கேஜரிவாலுக்கு வாழ்த்துகள்!
அரவிந்த் கேஜரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி தில்லியில் ஆட்சியமைக்க முடிவெடுத்திருப்பதை, இந்திய அரசியலில் ஒரு புதிய திருப்பமாகவும், மக்களாட்சித் தத்துவத்துக்குக் கிடைத்திருக்கும் வெற்றியாகவும் கருத வேண்டும்.


அரவிந்த் கேஜரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி தில்லியில் ஆட்சியமைக்க முடிவெடுத்திருப்பதை, இந்திய அரசியலில் ஒரு புதிய திருப்பமாகவும், மக்களாட்சித் தத்துவத்துக்குக் கிடைத்திருக்கும் வெற்றியாகவும் கருத வேண்டும். உலக ஜனநாயக சரித்திரத்தில், சிறுபான்மை அரசு அமைப்பதா வேண்டாமா என்று மக்கள் கருத்தை அறிந்து கொள்ள முற்பட்ட முதல் அரசியல் கட்சி ஆம் ஆத்மி கட்சியாகத்தான் இருக்கும். ஆங்காங்கே கட்சியின் உறுப்பினர்கள் மக்கள் சபைகளை அமைத்து, அவர்களின் கருத்துகளை கேட்டு முடிவுகளை எடுப்பது என்பதே, அதிகாரம் மையப்படுத்தப்படும் அரசியல் சூழலில் வீசியிருக்கும் புதுத் தென்றல்.
70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவையில் 28 உறுப்பினர்கள் மட்டுமே உள்ள ஆம் ஆத்மி கட்சி, எட்டு உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முற்பட்டிருப்பதில் தவறு காண முடியாது. தாங்கள் ஆட்சி அமைக்கவில்லை என்று 31 இடங்களை வென்ற பாரதிய ஜனதா கட்சி தனது ஜனநாயகக் கடமையிலிருந்து நழுவும்போது, நாங்களும் ஆட்சி அமைக்கப் போவதில்லை என்று ஆம் ஆத்மி கட்சியும் பிடிவாதம் பிடித்து மறு தேர்தலுக்கு வழிகோலியிருந்தால், அதை அரசியல் இயலாமையாக விமர்சித்திருப்பார்கள். கட்சி தொடங்கிய ஓராண்டிற்குள் ஆட்சியில் அமர்வது என்கிற அசாத்தியமான சாதனை புரிந்திருக்கும் ஆம் ஆத்மி கட்சியை பாராட்ட வேண்டுமே தவிர, அரசியல் சந்தர்ப்பவாதம் என்று இடித்துரைப்பது பொறாமையின்பாற்பட்டதாக இருக்குமே தவிர அரசியல் நாகரிகம் சார்ந்ததாக கருதப்படாது.
காங்கிரஸின் ஆதரவுடன் அரசு கட்டிலில் அமர்ந்தவர்கள் அனைவருமே வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள், அடையாளம் தெரியாமல் அழிந்திருக்கிறார்கள் என்பது உண்மை. சரண் சிங், சந்திரசேகர், தேவெ கெüட, ஐ.கே. குஜ்ரால் போன்று தேசிய அளவில் பல உதாரணங்கள் காட்டப்படுகின்றன. ஆனால், அவர்களுக்கும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவாலுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அவர்களுக்கு இல்லாத மக்கள் செல்வாக்கு அரவிந்த் கேஜரிவாலுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இருக்கிறது. தில்லியில் அமைய இருக்கும் ஆம் ஆத்மி கட்சி அரசை காங்கிரஸ் கவிழ்க்க நேரிட்டால், ஆம் ஆத்மி கட்சிக்கு அனுதாப அலையை ஏற்படுத்தி, ஒருவேளை தனிப் பெரும்பான்மையை அது ஏற்படுத்தக்கூடும் என்பது மட்டுமல்ல, காங்கிரஸின் மீதான வெறுப்பை மேலும் அதிகரிக்கவும் அது வழிகோலும் என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது.
ஆம் ஆத்மி கட்சி பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருப்பதால், அவற்றை எல்லாம் அந்தக் கட்சியால் நிறைவேற்ற முடியுமா என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. மின் கட்டணம் பாதியாகக் குறைப்பு, தினந்தோறும் வீட்டிற்கு 700 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்குதல், ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது போன்ற வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற முடியுமா என்பது சந்தேகம்தான். அடுத்த மூன்று மாதங்களில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக இருக்கும் நிலையில், இலவச தண்ணீர், மின்சாரக் கட்டணக் குறைப்பு போன்ற அறிவிப்புகளை உடனடியாகச் செய்தாக வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.
இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால், ஆம் ஆத்மி கட்சி மக்களால் நிராகரிக்கப்படும் என்றோ, செல்வாக்கு இழந்துவிடும் என்றோ நினைத்தால் அது தவறு. 1967இல் நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்கிற கோஷத்துடன், ஆட்சியைப் பிடித்த தி.மு.க., ஒரு சில இடங்களில் மட்டும் ரூபாய்க்கு ஒரு படி அரிசி அதுவும் ஒரு சில நாள்களுக்கு மட்டும்தான் வழங்கியது. ஆனால், கடந்த 46 ஆண்டுகளாக தி.மு.க.வும், அதிலிருந்து பிரிந்து வந்த அ.தி.மு.க.வும்தான் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் தொடர்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஆம் ஆத்மி கட்சியினர் புதியவர்கள்; அரசியல் அனுபவம் இல்லாதவர்கள்; லட்சியவாதிகள்; ஆனால், அரசியலில் நேர்மையும் நாணயமும் வேண்டும் என்று நினைப்பவர்கள்; ஊழலையும் முறைகேடுகளையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் வெறுப்பவர்கள்; மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் புதியதொரு அரசியல் கலாசாரத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்படுபவர்கள். ஆம் ஆத்மி கட்சியிலேயே சிலருக்கு அதிகார போதை தலைக்கேறலாம். அவர்களில் சிலர் தவறிழைக்கலாம். இவர்கள் நிர்வாக இயந்திரத்தின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்காமல் தவிக்கக் கூடும். ஆனால் தலைமை சரியாக இருக்குமானால், நிர்வாகமும், கட்சியும் மக்கள் ஆதரவுள்ள தலைமைக்குக் கீழடங்கிவிடும். ஆம் ஆத்மி முன்மொழியும் அரசியல் கலாசாரம் வெற்றி பெற்றால் மட்டுமே, காங்கிரஸின் தரகர் பாணி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
இந்த முயற்சி வெற்றி அடையுமோ தோல்வியைத் தழுவுமோ தெரியாது. ஆனால், இப்படியொரு மாற்றம் காலத்தின் கட்டாயம்! முதல்வராகப் பதவி ஏற்க இருக்கும் அரவிந்த் கேஜரிவாலுக்கு நமது வாழ்த்துகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...