/

இங்கேயுமா அரசியல்?

கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஏறத்தாழ செயலிழந்த நிலைமையில் காணப்பட்டது என்பதுடன் நின்றிருந்தால்கூடப் பரவாயில்லை.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:05 am

ஆசிரியர்

கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஏறத்தாழ செயலிழந்த நிலைமையில் காணப்பட்டது என்பதுடன் நின்றிருந்தால்கூடப் பரவாயில்லை. சௌத் பிளாக்கிலுள்ள பாதுகாப்பு அமைச்சக உயர் அதிகாரிகளுக்கும், ராணுவம், கப்பற்படை, விமானப்படை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கும் இடையேயான பனிப்போரும், முப்படைத் தளபதிகளில் சிலர் பாதுகாப்பு அமைச்சக உயர் அதிகாரிகளின் துணையுடன் தங்களைவிட மூத்த தளபதிகளைப் பின்தள்ளி விட்டு பதவி உயர்வு பெறும் அவலமும், இந்தியாவின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

முப்படைகளுக்கும் வாங்க வேண்டிய ராணுவ தளவாடங்கள் பலதும் வாங்கப்படவில்லை. தன்மீது ஊழல் புகார் எழுந்துவிடுமோ, தனது நல்ல பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடுமோ என்கிற பயத்திலேயே, செயல்படாமலே இருந்த சிறப்புக்குரியவர் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி. அமைச்சரவையின் பதவிக் காலம் முடியும் தறுவாயில், விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் ஆளாகும் வகையில் அவர் அறிவிக்க முற்பட்டிருக்கும் நியமனங்கள், அவர்மீது மரியாதை வைத்திருந்தவர்களையும்கூட முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

இந்தியக் கடற்படைத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் அட்மிரல் ஆர்.கே. தோவன் மே மாதத்துடன் பதவி ஓய்வு பெறவேண்டியவர். தலைமைத் தளபதியாக நியமிக்கபடுபவர் பதவி மூப்பு அடிப்படையில் அனுபவசாலியாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, நேரடியாகக் கடற்படையின் ஏதாவது ஒரு பகுதிக் கமாண்டராகத் தலைமைப் பொறுப்பில் பணியாற்றிய களப்பணி அனுபவசாலியாகவும் இருக்க வேண்டும் என்பது மரபு.

புதிய கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் அட்மிரல் ஆர்.கே. தோவனுக்கு அப்படிப்பட்ட அனுபவமும் இல்லை, பணிமூப்பு அடிப்படையில் அவர் மூத்த அதிகாரியும் அல்ல. இவர் ஏன் கடற்படையின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார் என்பது கடற்படை அதிகாரிகளுக்கே புதிராக இருக்கிறது. ராணுவ அமைச்சகம் பரிந்துரைத்தது, பிரதமர் அதை ஏற்றுக் கொண்டு அட்மிரல் ஆர்.கே. தோவனைக் கடற்படையின் தலைமைத் தளபதியாக நியமிக்க இசைவு தந்துவிட்டார், அவ்வளவே.

உயர்பதவி நியமனங்களை மன்மோகன் சிங் அரசு அடுத்து அமைய இருக்கும் அரசிடம் விட்டுவிடுவதுதான் முறையாக இருக்கும். அதிலும் குறிப்பாக, முப்படைகள் தொடர்பான நியமனங்களில் அவசரம் காட்டுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றுதான் கருதத் தோன்றுகிறது.

ஐ.என்.எஸ். சிந்து ரத்னா விபத்தில் இரண்டு கடற்படை அதிகாரிகள் இறந்த சம்பவமும், அதற்கு முன்னால் தொடர்ந்து நிகழ்ந்த சில விபத்துகளும் இன்னும் 15 மாதம் பதவிக்காலம் இருந்தும்கூட, முந்தைய தலைமைத் தளபதி அட்மிரல் டி.கே. ஜோஷி பதவி விலகவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தின. திறமையான தலைமைத் தளபதி என்று பெயர் எடுத்திருந்த அட்மிரல் ஜோஷி, தான் தார்மிகப் பொறுப்பேற்றுப் பதவி விலகுவதாகச் சொன்னபோது, அவரது விலகல் கடிதத்தை அரசு ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது என்பதுதான் விவரம் அறிந்த பலரின் கருத்து.

அட்மிரல் ஜோஷியின் பதவி விலகலுக்குப் பிறகு அடுத்த தலைமைத் தளபதியாக அட்மிரல் ஆர்.கே. தோவனை நியமிப்பதற்கு அரசுக்கு 50 நாள்கள் தேவைப்பட்டது என்றால், எந்த அளவுக்கு மெத்தனமாக இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, இந்தியக் கடற்படையின் தலைமைத் தளபதியாகப் பதவி ஏற்றிருக்கும் அட்மிரல் ஆர்.கே. தோவன், தனது சக தளபதிகளின் ஒத்துழைப்பையும், நன்மதிப்பையும் பெற்றாக வேண்டும். களத்தில் பணியாற்றும் மூத்த தளபதிகள் இவரை எப்படி ஏற்றுக் கொள்வார்கள், அவர்களிடத்தில் இவரது அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தியக் கடற்படையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றால் அதற்குக் காரணம் கடற்படை வீரர்களோ, தளபதிகளோ அல்ல. நம்மிடம் இருக்கும் போர்க்கப்பல்கள், நீர் மூழ்கிக்கப்பல்கள், தளவாடங்கள் ஆகிய எல்லாமே 20 ஆண்டுகள் பழையன. கடற்படை தனது தேவைகளைப் பட்டியலிட்டு அனுப்பினால், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளால் அவை கிடப்பில் போடப்படுகின்றன. போஃபர்ஸ் முறைகேட்டுக்குப் பிறகு, ராணுவ தளவாடங்கள் பெறுவதில் மிகுந்த சுணக்கம் காணப்படுவதுதான் அதற்குக் காரணம்.

ஊழல் குற்றச்சாட்டுக்கு பயந்து ராணுவத் தளவாடங்கள் வாங்காமல் இருப்பதுபோன்ற ஆபத்து எதுவுமே கிடையாது. சீனாவும், பாகிஸ்தானும், ஏன் சிறிய நாடான இலங்கைகூட, தங்களது ராணுவத்தை நவீனப்படுத்துவதிலும், பலப்படுத்துவதிலும் அக்கறை காட்டுகின்றன. நாமோ, அரசியல் பண்ணிக் கொண்டிருக்கிறோம். இது எங்கே போய் முடியுமோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.