மாற்றத்திற்கான அறிகுறி!
தில்லி செங்கோட்டையில் அமைந்த மேடையிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய அவரது முதலாவது சுதந்திர தின உரை, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.


தில்லி செங்கோட்டையில் அமைந்த மேடையிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய அவரது முதலாவது சுதந்திர தின உரை, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. முதன் முதலாக சுதந்திர இந்தியாவில் பிறந்த பிரதமர் ஒருவர் நிகழ்த்திய உரை என்பது அதன் முதல் சிறப்பு.
குண்டு துளைக்காத மேடைக்குப் பின்னால் நின்று கொண்டு சுதந்திர தின உரை ஆற்றாததைப் பிரதமர் மோடி சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அது அசாதாரணமான செய்தியை உலகுக்கு உணர்த்த முற்படுகிறது. எதற்கும் தயாரான, துணிவுடன் கூடிய பிரதமர் ஒருவர் நம்மை வழிநடத்துகிறார் என்கிற பாதுகாப்பை இந்தியக் குடிமக்களுக்கும், எந்தவிதமான தாக்குதலையும் சந்திக்கத் தான் தயார் என்கிற எச்சரிக்கையை இந்தியாவை சீர்குலைக்கவும் தகர்க்கவும் நினைக்கும் பிரிவினைவாத, தீவிரவாத சக்திகளுக்கும் அந்த "சாதாரண' நிகழ்வு உணர்த்துகிறது.
பிரதமர் மோடி துணிந்து குண்டு துளைக்காத மேடை வேண்டாம் என்று முடிவெடுத்ததற்குக் காரணம், இதன் மூலம் மக்களின் செல்வாக்கைப் பெறலாம் என்கிற திட்டமாகக் கூட இருக்கக் கூடும். ஆனாலும், அப்படியொரு முடிவெடுக்க யாருக்குத் துணிவு வரும்?
சாதாரணமாக, சுதந்திர தின உரை நிகழ்த்தும் பிரதமர்கள் அரசின் கொள்கை முடிவை வெளியிடவும், புதிய பல சலுகைகளை அறிவிக்கவும், அரசின் சாதனைகளைத் தம்பட்டம் அடித்துக் கொள்ளவும் அதைப் பயன்படுத்துவதுதான் வழக்கம். ஆனால், பிரதமர் மோடி மக்களின் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக் கையாள முற்பட்டது, அவரது சாதுர்யம் மட்டுமல்ல தேசத்தின் மீதான உண்மை அக்கறையும்கூட!
இந்தியாவின் நிம்மதியைக் குலைத்துக் கொண்டிருக்கும் பாலியல் வன்முறை பற்றிப் பெற்றோர்களின் மனசாட்சியுடன், பள்ளிகளில் கழிப்பறைகள் கட்டத் தங்களது லாபத்தில் ஒரு பங்கைத் திருப்பி விடும்படி நிறுவனங்களின் நிர்வாகங்களுடன், அவரவர் தொகுதியில் ஏதாவது ஒரு கிராமத்தை மாதிரி கிராமமாக உருவாக்கும்படி சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவர் தனது கருத்தை நேரிடையாகப் பகிர்ந்து கொள்ள முற்பட்டது இந்திய அரசியலுக்குப் புதிது.
ஐந்து ஆண்டுகளில் இந்தியாவை மாற்றிக் காட்டுவேன், குஜராத்தைப் பாருங்கள், நல்ல காலம் பிறக்க இருக்கிறது போன்ற தேர்தல் நேர கோஷங்களுக்கு விடை கொடுத்து விட்டு, நிர்வாகத்தின் பிரச்னைகளைப் பிரதமர் மோடி உணர்ந்து செயல்படத் தொடங்கி இருப்பது தெரிகிறது. தனக்கு முன்னால் பதவி வகித்த பிரதமர்களின் பங்களிப்பைப் பாராட்டி ஏற்றுக் கொள்ளவும், பெரும்பான்மையை (ஙஹத்ர்ழ்ண்ற்ஹ்) விடக் கலந்தாலோசனைக்கு (இர்ய்ள்ங்ய்ள்ன்ள்) முன்னுரிமை கொடுக்கவும், நாடாளுமன்ற மழைக்காலத் தொடர் வெற்றிகரமாக நடந்ததற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை அங்கீகரிக்கவும் முன்வரும் வித்தியாசமான, புதிய நரேந்திர மோடியை, அவரது சுதந்திர தின உரை அடையாளம் காட்டியது.
"நான் பிரதம மந்திரி அல்ல, பிரதம சேவகன்' என்றும் "மற்றவர்கள் 14 மணி நேரம் உழைத்தால், நான் 15 மணி நேரம் உழைப்பேன்' என்றும் அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி அடுத்த சுதந்திர தினத்திற்குள் இந்தியாவிலுள்ள அத்தனை பள்ளிகளிலும் கழிப்பறைகள் கட்டப்பட்டாக வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருப்பதற்கு அவரை எத்தனை பாராட்டினாலும் தகும்.
பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையின் மிகவும் முக்கியமான அம்சம், திட்டமிடுதலில் அவர் முன்வைத்திருக்கும் மாற்றுத் திட்டம். மத்திய திட்டக் குழு கலைக்கப்பட்டு அதற்குப் பதிலாக, மாநிலங்களின் உணர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய வளர்ச்சி வியூகம் அமைக்க அவர் முற்பட்டிருப்பது பாராட்டுதலுக்குரிய ஒன்று. மாநில முதல்வராக நரேந்திர மோடி இருந்ததன் அனுபவம், மத்திய அரசை வழிநடத்தப் பேருதவியாக இருக்கப் போகிறது.
மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி அடங்கி இருக்கிறதே தவிர, மத்திய அரசின் வலிமையிலும், அதிகாரக் குவிப்பிலும் மட்டுமே அல்ல என்பதை இனியாவது நாம் உணர்ந்து கொள்ள இருக்கிறோம் என்பது ஆறுதல். பிரதமரின் கண்ணோட்டம், முறையான கூட்டாட்சித் தத்துவத்திற்கு வழிகோலுமேயானால் அதுதான் வளமான இந்தியாவை உறுதிப்படுத்தும்.
கடைசியாக ஒரு வார்த்தை. தன்னை தில்லிக்கு "அந்நியன்' என்று இனியும் பிரதமர் நரேந்திர மோடி கூறிக்கொள்ள முடியாது. நிர்வாக இயந்திரம் ஒத்துழைக்க மறுக்கிறது. சரியாகச் செயல்படவில்லை என்றும் கூற முடியாது. லகானும் சவுக்கும் அவரிடம் தரப்பட்டுவிட்ட பின்னால், சண்டிக் குதிரைகள் என்று சாக்குச் சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியாது. அவரது பேச்சு செயலாகிறதா என்பதைப் பொருத்துத்தான் பிரதமர் நரேந்திர மோடியை மக்கள் கணிப்பார்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...