நவீன மிட்டா மிராசுதாரர்கள்!
பெரும்பாலான கிராமவாசிகள் இன்னும் சொந்த கிராமங்களிலேயே தங்கி வாழ்கின்றனர். நகர்ப்புற சாலையோரங்களில் வேர்விட விருப்பமில்லாமல் சொந்த கிராமத்திலேயே கிடந்து உயிர்விட முடிவு செய்கின்ற விவசாயிகளின் எண்ணிக்கை கணிசமான


கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் விவசாயத் தொழிலைக் கைவிட்டவர்கள் 8.67 லட்சம் பேர் என்று 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதாவது 2001-ஆம் ஆண்டு தமிழக விவசாயிகள் எண்ணிக்கை 51.16 லட்சமாக இருந்தது. தற்போது 42.48 லட்சமாகக் குறைந்துவிட்டது.
இந்தியா விவசாய நாடு என்பது பொய்யாய் பழங்கதையாய் மாறிக்கொண்டிருக்கிறதா என்று கேட்டால், அப்படியும் சொல்வதற்கில்லை. நிகழாண்டில் இந்தியாவின் மொத்த உணவு தானிய உற்பத்தி 255.36 மில்லியன் டன். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 260 மில்லியன் டன் உற்பத்தியை அடைந்து, சாதனை நிகழ்த்தப்போகிறோம் என்பது உறுதி.
அதாவது, இந்தியாவில் விவசாய உற்பத்தி குறைந்துவிடவில்லை. ஆனால், விவசாய நிலப்பரப்பு குறைந்து வருகிறது. விவசாயத்தைக் கைவிடுவோர் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர். இந்த முரண்பாட்டைப் புரிந்துகொள்ள இன்னொரு புள்ளிவிவரத்தையும் நாம் பார்த்தாக வேண்டும். அது, விவசாயக் கூலித் தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!
2001-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 86.37 லட்சமாக இருந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள் எண்ணிக்கை, 2011-இல் 96.06 லட்சமாக உயர்ந்துள்ளது. அதாவது சுமார் 10 லட்சம் பண்ணைத் தொழிலாளர்கள் அதிகரித்துள்ளனர்.
இந்தப் புள்ளிவிவரம் உண்மையில் எதைக் காட்டுகிறது?
கிராமங்களில் உள்ள விவசாயிகள் வறுமையின் காரணமாகவோ, அல்லது அரசியல்வாதிகளின் "ரியல் எஸ்டேட்' அடாவடித்தனத்தாலோ, அல்லது அரசின் நிலஆக்கிரமிப்புகளாலோ தங்கள் வேளாண் நிலங்களை விற்றுவிட்டு விவசாயக் கூலித்தொழிலாளர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் இதன் மூலம் உணர முடிகின்றது.
50 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி ஊர் பணக்காரர்கள், நிலவுடைமையாளர்கள் மட்டுமே பஞ்சாயத்துத் தலைவர்களாகவும் எம்எல்ஏ-க்களாகவும் பதவியில் இருந்தார்களோ, அதேபோன்று, இப்போது யாரெல்லாம் ஊர் பஞ்சாயத்துத் தலைவர்களாக இருக்கிறார்களோ அவர்களெல்லாம் ஊர் பணக்காரர்களாகவும் நிலவுடைமையாளர்களாகவும் உருமாறிக்கொண்டிருக்கின்றனர். அதாவது "மிட்டா மிராசுதாரர்களாக' மாறிவருகின்றனர். எழுதப்படாத ஜமீன்தாரர்களாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். விளைநிலங்களை வளைத்துப் போடுகிறார்கள். இதற்கு அரசு திட்டங்களின் ஊழலும் முறைகேடும் இடம் தருகிறது.
எந்தக் கட்சி சார்பில் பதவிக்கு வந்தாலும் அல்லது சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், ஒரு முறை பஞ்சாயத்துத் தலைவராக, ஒன்றியத் தலைவராக ஐந்து ஆண்டுகள் பதவி வகித்துவிட்டால், அதன் பிறகு அவர் அந்த ஊரின், பஞ்சாயத்தின் பெரும்பணக்காரராகி விடுகிறார். அந்தப் பகுதியில் அவரது இல்லம், "தலைவரின்' வீடாகிவிடும். இதுதான் இன்றைய கிராமத்தின் பேச்சு வழக்கு.
சென்னைப் புறநகர் பகுதிகளிலுள்ள பஞ்சாயத்துகளின் தலைவர் தேர்தலுக்குப் போட்டியிடுவோர், குடும்பத்திற்கு ஒரு பவுன் தங்கமும், வாக்காளருக்கு ஐயாயிரம் ரூபாய் ரொக்கமும், பட்டு வேட்டி, சட்டை அல்லது பட்டுப் புடவை வழங்குதல் என்பது கட்டாயமாகி விட்டிருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இப்படிச் செலவழிப்பதன் பின்னணியைச் சொல்லியா தெரிய வேண்டும்?
விவசாயம் லாபகரமாக இல்லை என்பதால், விவசாயத்தைப் பலரும் கைவிட்டு, நகரங்களுக்கு வேலை தேடிச் செல்வதாக சொல்லப்பட்டாலும், இதற்கு ஆதாரமாக ""கிராமப்புறங்களில் வாழ்வோர் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 51.6% மட்டுமே'' என்று கூறினாலும் இது ஓரளவுக்கே உண்மை.
கிராமப்புறங்களில் வாழ்வோர் எண்ணிக்கை குறையக் காரணம், நகர்ப்புறங்களில் மக்கள் தொகை அதிகரிப்பு அதிகம் என்பதுதான். கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 97 லட்சம் அதிகரித்துள்ளது என்றால், இதில் 23 லட்சம் கிராமப்புறங்களிலும், 74 லட்சம் நகர்ப்புறங்களிலும் அதிகரித்துள்ளது. ஆகவே கிராமப்புறத்துக்கு இணையாக மக்கள் தொகை நகரங்களில் உயர்கின்றது.
பெரும்பாலான கிராமவாசிகள் இன்னும் சொந்த கிராமங்களிலேயே தங்கி வாழ்கின்றனர். நகர்ப்புற சாலையோரங்களில் வேர்விட விருப்பமில்லாமல் சொந்த கிராமத்திலேயே கிடந்து உயிர்விட முடிவு செய்கின்ற விவசாயிகளின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு இப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இத்தகைய மண்ணின் மைந்தர்கள் பாவம், தங்கள் நிலத்தை விற்றாலும், இழக்க நேர்ந்தாலும், அதே நிலத்தில் தங்கள் வியர்வை சிந்தி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் தாழ்த்தப்பட்ட இனத்தவர்களும் அல்லாதவர்களும் சரிபாதியாக உள்ளனர் என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.
விவசாயத்தை நேசிக்கும் இவர்களை வாழவைத்து விவசாயத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் வழிமுறைகளைக் காண்பதுதான் நாளைய தலைமுறைக்கு நன்மை சேர்க்கும். மத்திய, மாநில அரசுகளின் கடமையும் அதுவே.
இன்றைய புதிய நிலவுடைமையாளர்கள் இந்த மண்ணின் மைந்தர்களை "புதிய கொத்தடிமைகளாக' மாற்றிவிடாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எவை; இவர்கள் மீண்டும் சொந்தமாக விவசாயம் செய்வதற்கு என்ன திட்டங்கள் உதவும்; நில உச்சவரம்பு சட்டத்தில் தற்போது உள்ள ஓட்டைகள் என்ன; விவசாய நிலங்களைப் பல ஏக்கருக்கு வாங்கிப்போட்டு, விவசாயம் செய்யாமல், ரியல்-எஸ்டேட் விலை உயர்வுக்குக் காத்திருக்கும் "புதிய ஜமீன்தார்'களை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் சிந்திக்க வேண்டும்.
"மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்' மூலம் 100 நாள்களுக்கு கூலி கிடைக்கச்செய்வது, விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் "கைச்செலவுக்கு'ப் பயன்படுமே தவிர, விவசாயத்தைக் காப்பாற்றப் பயன்படாது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...