/

இளைய பாரதத்தினாய் வா.. வா.. வா..

இன்று வாக்குச்சாவடிக்குப் போய் நமது ஜனநாயகக் கடமையைத் தவறாமல் நிறைவேற்ற வேண்டிய நன்னாள். எதற்காக சுதந்திரம், ஏன் மக்களாட்சி என்று சிலர் கேட்கலாம்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:05 am

ஆசிரியர்

இன்று வாக்குச்சாவடிக்குப் போய் நமது ஜனநாயகக் கடமையைத் தவறாமல் நிறைவேற்ற வேண்டிய நன்னாள். எதற்காக சுதந்திரம், ஏன் மக்களாட்சி என்று சிலர் கேட்கலாம். யார் ஆட்சியில் அமர்ந்தால் எனக்கென்ன என்று வினவலாம். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறப் போவதில்லையே என்று சலித்துக் கொள்ளலாம். மக்களாட்சி முறை ஏன் வேரூன்ற வேண்டும், தழைத்தோங்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் பல இருக்கின்றன.

உலகில் மன்னராட்சி, சர்வாதிகார ஆட்சி, ராணுவ ஆட்சி என்று பல்வேறு வகையான ஆட்சி முறைகள் உண்டு. அந்த ஆட்சிகளில் எல்லாம் இல்லாத ஒரு சிறப்பு மக்களாட்சிக்கு மட்டுமே உண்டு. சுதந்திரமாக செயல்படவும், ஆட்சியாளர்கள் தவறிழைத்தால், நமது தனியுரிமையில் தலையிட்டால் தட்டிக் கேட்கவும், போராடவும், அடுத்து நடைபெறும் தேர்தலில் அவர்களுக்கு எதிராக வாக்களித்து ஆட்சியிலிருந்து அகற்றவும் குடிமக்களுக்குத் தரப்பட்டிருக்கும் உரிமைதான் அது.

மக்களாட்சி அல்லாத ஏனைய ஆட்சிமுறைகளில் உங்கள் நிலம் அபகரிக்கப்பட்டால், வலுக்கட்டாயமாக உங்கள் வீட்டில் ஆட்சியாளர்களின் உறவினர்களோ, அடியாட்களோ, காவலர்களோ நுழைந்து உங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டால், வீட்டிலிருக்கும் பெண்களைத் துன்புறுத்த முற்பட்டால், மௌனம் காப்பது தவிர வேறு வழியில்லை. மக்களாட்சியிலும் இது நடைபெறாது என்பதில்லை. ஆனால், எதிர்த்துப் போராட முடியும். பாதிக்கப்படுபவருக்கு ஆதரவாக நல்லெண்ணம் கொண்டவர்களையும், எதிர்க்கட்சி அன்பர்களையும் ஒருங்கிணைத்துத் தெருவில் இறங்கியோ, நீதிமன்றக் கதவுகளைத் தட்டியோ நியாயம் கேட்க முடியும். அதுதான் வேறுபாடு.

உலகிலேயே சுதந்திரம் பெற்றது முதலே, அத்தனை குடிமக்களுக்கும் தங்களது தலையெழுத்தை நிர்ணயித்துக் கொள்ளும் வாய்ப்பை வாக்குச்சீட்டின் மூலம் கொடுத்த பெருமை இந்தியாவுக்கு மட்டுமே உண்டு. 67 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமை எப்படிப்பட்டது தெரியுமா? பத்தில் எட்டு பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. மக்கள்தொகையில் பாதிக்குப் பாதி பேருக்கு இரண்டு வேளை வயிறாறக் கஞ்சி குடிக்க வழி கிடையாது. அப்படிப்பட்ட நிலையிலும், ஒரு நிலையான மக்களாட்சி இங்கே மலர்ந்தது. எத்தனையோ பிரச்னைகளுக்கும் தவறுகளுக்கும் இடையே இப்போதும் தொடர்கிறது.

தவறுகள் நிறையவே நடக்கின்றன. தேர்ந்தெடுக்கப்படும் பெரும்பான்மையான வேட்பாளர்கள், நமது பிரதிநிதிகளாக செயல்படாமல் தங்களை வளப்படுத்திக் கொள்வதையே வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியில் அமரும் அரசியல் கட்சிகளும் சரி, அர்ப்பணிப்புணர்வுடன் தூய்மையும், நேர்மையும், எளிமையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றனவா என்றால் கிடையாது.

இதற்கு தவறான நபர்களைத் தேர்ந்தெடுத்த மக்களும்தானே காரணம். நாய்க்கு ரொட்டித் துண்டை வீசுவதைப் போல, பிச்சைக்காரர்களுக்கு நாணயங்களை விட்டெறிவதுபோல, சில அரசியல் கட்சிகள் விநியோகம் செய்யும் கரன்சி நோட்டுகளுக்காக சோரம் போய் வாக்குகளை விலை பேசும் வாக்காளர்களும் காரணம்.

ஒரு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை இந்தத் தேர்தல் நமக்கு அளித்திருக்கிறது. மெகா ஊழல்களாலும், தெளிவாகவும் துணிவாகவும் முடிவுகள் எடுக்க முடியாமல் திணறும் ஆட்சியாலும், சமச்சீரான முன்னேற்றம் ஏற்படாமல், 60% இந்தியா ஒளிரவும், 40% இந்தியா வறுமை என்கிற இருளில் மூழ்கவும் வழிகோலும் பொருளாதாரக் கொள்கைகளாலும் மக்களாட்சியே தடம் புரண்டு விடுமோ என்கிற நிலைமையில் நடைபெறும் இந்தத் தேர்தல், புதியதோர் பாதைக்கு தேசத்தை திசை திருப்பும் வாய்ப்பை நமக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இளைஞர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க இருக்கிறார்கள். இந்திய மக்கள்தொகையில் 65% பேர் 35 வயதுக்கு உள்பட்டவர்கள். 18 முதல் 23 வயதிலான முதல்முறை வாக்காளர்கள் மொத்த வாக்காளர்களில் 14%. இவர்கள் தவறாமல் வாக்குச்சாவடிக்குப் போய், நேர்மையும் திறமையும் உள்ள புதியதோர் தலைமைக்கு வாக்களித்தாலே போதும், இந்தியாவின் தலையெழுத்தைத் திருத்தி எழுதிவிட முடியும். உங்கள் வாக்கைப் பதிவு செய்ய பல தடைகள் இருக்கத்தான் செய்யும். அதைத் தாண்டி வாக்கைப் பதிவு செய்யுங்கள். அதன் மூலம் மாற்றத்திற்கு வழிகோலுங்கள்.

வெற்றி பெறும் கட்சிக்கு வாக்களிக்கும் போக்கையும், வசன வியாபாரிகளின் வார்த்தை ஜாலங்களில் மயங்கும் போக்கையும், வாக்குகளை விலைபேசும் போக்கையும் விட்டு விட்டு, இதற்கு முன்னால் வாக்களித்து வாக்களித்து ஏமாந்து போனது போல மீண்டும் ஏமாறாமல், மாற்றத்திற்கு வாக்களியுங்கள். மனசாட்சிப்படி வாக்களியுங்கள். எந்தக் கட்சி வெற்றி பெற்றால் இந்தியா வல்லரசாகுமோ அந்தக் கட்சிக்கு வாக்களியுங்கள்.

வாக்களிக்காமல் மட்டும் இருந்துவிடாதீர்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.