நட்பும் நடப்பும்!
சமீப காலமாக இந்திய ஜப்பான் உறவில் நெருக்கம் அதிகரித்து வருவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஒன்றரை மாதத்திற்கு முன்பு ஜப்பானிய மன்னரும், ராணியும் ஆறு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு விஜயம் செய்தனர்.


சமீப காலமாக இந்திய ஜப்பான் உறவில் நெருக்கம் அதிகரித்து வருவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஒன்றரை மாதத்திற்கு முன்பு ஜப்பானிய மன்னரும், ராணியும் ஆறு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு விஜயம் செய்தனர். தெற்காசிய நாடு ஒன்றிற்கு ஜப்பானிய மன்னர் ஒருவர் விஜயம் செய்வது அதுதான் முதன்முறை.
அதேபோல, இப்போது ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபெ இந்த ஆண்டு இந்தியக் குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருப்பதும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியக் குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட முதல் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபெயாகத்தான் இருப்பார்.
பசிபிக் கடலில் ராணுவக் கூட்டுப் பயிற்சிக்கான ஒப்பந்தத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கும், ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபெயும் கையெழுத்திட இருக்கிறார்கள். குறிப்பிடத்தக்க ராணுவ ஒப்பந்தங்கள் எதுவும் இப்போது கையெழுத்திடப்படவில்லை என்றாலும், பாதுகாப்பு அமைச்சர்கள் ஏ.கே. அந்தோனியின் ஜப்பான் விஜயத்தின்போது சில ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படலாம்.
கடந்த பத்து ஆண்டுகளாகவே இந்திய ஜப்பான் உறவு கணிசமான முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது. வர்த்தக ரீதியாக கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான வர்த்தகம் 80 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இப்போது 18 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் வர்த்தகப் பரிமாற்றத்தை 25 பில்லியன் டாலர்களாக மாற்றுவது என்று இரண்டு நாடுகளும் இலக்கு நிர்ணயித்திருக்கின்றன.
இந்தியாவுக்கு மிக அதிகமாக நிதி உதவி அளிப்பதிலும் ஏனைய நாடுகளைவிட ஜப்பான் முன்னிலையில் இருக்கிறது. கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதில் இந்தியாவுக்கு அதிகமான ஒத்துழைப்பை நல்கும் நாடாகவும் ஜப்பான் விளங்குகிறது. மெட்ரோ ரயில், தொழில் நகரங்கள் நிறுவுதல், மின் உற்பத்தி நிலையங்கள், நெடுஞ்சாலை மற்றும் பாலங்கள் அமைத்தல் போன்றவற்றில் ஜப்பானியப் பங்களிப்பு மிக அதிகமாகவே இருக்கிறது.
தில்லி, மும்பை தொழிலக மண்டலங்கள் என்பது முழுக்க முழுக்க ஜப்பானிய உதவியுடன் நிறைவேற்றப்பட இருக்கும் மிகப்பெரிய திட்டம். இதன் மூலம் ஏழு தொழில் நகரங்கள் நிறுவப்பட இருக்கின்றன. 2558 கோடி ரூபாயில் சூரியஒளி மின்சாரம் தயாரிக்கும் நிலையம் நிறுவப்பட இருக்கிறது. ஜப்பானிய நன்கொடையாகவே தில்லியில் யமுனை நதியின் மீதான நிஜாமுதீன் பாலம் உள்ளிட்ட பல பாலங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இதையெல்லாம் எந்தவித விளம்பரமோ, ஆர்ப்பாட்டமோ இல்லாமல் ஜப்பானிய அரசு செய்திருக்கிறது என்பதுதான் ஆச்சரியம்.
இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் முடிவு காணப்படாமல் இருக்கும் விவகாரம் இந்திய - ஜப்பான் அணுசக்தி ஒப்பந்தம். அமெரிக்கா, பிரான்ஸ், ரஷியா போல அல்லாமல் ஜப்பான் இந்தப் பிரச்னையில் மிகவும் கவனமாகவே இருக்கிறது. இத்தனைக்கும் புகுஷிமா விபத்திற்குப் பிறகு ஜப்பான் அணுசக்தி மின்சாரத் தயாரிப்பைக் கணிசமாகக் குறைத்து விட்டதால், அங்கே இருக்கும் அணு உலைத் தயாரிப்பாளர்கள் இந்திய சந்தையில் தடம் பதிக்க விரும்புகிறார்கள். ஆனால், ஜப்பானிய அரசு இந்த ஒப்பந்தத்தை தாமதிப்பதற்குக் காரணம், தாங்கள் செய்துவிட்ட தவறை இன்னொரு நாடும் செய்துவிடக்கூடாது என்கிற நல்லெண்ணமா அல்லது அமெரிக்காவின் தலையீடா என்பது தெரியவில்லை.
இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் பல்வேறு சர்வதேசப் பிரச்னைகளிலும் ஒருமித்த கருத்து நிலவுகிறது. ஐ.நா. சபையின் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை இரண்டு நாடுகளுமே வலியுறுத்துகின்றன.
ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு சமீபகாலமாக மிகவும் கசந்திருப்பது உண்மை. குறிப்பாக, தென் சீனக் கடற்பகுதியில் ஏனைய நாடுகளின் உரிமைகளைக் கட்டுப்படுத்த சீனா முயல்கிறது என்கிற குற்றச்சாட்டின் பின்னணியில் ஜப்பானுக்குப் பின்னால் தென்கிழக்காசிய நாடுகள் அணி திரள்கின்றன. ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபெயின் இந்திய விஜயத்துக்கு முன்னால், அவர் பத்து தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு விஜயம் செய்திருப்பதால், சீனாவுக்கு எதிராக ஆசியாவின் ஏனைய நாடுகளை அணிதிரட்டுகிறது ஜப்பான் என்கிற சீனாவின் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.
பொருளாதார பலத்தாலும், ராணுவ வலிமையாலும் ஆசியாவில் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முற்படும் சீனாவின் முயற்சிகளுக்கு எதிரான ராஜதந்திர நீக்கமாக ஜப்பானியப் பிரதமரின் இந்திய விஜயத்தை உலகம் கருதக்கூடும். சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான வல்லரசுப் போட்டியில் சிக்கிக் கொள்ளாமல், அதே நேரத்தில் ஜப்பானுடைய நட்புறவை வலுப்படுத்திக் கொள்வதுதான் இந்தியாவுக்கு நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...