டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தார்மீக உரிமையில்லை!

பதினைந்தாவது மக்களவையின் கடைசி கூட்டத் தொடர். இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாக வேண்டும்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:19 am

ஆசிரியர்

பதினைந்தாவது மக்களவையின் கடைசி கூட்டத் தொடர். இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாக வேண்டும். இருப்பதோ வெறும் 12 நாள்கள். முதலில் மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதில்தானே ஓர் அரசு முனைப்பு காட்ட வேண்டும்? ஆனால் ரயில்வே பட்ஜெட் பற்றியோ, பொது பட்ஜெட் பற்றியோ, மானியக் கோரிக்கைகள் பற்றியோ கவலைப்படாமல், அமளியைக் கிளப்பும் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு இதுவாகத்தான் இருக்கும்.

இந்த கூட்டத் தொடரில் அரசு நிறைவேற்றத் துடிக்கும் 39 மசோதாக்களும் மிகவும் முக்கியமானவை என்பதில் கருத்து வேறுபாடே இல்லை. அதனால்தான், இந்த மசோதாக்கள் விரிவான விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட வேண்டும் என்று விவரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.

குறிப்பாக, நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவையில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அரசியல் சட்ட 118ஆவது திருத்த மசோதா பிரச்னைக்குரியது என்பது அரசுக்கு நன்றாகவே தெரியும். இதற்கு முன்னால் இந்த மசோதா எடுத்துக் கொள்ளப்பட்டபோதெல்லாம் கூச்சலும் குழப்பமுமாக அவை செயல்படாமல் முடங்கி இருக்கிறது. அப்படி இருக்கும்போது, அனைத்துக் கட்சிகளிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்தாமல் அவசர கதியில் இந்த மசோதாவை நிறைவேற்ற முற்பட்டால், அவை முடங்கும் என்பது அரசுக்குத் தெரியாதா?

இடித்துரைப்பாளர் பாதுகாப்பு மசோதா (விசில் ப்ளோயர்ஸ் ப்ரொடக்ஷன் பில்), நீதிபதிகள் நியமனம் தொடர்பான அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா, மாற்றுத் திறனாளிகள் உரிமை மசோதா போன்றவை அனைத்துக் கட்சியினராலும் ஆதரிக்கப்படும் என்றாலும், அந்த மசோதாக்களை விவாதமே இல்லாமல் நிறைவேற்றுவதால், பல முக்கியமான அம்சங்கள் விடுபட்டுப் போகக்கூடும். அரசுக்கு இதுகூடவா தெரியாது?

இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். தெலங்கானா மசோதா ஆளும் கட்சியினராலேயே எதிர்க்கப்படும் ஒன்று. காங்கிரஸ் ஆளும் மாநிலமான ஆந்திர பிரதேச சட்டப் பேரவை இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு எதிராகத் தீர்மானமே போட்டு அனுப்பி இருக்கிறது.

அந்த மசோதாவில் பல குறிப்பிடல்களை (ஷரத்துக்களை) தெலங்கானா ஆதரவாளர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை, எதிர்ப்பாளர்களும் ஒப்புக் கொள்ளவில்லை எனும்போது, அவசர கதியில் இப்படியொரு மசோதாவை நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? தெலங்கானா பகுதியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவு. பெரும்பான்மைப் பகுதி மக்களின் விருப்பத்திற்காக, விருப்பமில்லாமல் ஒரு பகுதி குறிப்பிட்ட மாநிலத்தின் அங்கமாகத் தொடர வேண்டும் என்று கூறுவது ஏற்புடையதல்லதான்.

தெலங்கானா பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்தி, அவர்களில் கணிசமான வாக்காளர்கள் பிரிந்து போக விருப்பப்பட்டால் தெலங்கானாவை தனி மாநிலமாக்க சீமாந்திரா மக்கள் தயாராக வேண்டும் என்று மத்திய அரசு எப்போதோ வேண்டுகோள் வைத்து அவர்களைத் தயார்படுத்தியிருக்க முடியும். ஆனால் காங்கிரஸ் கட்சியின் நோக்கம் அதுவல்லவே.

சீமாந்திரா பகுதியில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் வளர்ச்சியால் முற்றிலுமாக செல்வாக்கு இழந்துவிட்ட காங்கிரஸ் கட்சிக்கு 16வது மக்களவையில் ஆந்திரத்திலிருந்து ஒரு சில இடங்களாவது கிடைப்பதற்கு தெலங்கானாவை பயன்படுத்த முற்பட்டிருக்கிறது மத்திய அரசு. இன்றைய நிலையில் தெலங்கானா மசோதா கொண்டு வரப்பட்டால், மக்களவை அமளியில் மூழ்கும். மசோதா நிறைவேறாது. எதிர்க்கட்சிகள் மசோதா நிறைவேற்றுவதைத் தடுத்துவிட்டன என்று கூறி தெலங்கானாவில் சில இடங்களில் வெற்றி பெறலாம் என்பது காங்கிரஸின் கணக்காக (கனவாக!) இருக்கிறது.

மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலும்கூட இது போன்ற மசோதாக்கள், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு மாநிலங்கள் பிரிக்கப்படலாம்தான். பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியால் இந்த மசோதாவை எதிர்க்க முடியாது என்பதால், அரசு தெலங்கானா மசோதாவை நிறைவேற்ற முனைந்திருக்கிறது.

அரசியல் ஆதாயத்திற்காக, ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் பொறுப்பில்லாமல் செயல்பட்டால், அதன் பாதிப்பு அவர்களுக்கு மட்டுமல்ல. ஏற்கெனவே அரசியல்வாதிகள்மீது அவநம்பிக்கை கொண்டிருக்கும் மக்களுக்கு, மக்களாட்சியிலேயே வெறுப்பு ஏற்பட்டுவிடக் கூடும்.

கடைசிக் கூட்டத் தொடர். இடைக்கால நிதிநிலை அறிக்கைகள், மானியக் கோரிக்கைகள் போன்றவற்றை நிறைவேற்றிக் கொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அடுத்த அரசின் முடிவுக்கு இந்த மசோதாக்களை விட்டுவிடுவதுதான் நியாயம். அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த கதையாக 39 மசோதாக்களையும் நிறைவேற்றும் தார்மீக உரிமை இந்த அரசுக்குக் கிடையாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.