விபரீதங்களுக்கு அச்சாரம்!
தர்மபுரி தலித் இளைஞர் இளவரசன் உடலை அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) மருத்துவர்களைக் கொண்டு இரண்டாவது உடற்கூறு பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது துரதிருஷ்டவசமானது.


தர்மபுரி தலித் இளைஞர் இளவரசன் உடலை அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) மருத்துவர்களைக் கொண்டு இரண்டாவது உடற்கூறு பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது துரதிருஷ்டவசமானது.
"தமிழ்நாட்டில் இல்லாத மருத்துவர்களா? தமிழ்நாட்டில் இல்லாத சிறந்த தடயஅறிவியல் வல்லுநர்களா? தயாளு அம்மாள் வழக்கில் "எய்ம்ஸ்' மருத்துவர் குழு அறிக்கையை நீதிமன்றம் வலியுறுத்தக் காரணம், அந்த வழக்கு தில்லியில் நடைபெறுகிறது என்பதால்தான். அதே நடைமுறையை இளவரசன் மரணத்திலும் கடைபிடிக்க வேண்டிய அவசியம் என்ன? மற்றொரு மருத்துவக் குழுவை தமிழ்நாட்டிலிருந்தே அமைத்திருக்க முடியாதா?' இத்தனை கேள்விகளுக்கும், "இருக்கிறார்கள்' "முடியும்' என்ற பதில்கள் நிச்சயம் கிடைக்கும். ஆனால் இளவரசன் மரணம் அரசியலாக்கப்பட்டுவிட்டதால், நீதிமன்றம்கூட, அரசியல் கட்சிகளின் விமர்சனத்துக்கும் பற்கடிப்புக்கும் உட்பட விரும்பவில்லை என்பதுதான் இதற்குக் காரணம்.
இதன் மூலம், தமிழ்நாட்டில் பல தவறான கருத்தாக்கம் உருவாகும் என்பது நிச்சயம். ஒன்று, தமிழக மருத்துவர்கள் வல்லுநர்கள் அல்ல; இரண்டு, தமிழக மருத்துவர்கள் கட்சிரீதியாக, ஜாதிரீதியாகப் பிரிந்து அறிக்கை அளிப்பார்கள்; மூன்று, சந்தேகத்துக்குரிய மரணங்களை இனி வெளிமாநில மருத்துவர்கள் குழு வந்து உடற்கூறு சோதனை நடத்தினால் மட்டுமே நம்ப முடியும். இப்படியான கருத்தாக்கம் பரவுவது தமிழகத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.
சில வழக்குகளில், கூடுதலாகத் தேவைப்படும் சான்றுகளுக்கான ஆய்வு வசதிகள் தமிழகத்தில் இல்லை என்பதால் அத்தகைய சிறப்பு ஆய்வுக்கூடங்களுக்கு மாதிரிகளை அனுப்பி ஆய்வு நடத்தும்படி நீதிமன்றம் பரிந்துரை செய்வது வழக்கமான ஒன்று. உதாரணமாக, சில மரபணுச் சோதனைகள் நடத்தும் தேவை இருப்பின், உயரிய தரமான ஆய்வுக்கூடங்கள் தமிழ்நாட்டில் இல்லை என்கின்றபோது, அவை மும்பை, ஹைதராபாத், தில்லி போன்ற இடங்களில் உள்ள நவீன மருத்துவ ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பப்பட்டன. அறியப்படாத விஷம் கலக்கப்பட்ட உணவினால் இறந்திருக்கலாம் என்று சந்தேகம் இருப்பின் அந்த உணவின் மிச்சங்கள் மும்பை, தில்லி, சில வேளைகளில் வெளிநாடுகளுக்கும் கூட, அனுப்பப்பட்டு, அறிக்கை கோரப்படுவதும் இயல்புதான்.
இளவரசன் மரணம் தொடர்பான வழக்கு சிக்கலானது அல்ல; ஆனால், சமூகக் கொந்தளிப்பானது. இளவரசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது பெற்றோர் கூறுகின்றனர். வழக்கை தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டுள்ள தமிழ்நாடு காவல்துறை இதனை இன்னமும் கொலை வழக்காக மாற்றவில்லை. இந்தக் கொலைக்குத் தொடர்புடையவர்கள் என யாரையும் சந்தேகத்தின்பேரில் கைது செய்யவும் இல்லை.
"ஜிப்மர்' மருத்துவமனை நிபுணர்கள் 2 பேர், சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவர் ஒருவர், சென்னை சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவர் ஒருவர் என ஏற்கெனவே பிரேத பரிசோதனை நடத்திய டாக்டர்கள், உடற்கூறு சோதனையின் "விடியோ' பதிவை உயர்நீதிமன்ற வளாகத்தில் பார்த்து, தனித்தனியாக அறிக்கை அளித்தனர். மருத்துவப் பரிசோதனை நடைபெற்ற இடத்தில் போதுமான வெளிச்சம் இல்லை என்பது போன்ற குறைபாடுகளை இவர்கள் சுட்டிக்காட்டிய போதிலும், இவர்களின் பெரும்பான்மை முடிவு மறுஉடற்கூறு சோதனை தேவையில்லை என்பதுதான்.
கூடுதல் ஆய்வு தேவை என்று நீதிமன்றம் கருதுமெனில், எத்தகைய கனமான பொருள் எந்த வேகத்தில் மோதியிருந்தால் இந்த அளவுக்கு மண்டை உடைந்திருக்கும் என்பதை அறிவியல்பூர்வமாக நிறுவ, மண்டையோட்டை மட்டும் நவீன ஆய்வுக்கூடத்தில் சோதனைக்கு உட்படுத்துவதாகத்தான் இருக்கமுடியும்.
இருப்பினும், இரண்டு டாக்டர்கள் கொண்ட புதிய குழுவை நீதிமன்றம் நியமித்தது. ஏழு பேர் அறிக்கையைத் தொடர்ந்து இத்தகைய முடிவை எடுத்தது ஏன் என்று நீதிமன்றம் குறிப்பிடுகையில், "உடற்கூறு சோதனை தவறாக நடந்தது என்று நாங்கள் சந்தேகப்பட எந்தக் காரணமும் இல்லை. எனினும் நியாயமற்ற ஒரு கோரிக்கையை (மறு உடற்கூறு சோதனை) மனுதாரர் வலியுறுத்தவில்லை என்பதிலும் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இது ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களில் ஒருவருடைய நீதிக்கான அழுகுரல் என்பதால், நீதி காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக, இந்த மனு குறித்து, ஒரு வரையறை வரைக்கும் நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டியுள்ளது' என்று நீதிமன்றம் கூறியது.
இந்த நடைமுறையை 3 மருத்துவர் கொண்ட குழுவை நியமித்திருந்தால், பெரும்பான்மை முடிவைக் கொண்டு, இந்த விவகாரத்தை தமிழ்நாட்டுடன் முடித்து வைத்திருக்கலாம். தற்போது இரண்டு மருத்துவர் குழுவில் இருவரும் இருவேறு கருத்துகளைக் கூறியுள்ள நிலையில், புதுதில்லி "எய்ம்ஸ்' மருத்துவமனை டாக்டர்கள் குழுவை அழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இனி ஒரு நபர் சந்தேகத்துக்கு இடமான சூழலில் மரணமடைந்தால், அரசியல் கட்சிகளின் ஆதரவு அவருக்கு இருக்குமானால், அவரது வழக்கை எந்த ஜாதியைச் சேர்ந்தவர் விசாரிக்க வேண்டும், எந்த ஜாதியைச் சேர்ந்தவர் உடற்கூறு பரிசோதனை செய்ய வேண்டும்; எந்த ஜாதியைச் சேர்ந்த நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் என்று வெளியிலிருந்து கொடுக்கப்படும் அரசியல் நிர்பந்தங்கள் வழக்கமான ஒன்றாக மாறும்.
இனி, ஒவ்வொரு ஜாதிச் சங்கமும் ஜாதிக் கட்சியும் அவரவர் ஜாதியினரின் மரண வழக்குகளில் அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் நிபந்தனைகள் விதிக்கும் அவலம் அரங்கேறும்.
ஒரு தவறான முன்னுதாரணம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...