தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

நீதிபதிகள் நியமன ஆணையம் - V

தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு சட்டமாக இருக்கிறது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:32 am

ஆசிரியர்

தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு சட்டமாக இருக்கிறது. அதற்கு ஏதுவாக, இந்த ஆணையத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரம் அளிக்கும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, அதுவும் நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டத் திருத்தத்திற்கு மாநில சட்டப்பேரவைகளின் ஒப்புதல் கிடைத்த பிறகுதான், ஆணையம் செயல்படத் தொடங்கும். உச்சநீதிமன்றம் இந்த நியமன முறையை ஏற்றுக்கொள்ளப் போகிறதா, சட்டத் திருத்தத்தை அனுமதிக்கப் போகிறதா என்பதைப் பொருத்துதான் இதன் தலைவிதி அமையும்.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டப்படி, இந்த ஆணையம் ஆறு உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் தலைமையில் அமைய இருக்கும் இந்த ஆணையத்தில், உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் இருவர், மத்திய சட்ட அமைச்சர் ஆகியோருடன் இரண்டு முக்கிய பிரமுகர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்த இரண்டு உறுப்பினர்களும், சட்டத் துறையைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்கிற நிபந்தனை எதுவும் விதிக்கப்படவில்லை.

பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் அல்லது அதிக உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சியின் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய மூவர் குழுவிடம் ஆணையத்தின் உறுப்பினர்களாகச் செயல்படும் இந்த இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. நீதிபதிகள் அல்லாத, அரசுடன் தொடர்பில்லாத இரண்டு பிரமுகர்களை வெளியிலிருந்து ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கும்போது, அவர்களுக்கு இன்னின்ன தகுதி இருக்க வேண்டும், பின்னணி இருக்க வேண்டும் என்கிற விதிமுறைகளை, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தில் தெளிவுபடுத்தாமல் இருப்பது, உச்சநீதிமன்றத்தால் கேள்வி கேட்கப்படலாம்.

தேதிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின் ஆறு உறுப்பினர்களில் இரண்டு பேர், நீதிபதி நியமனத்திற்காகப் பரிசீலனையில் இருக்கும் நபரின் பெயரை நிராகரித்தால், அவர் நீதிபதியாக நியமிக்கப்படமாட்டார் என்கிறது புதிய சட்டம். ஆணையத்தின் ஐந்து உறுப்பினர்களுக்கு நல்லவராக இருந்தால் மட்டுமே ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்படுவார். அதாவது, நீதிபதி ஏ.பி. ஷாவின் பதவி உயர்வு தடுக்கப்பட்டதுபோல, பேசி வைத்துக் கொண்டு ஆணையத்தின் இரண்டு உறுப்பினர்கள் தங்களுக்கு வேண்டாதவர்களின் நியமனத்தைத் தடுத்துவிட முடியும் என்பது, புதிய சட்டத்தின் மிகப்பெரிய பலவீனம்.

எப்படி நேர்மையும் நாணயமுமில்லாத, ஊழல்வாதியான ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்படக் கூடாதோ, அதுபோலவே தகுதியும், திறமையும், சட்ட மேதைமையும், அனுபவமும், நேர்மையும், நியாயவாதியுமானவர்கள் உயர் நீதித்துறைப் பதவிகளை வகிப்பதும் முக்கியம். நீதிபதியாக இருப்பவர்கள் துணிவுடன், எந்தவிதச் சார்புமில்லாத, சுதந்திர சிந்தனையுள்ளவர்களாக இருக்கிறார்களா என்பதுதான் நீதித் துறை சுதந்திரத்தின் அளவுகோலாக இருக்க முடியும்.

அப்படிப்பட்டவர்கள், பொதுவாக அரசுக்கும், ஆணையத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நீதிபதிகளுக்கும் அடிபணிபவர்களாகவும், அடிவருடிகளாகவும், ஆட்சியாளர்களின் ஆதரவு பெற்றவர்களாகவும் இருக்க மாட்டார்கள். நீதிபதிகள் நியமன ஆணையத்தின் தேர்வு முறையில், நீதித்துறைக்கும் அரசுக்கும் ஏற்புடையவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட முடியும் என்பதால், அவர்களில் பெரும்பாலோர் நிச்சயமாக சுயசிந்தனையுடைய திறமைசாலியான நீதிமான்களாக இருக்க வாய்ப்பில்லை.

நீதித் துறை நியமனங்களில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது என்று சொல்வதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது.

இந்தியாவில், பெரும்பான்மையான வழக்குகள் அரசுக்கும், அரசுத் துறைகளுக்கும், அரசின் சட்ட திட்டங்கள், கொள்கை முடிவுகளுக்கும் எதிராகத் தொடுக்கப்படுபவைதாம். அரசின் பெருவாரியான முடிவுகள், அரசியல் சட்ட விவாதமாக நீதிமன்றங்களில் விசாரணைக்கு உள்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், நீதிபதிகள் நியமனத்தில் அரசின் தலையீடு என்பது நீதித் துறை சுதந்திரத்தை நிச்சயமாக பாதிக்கும்.

உயர் நீதித் துறை நியமனங்களில் வெளிப்படைத்தன்மையும், திறமைக்கு மட்டுமே முன்னுரிமை என்பதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. அரசியல் தலையீடு கூடாது என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நடைமுறையிலுள்ள நியமன முறை சரியானதல்ல என்பதும் உண்மைதான். ஆனால் இப்போதைய வடிவத்திலான தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் மேலே குறிப்பிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்குமா என்றால் நிச்சயமாக இருக்காது!

(முற்றும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.