படவில்லை என்பது அவர்களது குற்றச்சாட்டு. அதில் சிறிது உண்மையும் இருக்கத்தான் செய்கிறது. சோனியா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் தரப்பட்ட முக்கியத்துவம் கட்சியினரால் மட்டுமல்ல, அவரது அமைச்சரவை சகாக்களாலேயே பிரதமர் மன்மோகன் சிங்கிற்குத் தரப்படவில்லை எனும்போது ஊடகங்கள் மட்டும் முன்னுரிமை அளிக்கும் என்று அவர்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்?

பொருளாதார நிபுணர் என்று உலகமே மதித்து வியக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கின் தலைமையிலான பத்தாண்டு ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் வியத்தகு முன்னேற்றங்களை அடைந்ததா என்றால், பாராட்டும்படியாக இல்லை. முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருந்த இந்தியப் பொருளாதாரம் 2003-04இல் 8.2% வளர்ச்சியை அடைந்திருந்தது. அதே வேகத்தில் தொடர்ந்து அடுத்த மூன்றாண்டுகளில் மன்மோகன் சிங் ஆட்சியிலும் 9.57% வளர்ச்சியை எட்டியது என்னவோ உண்மை. இந்த வளர்ச்சிக்கு, முந்தைய ஆட்சி காரணமா, மன்மோகன் சிங் ஆட்சி காரணமா என்பதை அடுத்துவந்த ஆண்டுகள் வெளிச்சம் போட்டுவிட்டன. 9.57% வளர்ச்சி என்பது படிப்படியாகக் குறைந்து, இப்போது மன்மோகன் சிங் பதவி விலகும்போது 4.5% ஆகக் காட்சியளிக்கிறது.

மன்மோகன் சிங்கின் மிகப்பெரிய சாதனை, சர்வதேச நாடுகளுடன் நல்லுறவை வலுப்படுத்துவதில் அவர் காட்டிய முனைப்பு. வல்லரசு நாடுகள் கலந்து கொள்ளும் சர்வதேச மாநாடுகள் அனைத்திலும் கலந்து கொள்ள அவர் தவறியதே இல்லை. ஆனாலும்கூட, நமது அண்டை நாடுகளிடம் இந்தியா கடைப்பிடித்த அணுகுமுறை அவருக்குப் பெருமை தேடித்தரவில்லை. இலங்கைப் பிரச்னையில் மன்மோகன் சிங் அரசின் அணுகுமுறை அவரது சரித்திரத்தில் மிகப்பெரிய கரும்புள்ளி. அவரது கனவுத் திட்டமான இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமாவது வெற்றிகரமாக நிறைவேறி பயனளித்ததா என்றால் அதுவும் இல்லை.

பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல சாதனைகள் வெளியில் தெரியாமல் நடந்திருக்கின்றன. தகவல் பெறும் உரிமைச் சட்டம், கல்விக்கான உரிமைச் சட்டம், வன உரிமைப்பாதுகாப்புச் சட்டம், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் இழப்பீடு வழங்குதல் சட்டம், கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம், உணவுக்கான உரிமைச் சட்டம், இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம் தொடங்கி மொத்தம் 26 சட்டங்கள் மன்மோகன் சிங் அரசால் நிறைவேற்றப்பட்டு, இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தி இருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடலாகாது.

மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படாமல், மாநிலங்களவை உறுப்பினராகவே பத்து ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருந்தார் என்பது மட்டுமல்ல பிரதமர் மன்மோகன் சிங்கின் சாதனை. தனது கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாகவும், தான் பிரதமராகத் தொடர்வதற்குத் காரணமாகவும் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனிப்பெரும் தலைவரின் மகளை ஊழல் புகாரில் திஹார் சிறையில் அடைத்தும்கூட, தனது ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் அவரால் பிரதமராகத் தொடர முடிந்ததே, அது பெரிய சாதனை அல்லவா?

ஒரு கூட்டணி ஆட்சிக்குத் தலைமை வகித்து பத்து ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராகத் தொடர்ந்தார் என்பதுதான் பிரதமர் மன்மோகன் சிங்கின் மிகப்பெரிய சாதனையாக வருங்காலத்தில் பேசப்படக்கூடும். பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு என்று ஒரு சாமர்த்தியம் வேண்டும். அதிர்ஷ்டமும் வேண்டும். மன்மோகன் சிங்கிடம் அந்த இரண்டுமே இருந்தன!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.