தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

கிர் பூங்காவில் ஆசிய சிங்கங்களின் தொடர் இறப்புக்குக் காரணம் என்ன? ஆபத்துகள் என்னென்ன?

கிர் தேசியப் பூங்காவில் ஆசிய சிங்கங்களின் இறப்புக்கான காரணங்களும் அங்குள்ள ஆபத்துகளும் வனவிலங்கு ஆர்வலர்களின் கோரிக்கையும் பற்றி...

News image

கிர் தேசியப் பூங்காவில் ஆசிய சிங்கங்கள் - ANI

Updated On :27 ஜூன் 2026, 1:25 pm IST

- திலீப் சிங் சத்ரியா

குஜராத் கிர் தேசியப் பூங்காவில் ஒரே நேரத்தில் 8 ஆசிய சிங்கக் குட்டிகள் இறந்த சம்பவம் நாடு முழுவதுமே வனவிலங்கு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கக் குட்டிகள் இறப்புக்கு 'பபேசியா' (babesia) எனும் நோய்த்தொற்றுதான் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். தீவிர வெப்பத்தாலும் சிங்கக் குட்டிகளுக்கு உடல் பலவீனமாக இருந்ததாலுமே இந்த இறப்பு நிகழ்ந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

எனினும், குஜராத்தில் கிர் தேசியப் பூங்காவில் பபேசியா தொற்றின் அச்சம் இருப்பதாகவே ஆர்வலர்கள் கருதுவதுடன் அதுபற்றிய கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.

Summary

கட்டுரையின் உள்ளடக்கம்...

  • கிர் தேசியப் பூங்காவில் மே மாத இறுதியில் 8 ஆசிய சிங்கக் குட்டிகள் திடீரென இறந்தன.

  • ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் சிங்கங்களின் இறப்பும் அதிகரித்து வருவது வனவிலங்கு ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

  • சிங்கங்களின் தொடர் இறப்புக்குக் காரணம் என்ன? என கேள்வி எழுப்புகின்றனர்.

  • கிர் பூங்காவில் உள்ள ஆபத்துகள் பற்றி கூறுவதுடன், சிங்கங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.

கிர் தேசியப் பூங்கா

குஜராத்தில் உள்ள கிர் தேசியப் பூங்கா, ஆசிய சிங்கங்களுக்கு பெயர்போனது. மற்ற தேசியப் பூங்காக்களில் இல்லாத அளவுக்கு இங்கு 891 ஆசிய சிங்கங்கள் உள்ளன. வனவிலங்குப் பாதுகாப்பின் முக்கிய அடையாளமாக இந்த பூங்கா உள்ளது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளில், இயற்கை மரணம், நோய்த் தொற்று, எல்லைகளுக்கு இடையேயான சண்டைகள், விபத்துகள், மனிதர்கள் தொடர்புடைய காரணிகள் ஆகியவற்றால் 322 சிங்கங்கள் இறந்துள்ளன.

சிங்கங்களின் பாதுகாப்பில் எழும் கேள்விகள்...

தேசியப் பூங்காவில் சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பாதுகாக்கப்பட்ட காடுகளைத் தாண்டி, விவசாய நிலங்கள், மனிதர்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கும் காட்டின் பகுதி விரிவடைகிறது. இதனால் புதிய சுற்றுச்சூழல் அழுத்தங்கள் ஏற்படுகின்றனவா? என வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் சமீபத்தில் 8 சிங்கக் குட்டிகள் உயிரிழந்தது 'கிர் முரண்பாடு' என வனவிலங்கு நிபுணர்கள் கூறுகிறார்கள். அதாவது,

  • ஒட்டுமொத்த ஆசிய சிங்கங்களும் ஒரே இடத்தில் தொடர்ந்து இருக்க முடியுமா? அந்த நிலப்பரப்பிலேயே தொடர்ந்து வாழ முடியுமா?

  • தொடர்ச்சியாக ஏற்படும் நோய்த்தொற்றால் சிங்கங்கள் அதிகமாக உயிரிப்பது எதனால்?

  • ஆசிய சிங்கங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இருக்கும் நிலையில் ஒரு பெரிய நோய்த் தாக்குதலோ இயற்கை பேரழிவுகளால் ஏதேனும் பாதிப்புகளோ ஏற்பட்டால் என்ன நிலைமை? உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

பபேசியா ஒட்டுண்ணி காரணமா?

ஆசிய சிங்கம் என்பது குஜராத்தின் பெருமை மட்டுமல்ல. அது இந்தியாவில் எஞ்சியிருக்கும் கடைசி காட்டு சிங்க இனமாகவும் உலகில் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் பாதிக்கப்படக் கூடிய பெரிய பூனை இனங்களில் ஒன்றாகவும் உள்ளது. அதனால் சமீபத்திய சிங்கங்களின் இறப்புக்கு உண்மையான காரணம் என்ன? என்ற வலுவான கேள்வி எழுந்துள்ளது.

ஏனெனில் குஜராத் மாநில அரசு இதுபற்றிய விரிவான அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. தொற்று நோய் அல்லது ஒட்டுண்ணியால் பரவும் பபேசியா ஒட்டுண்ணி காரணமாக இருக்கலாம் என்று சந்தேகித்த நிலையில், அதனை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். மேலும், சிங்கக் குட்டிகள் இறந்ததற்கு கடும் வெப்பம், மன அழுத்தம், பலவீனமான நோய் எதிர்ப்புசக்தியே காரணம் என்றும் கூறியுள்ளனர்.

ஆனால், பபேசியா நோய்த்தொற்று இருக்கலாம் என வனத்துறை வட்டாரங்கள் கூறியதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அதனாலே குஜராத் அரசின் கூற்று மீது நம்பகத்தன்மை இல்லை என்று வனவிலங்கு நிபுணர்களும் ஆர்வலர்களும் கூறுகிறார்கள். மேலும் இது அவர்களிடையே விலங்கு பாதுகாப்பின்மை தொடர்பான கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் இது 8 சிங்கங்களின் இறப்பு மட்டுமல்ல, ஒரு பெரிய ஆசிய சிங்க இனக் கூட்டம் பாதுகாப்பாக உள்ளதா? சரியாக பாதுகாக்கப்படுகிறதா? என்பது தொடர்புடையது என்கின்றனர்.

Story image

IANS

நெருக்கடியில் கிர் பூங்கா

மிகப்பெரிய கிர் நிலப்பரப்பில் கிர் சோம்நாத், அம்ரேலி ஆகிய மாவட்டங்களில்தான் இந்த இறப்பு பதிவாகியுள்ளது. இது வனப்பகுதிகள் மட்டுமின்றி எல்லையில் விவசாய நிலங்கள், குடியிருப்புகளும் உள்ளன. இப்பகுதிகளிலும் சிங்கங்கள் சுதந்திரமாக நடமாடும் என்று கூறப்படுகிறது.

பபேசியோசிஸ் (Babesiosis) தொற்று சந்தேகத்தையடுத்து வனத்துறை அப்பகுதியில் சுமார் 10 கி.மீ. சுற்றளவில் உள்ள சிங்கங்களை தனிப்பட்ட கண்காணிப்பில் வைத்ததுடன் அவைகளிடம் அறிகுறிகள் ஏதேனும் உள்ளனவா? என மருத்துவக் குழுக்களை அமைத்து கண்காணித்து வருகிறது. சமீபத்திய இறப்புகள், தொற்றுநோய் பரவலுடன் தொடர்புடையது இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பதாகவும் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

ஆனால், இத்தகைய நடவடிக்கைகள் பொதுவாக அதிக ஆபத்தான நேரங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கிர் காடுகள் மிகப்பெரிய திறந்தவெளி பகுதி என்பதாலும் சிங்கக் கூட்டங்கள், தங்கள் எல்லைகள் இன்றி மற்ற சிங்கங்கள் இருக்கும் பகுதிகளுக்குச் செல்வதாலும் தொற்றுப் பரவல் அபாயம் இருப்பதால் மிக உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பபேசியோசிஸ் என்றால் என்ன?

பபேசியோசிஸ் என்பது பபேசியா பேரினத்தைச் சேர்ந்த நுண்ணிய உயிரினங்களால் ஏற்படும் ஒட்டுண்ணி நோய். இது பொதுவாக அந்த ஒட்டுண்ணி கடிப்பதன் மூலம் பரவுகிறது. உடலுக்குள் நுழைந்தவுடன் இந்த ஒட்டுண்ணி ரத்த சிவப்பணுக்களைத் தாக்கி அவற்றை அழிக்கிறது. இது கடுமையான ரத்த சோகை, உறுப்பு செயலிழப்பு ஏற்படுத்துவதுடன் அதிகபட்சமாக மரணத்தையும் ஏற்படுத்தும்.

வனவிலங்குகளில் இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் கடினம். நோய் முற்றியபிறகு பெரும்பாலும் அறிகுறிகள் தெரியும். இதனால் சிகிச்சைக்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. காட்டு விலங்குகளுக்கு சரியான நேரத்தில் நோய் கண்டறியப்படுதலோ முறையான சிகிச்சையோ கிடைப்பதில்லை. இதனால் விளைவுகள் மோசமாக இருக்கின்றன.

பபேசியோசிஸ் என்பது வனவிலங்கு சார்ந்த ஒரு கவலை மட்டுமல்ல, சூழலியல் சார்ந்தது. தொடக்கத்திலேயே கண்டறியப்படாவிட்டால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.

கிர் பகுதியில் மீண்டும் மீண்டும்...

கிர் பகுதியில் இதற்கு முன்பும் இதே போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. 2018-ல் தல்கானியா மலைத் தொடரிலும் 2020 மற்றும் 2021-ல் தாரி, கம்பாவின் சில பகுதிகளிலும் இந்த நோய்த் தொற்று பதிவாகியுள்ளது. அப்போதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே மீண்டும் மீண்டும் இதுபோன்று மொத்தமாக சிங்கங்கள் உயிரிழப்பு, பல கேள்விகளையும் அச்சத்தையும் எழுப்புகிறது.

சி.டி. வைரஸ் எனும் எச்சரிக்கை

பபேசியோசிஸ் தற்போதைய அச்சமாக இருந்தாலும் 'கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ்' (canine distemper virus) நீண்ட கால எச்சரிக்கையாகத் தொடர்ந்து வருகிறது. வனவிலங்குகள் குறிப்பாக நாய்களின் சுவாச, இரைப்பை மற்றும் மத்திய நரம்பு மண்டலங்களைத் தாக்கும் நோய். மிகவும் எளிதில், வேகமாகப் பரவக் கூடியது. குணப்படுத்த முடியாததுகூட. அதனால் இறப்பினை ஏற்படுத்தக் கூடியது.

2018-ல், தல்கானியா வனப்பகுதியில் 23-க்கும் மேற்பட்ட சிங்கங்கள் இறந்தது இந்த வைரஸ் தொற்றால்தான். இந்த நோய்த்தொற்றுப் பரவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதுடன் ஒரே நிலப்பரப்பில் அதிகம் வாழும் சிங்கங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ள அபாயத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

ஆப்ரிக்காவிலிருந்து கற்க வேண்டியது...

தான்சானியாவின் செரெங்கெட்டி தேசியப் பூங்காவில் 1994-ல் ஏற்பட்ட கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் நோய்த்தொற்றால் நூற்றுக்கணக்கான சிங்கங்கள் இறந்தன. இந்த நிகழ்வு உலகத்திற்கே ஒரு படமாக விளங்கியது. எனினும் கிர் தேசியப் பூங்காவில் தொடரும் இறப்புகள், அச்சத்தையே ஏற்படுத்துகின்றன.

கண்காணிப்பில் வெற்றி

குஜராத் கிர் பூங்காவில் 2026 ஜனவரி நிலவரப்படி ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 891 ஆக உயர்ந்துள்ளது. இதில் 255 ஆண் சிங்கங்கள், 405 பெண் சிங்கங்கள், 231 குட்டிகள்.

ஆனால் 2024 - 2026 ஜனவரிக்கு இடையே இயற்கைக் காரணங்கள், எல்லை மோதல்கள், விபத்துகள், நோய் , மனிதத் தொடர்புடைய காரணிகள் ஆகியவற்றால் 322 சிங்கங்கள் இறந்துள்ளது கவனிக்கத்தக்கது.

சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதேநேரத்தில் இறப்புகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதையே இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதிகரிக்கும் இறப்புகள், மோதல்கள்

சிங்கங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளைத் தாண்டி மனிதர்கள் வசிக்கும் நிலப்பரப்புகளுக்குள் செல்வதால் அங்கு மனித உயிரிழப்புகளும் நடக்கின்றன. அம்ரேலி, பவ்நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிங்கங்கள் தாக்கி குழந்தைகள், தொழிலாளர்கள் இறந்துள்ளனர். அதனால் கிர் எல்லைப் பகுதிகளில் சிங்கங்கள் வாழ்வதும் சுற்றியுள்ள மனிதர்களின் பாதுகாப்பும் சற்று சவாலாகவே உள்ளது.

மாற்று வாழிடம் தேவை..

சிங்கங்களின் இறப்புகளால் இதுபோன்ற பல்வேறு காரணங்கள், விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக ஆசிய சிங்கங்கள் அனைத்தும் ஒரே நிலப்பரப்பில் ஒரே சூழல் மண்டலத்தில்தான் இருக்க வேண்டுமா?

ஏனெனில், ஒரு விலங்கினம் மொத்தமும் ஒரே பகுதியில் வைத்திருப்பது, பல்வேறு நோய்த்தொற்றுகள், இயற்கை பேரிடர்கள், மரபணு ஆகியவற்றால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று நிபுணர்களும் ஆர்வலர்களும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

குஜராத்திற்கு வெளியே வேறு பகுதியில் சிங்கக் கூட்டத்தை உருவாக்க அல்லது இடம்பெயரச் செய்ய வேண்டும் என்று சில முன்னாள் வனத்துறை அதிகாரிகளும் இயற்கை ஆர்வலர்களும் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்கா (Kuno National Park) ஒரு மாற்று வாழிடமாக அடையாளம் காணப்பட்டு நீண்ட நாள்கள் ஆகிவிட்டன. சிங்கங்களை இடமாற்றம் செய்யுமாறு 2013-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் இந்தத் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. அது ஏன் செய்யப்படவில்லை என்பதும் தற்போது முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது.

மாற்று வாழிடம் என்பது பேரழிவால் ஏற்படும் பாதிப்பை ஈடு செய்யும், அதாவது மற்றொரு சிங்கக் கூட்டம் பாதுகாப்பாக இருக்கும், சிங்கங்களின் மரபணு பாதுகாக்கப்படும் என்கின்றனர்.

ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வந்தாலும் அவற்றின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. சிங்கங்கள் உயிர்வாழ்வதைவிட பாதுகாப்பான சூழலில் இருக்கின்றனவா என்பதே ஆர்வலர்களின் கவலையாக உள்ளது.

எனவே, சிங்கங்களின் பாதுகாப்புக்காக, கிர் காடுகளைக் கண்காணிப்பது மட்டுமின்றி, சிங்கங்கள் அபாயம் ஏதும் இன்றி பாதுகாக்கப்பட வேண்டும். அதிலும், சிங்கங்கள் எப்போது வேறு வாழிடத்திற்கு இடம்பெயரச் செய்யப்படும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது. சிங்கங்களின் இறப்புகளைக் கட்டுப்படுத்த அரசு இனியாவது கவனத்தில் கொள்ளுமா?

தமிழில்: எம். முத்துமாரி

Summary

Explainer: The Gir paradox; Why the world only wild Asiatic lions face growing risks

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.