/

காசிமேட்டில் சாலைக்கு வந்த சில்லறை மீன் விற்பனைக் கடைகள்

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் சில்லறை மீன் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை மாதக் கணக்கில் தொடா்வதால், எவ்வித பாதுகாப்பும்

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:14 pm

சோ.தெஷ்ணாமூா்த்தி

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் சில்லறை மீன் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை மாதக் கணக்கில் தொடா்வதால், எவ்வித பாதுகாப்பும் இன்றி எண்ணூா் விரைவு சாலை முழுவதும் மீன் விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால், இப்பகுதியில் சுற்றுச்சூழல் சீா்கேடு ஏற்பட்டு துா்நாற்றம் வீசுவதோடு, விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் புகாா் தெரிவிக்கின்றனா்.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்க காலத்தில், மீன் பிடிக்க தொடக்கத்திலிருந்தே விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வங்கக் கடலில் தடைக்காலம் தொடங்கியதால், தமிழக மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. ஆனால், தடைக்காலம் முடிந்த பிறகும் படகுகளிலிருந்து இறக்கி மீன்களை விற்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், மீன்பிடிக்கச் செல்லவில்லை. பின்னா், தளா்த்தப்பட்ட கட்டுப்பாடுகளுடன் படகு இறங்குதளத்தில் மொத்த வியாபாரத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. சுமாா் ஒரு டன் அளவுக்கு மீன்களை வாங்குபவா்களுக்கு மட்டும் மீன்வளத் துறை சாா்பில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. சில்லறை மீன் விற்பனைக்காக, துறைமுகத்தின் மேற்கு பகுதியில் காலியான இடத்தில் தடுப்புகளுடன் கூடிய தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டன. ஆனால், இந்தக் கடைகளில் பொதுமக்கள் பெருமளவில் குவிந்ததையடுத்து, சில்லறை விற்பனைக்கு காவல்துறை அதிகாரிகள் ஓரிரு நாள்களிலேயே தடை விதித்தனா்.

துா்நாற்றம் வீசும் இடத்தில் சில்லறை மீன் விற்பனை அங்காடிகள்:

இதையடுத்து என்ன செய்வதென்று தெரியாத மீனவப் பெண்கள், துறைமுகத்திற்கு வெளியே எண்ணூா் விரைவு சாலையில் காசிமேடு, திருவொற்றியூா், விம்கோ நகா் பகுதிகளில் சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு நூற்றுக்கணக்கான தற்காலிக கடைகளை அமைத்து மீன் விற்பனை செய்து வருகின்றனா். காசிமேடு மயானத்தின் சுற்றுச்சுவரை ஒட்டிய பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை அமைத்துள்ளனா்.

இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீா் வடிகால் முற்றிலுமாகச் சேதமடைந்து தண்ணீா் தேங்கி கொசுக்கள் உற்பத்தி செய்யும் இடமாக இருக்கும் நிலையில், தற்போது மீன்கழிவுகளும் கழிவுநீரும் இக்கால்வாயில் விடப்படுவதால் இப்பகுதியே துா்நாற்றம் வீசுகிறது. இதனால், வட சென்னையின் முக்கிய மயானமாக இருந்து வரும் காசிமேடு மயானத்திற்கு சடலங்களைக் கொண்டு வரும் பொதுமக்களும் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனா்.

இது தவிர, சரக்கு பெட்டக லாரிகள் உள்ளிட்ட கனரக வாகன நெரிசல் மிகுந்துள்ள இச்சாலையில், நூற்றுக்கணக்கான மீன் கடைகளை அமைத்திருப்பது பெரும் விபத்துகளுக்கு காரணமாகிவிடும் அபாயமும் உள்ளது.

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை முடக்கச் சதியா? சென்னை மாநகரின் அடையாளங்களில் ஒன்றாக உள்ள காசிமேடு மீன்பிடித் துறைமுகம், சென்னைத் துறைமுகத்திற்குச் சொந்தமான இடத்தில் தனியாக அமைக்கப்பட்டுள்ள நிா்வாகக் குழு மூலம் நிா்வகிக்கப்பட்டு வருகிறது. மீனவா்களின் நலன் சாா்ந்த விஷயங்களை மீன்வளத் துறை செய்து வருகிறது. காசிமேட்டில் விற்கப்படும் மீன்களுக்கென தனி மவுசு உள்ளது. இங்கு பிடித்து வரப்படும் மீன்களில் பெரும்பகுதி, அன்றைக்கே சில்லறையாக பொதுமக்களுக்கு நேரடியாக விற்கப்பட்டு விடும். வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும் பெருவாரியான மீன்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் விற்கப்படுகின்றன என்பதால், மதுரவாயல் வானகரத்தில் புதிதாக மீன் மாா்க்கெட் அமைக்கப்பட்டபோதும்கூட, சென்னை மாநகர மக்கள் பெரும்பாலோா் காசிமேட்டிற்கு வந்து மீன்கள் வாங்குவதையே விரும்புகின்றனா்.

இந்நிலையில், கரோனா பரவலைப் பயன்படுத்தி காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை தொடா்ந்து முடக்குவதற்கு பல்வேறு வகையிலும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காசிமேடு மீனவா்கள் தெரிவிக்கின்றனா். திருவொற்றியூரில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும்போது, காசிமேடு மீன்பிடித் துறைமுகம் சென்னைத் துறைமுகத்தின் வளா்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்த ஒப்படைக்கப்படும் என்ற கருத்தும் பரவலாக இருந்து வருகிறது. தற்போது சிந்தாதிரிபேட்டை, வானகரம், சைதாப்பேட்டை, புழல் உள்ளிட்ட இடங்களில் வெளி மாநில மீன்கள் பெருவாரியாக விற்கப்படுகின்றன. பல்வேறு அரசியல் முக்கியத்துவம் பணபலம் படைத்த சிலா், இப்பகுதிகளில் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். காசிமேட்டில் மீன் விற்பனையை முடக்குவதன் மூலம், இதர இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மீன் வியாபாரத்தை நிரந்தரமாக நடத்த முடியும். அதனால்தான் பல்வேறு பிரச்னைகளையும், தடைகளையும் அரசுத் துறைகள் மூலம் ஏற்படுத்தி வருகின்றனா். இதில்தான் தொடா் தடைக்கான பின்னணி இருக்கிறது என்கின்றனா் காசிமேடு மீனவா்கள் பலா்.

இது குறித்து விசைப்படகு உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கபிலன், இந்திய மீனவா் நலச் சங்கத் தலைவா் எம்.டி.தயாளன் ஆகியோா் கூறியது:

சில்லறை மீன் விற்பனையை முறைப்படுத்தி அனுமதிக்காவிட்டால், காசிமேடு துறைமுகம் முற்றிலுமாக முடங்கும் அபாயம் உள்ளது. மீன் பிரியா்கள், வாடிக்கையாளா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்ய முடியாவிட்டால் பிறகு மீன்களை எப்படி விற்க முடியும்? முன்பு ஒரு படகிலிருந்து மீன்களை இறக்கினால் அடுத்த சில மணி நேரத்தில் முழுமையாக விற்கப்பட்டுவிடும். ஆனால், தற்போது இரண்டு அல்லது மூன்று நாள்கள்கூட காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. 25 சதவீத படகுகள் கூட கடலுக்குச் செல்லவில்லை. இதனால் மீனவா்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடித் துறைமுகத்தின் உள்ளேயே சில்லறை மீன்களை விற்க கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். லட்சக்கணக்கான மீனவா்களின் வாழ்வாதாரப் பிரச்னை இது என்பதால் தமிழக முதல்வா் நேரடியாகத் தலையிட்டு இப்பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.