டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இடம் பெயர்ந்தவர்கள்

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பான "யுனெஸ்கோ'வின் சமீபத்திய அறிக்கை ஒன்றில் காணப்பட்ட தகவலின்படி, தங்களது சொந்த ஊரிலிருந்து இடம் பெயர்ந்து வெளியூர்களில் வேலைபார்ப்பவர்கள், இந்தியாவின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:13 pm

ஆசிரியர்

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பான "யுனெஸ்கோ'வின் சமீபத்திய அறிக்கை ஒன்றில் காணப்பட்ட தகவலின்படி, தங்களது சொந்த ஊரிலிருந்து இடம் பெயர்ந்து வெளியூர்களில் வேலைபார்ப்பவர்கள், இந்தியாவின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர். உள்நாட்டு இடம் பெயர்தல் அதிகரித்திருப்பதற்குக் காரணம், விவசாயம் குறைந்து வருவதும், கல்வி அறிவு பெற்ற இளைஞர்கள் விவசாயத் தொழில்களில் ஈடுபட விரும்பாமல் இருப்பதும்தான் என்கிறது "சமூகவியல் ஆய்வு மையம்' வெளியிட்டிருக்கும் ஓர் அறிக்கை.

இந்த அறிக்கை குறிப்பிடும் இன்னொரு காரணம், கிராமங்களிலிருந்து நகரங்களுக்கோ, பிற மாநிலங்களுக்கோ இடம் பெயர்வதால், தங்களது ஜாதிய அடையாளங்கள் அழிந்துவிடும் என்று இளைய தலைமுறை நம்புகிறது என்பது. அவர்களது அறிக்கையின்படி, மிக அதிக அளவில் இடம் பெயர்பவர்கள் தாழ்த்தப்பட்ட இனத்தவர்களும், ஆதிவாதிகளும்தான்.

காலங்காலமாக புதிய நகரங்களும், வளர்ச்சியும் இடம் பெயர்ந்து வந்திருப்பவர்களின் உழைப்பால்தான் சாத்தியமாகி இருக்கிறது. இன்றைய மும்பையின் வளர்ச்சிக்கு தென்னிந்தியர்களும், தில்லியின் வளர்ச்சிக்கு பிகார் மற்றும் உத்தரப்பிரதேசத்திலிருந்து குடியேறியவர்களும், கொல்கத்தாவின் வளர்ச்சிக்கு பிகார், ஒடிசா, அஸ்ஸôம் போன்ற மாநிலத்தவர்களும்தான் காரணம் என்பதில் கருத்து வேறுபாடே இருக்க முடியாது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், தென்மாவட்டங்களில் இருந்து குடியேறியவர்களின் பங்களிப்பு சென்னை மாநகரத்தின் வளர்ச்சியில் கணிசமாகவே உண்டு.

இடம் பெயர்ந்து குடியேறியவர்களில் பெரும்பாலோர், உடலுழைப்பு சார்ந்த பணிகளில்தான் பரவலாகக் காணப்படுகிறார்கள். குறிப்பாக, வீட்டு வேலைகள், கட்டுமானப் பணிகள், மூட்டை தூக்குதல் போன்ற உடலுழைப்பு பணிகள், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுவது போன்ற அன்றாட வருமான தொழில்கள் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) 10 விழுக்காடு இவர்களது பங்களிப்பு என்கிறது இன்னொரு புள்ளிவிவரம்.

இப்படி இருக்க, இடம் பெயர்ந்து பணிபுரிபவர்களின் நிஜநிலை என்ன என்று பார்த்தால் பரிதாபகரமானது. படித்தவர்களும், நிரந்தர வேலையில் அமர்பவர்களும் மட்டுமே அடிப்படை வசதிகளுடனும், சம உரிமையுடனும் வாழ முடிகிறது. இடம் பெயர்ந்து வாழும் கடைநிலை மக்களில் பெரும்பாலானோர் தெருவோரங்களிலும், ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகிலும், கழிவுநீர் ஓடைகளின் கரைகளிலும் குடிசைகளில் வாழ்ந்துவரும் அவல நிலைதான் காணப்படுகிறது.

நகர்ப்புற மக்களின் அன்றாட வாழ்க்கை, இடம் பெயர்ந்து வாழும் அடித்தட்டு மக்களின் உழைப்பினால்தான் உறுதி செய்யப்படுகிறது என்றாலும், அவர்கள் நகரத்தின் களங்கமாகவும் அருவருப்பானவர்களாகவும்தான் கருதப்படுகிறார்கள். அவர்களுடைய குழந்தைகளுக்கு முறையான கல்வி வசதியோ, மருத்துவ வசதியோ கிடைக்க வழிதேடப்படுவதில்லை. பெண்கள்தான் மிகப் பெரிய பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அவர்களில் பலர் பாலியல் வன்முறைக்கு பலியாகிறார்கள் என்பதும், வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பதும், வெளியுலகம் அறிந்தும் அறியாததுபோல தவிர்க்கும் உண்மைநிலை.

அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், இடம் பெயர்ந்து வாழும் அடித்தட்டு மக்களின் பிரச்னைபற்றி பேசியிருப்பது, இந்தப் பிரச்னையின் தீவிரத்தை அரசியல் கட்சிகள் உணரத் தொடங்கிவிட்டதைக் காட்டுகிறது. அரசியல் கட்சிகள் இவர்களை வாக்கு வங்கிகளாக பயன்படுத்த முற்பட்டிருப்பதன் வெளிப்பாடுதான் இந்த திடீர் அக்கறை.

கிராமப்புறங்களில் விவசாயம் மீண்டும் வளர்ச்சியடைந்து வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதன் மூலமும், கிராமப்புறங்களில் காணப்படும் ஜாதிய மன அடைப்பு அகற்றப்படுவதன் மூலமாகவும், பரவலாக இடம் பெயர்தல் குறையுமே தவிர, முற்றிலுமாக தடுக்கப்படாது. இந்த நிலையில், இடம் பெயர்ந்து வாழும் மக்களின் உழைப்பு, வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்பதை உணர்ந்து, நகராட்சி, மாநகராட்சி மற்றும் மாநில நிர்வாகம் அவர்களின் நலன் கருதி திட்டம் இயற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

புலம் பெயர்பவர்களால் பயன் அடைகிறோம் என்பதைப் புரிந்துகொண்டு பல நாடுகள், அவர்களைத் தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ள முன்வந்திருக்கும் சூழலில், மாநிலம்விட்டு மாநிலம் இடம் பெயர்ந்தவர்களையும், கிராமங்களைவிட்டு நகரத்துக்கு இடம் பெயர்ந்தவர்களையும் ஏற்றுக் கொள்வதும், அவர்களது கௌரவமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிப்பதும் ஆட்சியாளர்களின் கடமை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.