‘ஹஜ்’ கடமையை நிறைவேற்றச் செல்லும் ஹாஜிகள் கஃபாவிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கப்பால், தங்கள் வெற்றுடம்பில் தைக்கப்படாத ஒரு துண்டை இடுப்பில் உடுத்திக் கொண்டு மற்றொரு துண்டை போர்த்திக் கொண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற முற்படுகிறார்கள். இது ‘எஹ்ராம்’ உடை என அழைக்கப்படுகிறது. இறந்தவரின் சடலத்தின் மீது இத்தகு துணியே போர்த்தப்படுகிறது. இறைவனை அடைய அனைத்தையும் துறக்கத் துணியும் செயலையே இது நினைவூட்டுவதாயுள்ளது. ஹஜ்ஜின் போது கஃபா, இறையில்லத்தில் இறைவணக்கத்திற்காகக் குழுமியுள்ள இலட்சக்கணக்கான ஹாஜிகள் தங்கள் நாடு, மொழி, இன, நிற, கலாச்சார வேறுபாடுகளையெல்லாம் மறந்தவர்களாக, நாம் அனைவரும் ஆதாம் (அலை) வழிவந்த சகோதரர்களே; அனைவரும் சமமானவர்களே என்ற உணர்வோடு சமத்துவத்தை - சகோதரத்துவத்தைச் செயல் வடிவில் நிலை நாட்டுகின்றனர்.