புள்ளிவிவரங்களுக்கும் நடைமுறை செயல்பாடுகளுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு காணப்படுவது இயற்கை. புள்ளி விவரங்களை மட்டுமே உண்மை நிலையின் அடையாளங்களாக நாம் எடுத்துக் கொள்ள முடியாதுதான். ஆனாலும், எந்த ஒரு நிர்வாகமும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில்தான் திட்டங்களைத் தீட்டியாக வேண்டும். கொள்கைகளை வகுத்தாக வேண்டும்.
சர்வதேச அளவில் எடுத்துக் கொண்டால் "உலக பட்டினிக் குறியீடு (குளோபல் ஹங்கர் இண்டெக்ஸ்), 1990-92 ஆண்டில் காணப்பட்ட நூறு கோடி பேர் உணவில்லாமல் பட்டினி கிடக்கும் நிலை மாறியிருப்பதாகவும், 2013இல் பெறப்பட்ட புள்ளிவிவரப்படி 870 லட்சம் பேர்தான் உலகில் பட்டினியில் வாடுவதாகவும் குறிப்பிடுகிறது.
உலகப் பட்டினிக் குறியீடு என்பது ஊட்டச்சத்துக் குறைவு, குழந்தைகளின் எடைக் குறைவு, சிசு மரணம் ஆகிய மூன்றின் அடிப்படையில் தயாரிக்கப்படுவது என்பதால், உலக பட்டினிக் குறியீடு என்கிற பெயரே பொருத்தமானதல்ல. இதன் அடிப்படையில் வெளியிடப்படும் பட்டினியில் வாடும் மக்களின் எண்ணிக்கைக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை.
அதேநேரத்தில், இந்தப் புள்ளிவிவரங்கள் நாம் சில அடிப்படைப் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள வழிகோலுகின்றன. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில், உலகிலேயே எடைக் குறைவான குழந்தைகள் அதிகம் உள்ள நாடு என்கிற சிறுமை 45.3% காணப்படும் தைமூர் என்றால், அதற்கு அடுத்த இடத்தைப் பிடித்திருப்பது 40.2% காணப்படும் இந்தியா என்பது பெருமைக்குரிய ஒன்றல்ல.
ஊட்டச்சத்துக் குறைவானவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் 2000இல் 21.3% இருந்த நிலைமை சற்று மாறி, 2010இல் 17.5% ஆகக் குறைந்திருக்கிறது. அதேபோல, ஐந்து வயதுக்குட்பட்ட சிசு மரணமும் இந்தியாவைப் பொருத்தவரை கவலை தரும் பிரச்னையாகத்தான் தொடர்கிறது.
சமீபத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்னொரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, சராசரி இந்தியனின் ஆயுள்காலம் கடந்த பத்து ஆண்டுகளில் ஐந்து வருடங்கள் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கிறது. சிசு மரண விகிதம், 2005இல் 1,000 குழந்தைகளுக்கு 58 ஆக இருந்தது, 2012இல் 42 ஆகக் குறைந்திருக்கிறது. தாய்மார்களின் பிரசவ கால மரணமும் 2001இல் லட்சம் பேருக்கு 301 ஆக இருந்தது 2007இல் 212 ஆகக் குறைந்திருப்பதாக அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
உலகளாவிய அளவில் எடுத்துக் கொண்டால், சராசரி மனிதனின் ஆயுள்காலம் பற்றிய புள்ளிவிவரப்படி இந்தியா 161ஆவது இடத்தில்தான் இருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் ஏறத்தாழ 18% மக்கள் இப்போதும் ஊட்டச்சத்தில்லாதவர்களாக இருப்பதுதான். அனைவருக்கும் உணவு என்பது தேர்தல் பிரசாரத்திற்கு வேண்டுமானால் உதவலாம். ஆனால் எதார்த்த நிலைமையில், அது இப்போதும் கானல் நீராக இருக்கும் நிலைமைதான் தொடர்கிறது.
அதிகரித்துவிட்ட உணவுப் பொருள்களின் விலையும், அதை எட்டிப் பிடிக்க முடியாத நிலையில் வாடும் மிகப்பெரிய அளவிலான மக்களும் என்கிற நிலைமையில் மாற்றம் ஏற்படாத வரையில் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது சுலபமல்ல. கணிசமான பேர், இப்போதும் ஆரோக்கியமான புரதச்சத்து மிகுந்த உணவுக்கு வழியில்லாத நிலைமையில், சராசரி இந்தியனின் மனித ஆற்றல் முழுமையாக பயன்படுத்தப்படுவதில்லை என்கிறது மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிக்கை ஒன்று. இந்த அறிக்கை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் மீது பழியைச் சுமத்துகிறது.
முன்பே குறிப்பிட்டதுபோல புள்ளிவிவரங்கள் மட்டுமே உண்மை நிலைமையின் அளவுகோலாக முடியாது. அமைச்சகத்துக்கு அமைச்சகம் புள்ளிவிவரங்களிலும் குறியீடுகளிலும் மாற்றங்கள் காணப்படுகின்றன. திட்டக் கமிஷன் இந்தியாவின் மக்கள்தொகையில் 22% வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பதாகத் தெரிவிக்கும்போது, மத்திய சுகாதாரத் துறை 18% பேர் ஊட்டச்சத்துக் குறைபாடானவர்கள் என்று குறிப்பிடுவதிலிருந்தே, புள்ளிவிவரங்களில் காணப்படும் முரண் வெளிப்படுகிறது.
அதனால், புள்ளிவிவரங்களை விடுவோம். விவரம் தெரிந்தவர்கள் ஏற்றுக்கொள்ளும் எதார்த்தம் - நிலைமை ஆரோக்கியமானதாக இல்லை என்பதுதான். அரசு என்னதான் சாதனைகளைப் பட்டியலிட்டாலும், சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகளாகிவிட்ட நிலையிலும், தனியொரு இந்தியன் பட்டினி கிடக்காமல் உறங்கவும், பாதுகாப்பான இடத்தில் தங்கவும், உழைப்புக்கு வழி காணவும் முடியாத நிலைமைதான் இப்போதும் தொடர்கிறது. இது எப்போது மாறுவது? யார் மாற்றுவது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

