/

கரும்புள்ளியும்.. கருப்பு நாளும்...

வரும் காலங்களில் எந்தவொரு ரௌடியையும் பிடிக்க முயலும்போது காவல்துறையினரிடம் கண்டிப்பாக ஏதாவது ஒரு ஆயுதம் இருக்க வேண்டும் என்பதை காவலர் சுப்பிரமணியனின் இறப்பு வெளிப்படுத்தியுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:10 pm

தி. இன்பராஜ்



சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டு மரணமடைந்த சம்பவம் ஐக்கிய நாடுகள் சபை வரை எதிரொலித்தது. 

அந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்த சிபிஐ அதிகாரிகள் 10 பேரை கைது செய்தனர்.  அதில், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். சிபிஐ அதிகாரிகள் சிலருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டதால் வழக்கு விசாரணையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.

கரோனா பரவல் தடுப்புக் கால விதிமுறையை மீறினார்கள் என்பதே ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு.  காவல் நிலைய பிணையில் விடுவிக்கக் கூடிய ஒரு சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்ட தந்தை}மகனை காவல் துறை கொடூரமாக சித்திரவதை செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி அப்போது அனைத்துத் தரப்பில் இருந்தும் எழுப்பப்பட்டது.

அரசியல் தலைவர்கள், நடிகர்}நடிகைகள், விளையாட்டு வீரர்கள் என ஒட்டுமொத்த நாடும்,  காவல் துறைக்கு எதிரான கணைகளை வீசத் தொடங்கியதால் அந்தச் சம்பவம் தமிழக காவல் துறை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தியது என்றே கூறலாம். 

தவறு செய்தது சில அதிகாரிகளாக இருந்தபோதிலும், தமிழகத்தில் உள்ள காவல் துறையைச் சேர்ந்த அனைவரும் வாய்மூடி மௌனம் காத்தனர். அதற்கு காரணம், ஒரே குடும்பத்தில் இரண்டு ஆண்களை இழந்தால் அந்த குடும்பத்தின் எதிர்கால நிலை என்னவாக இருக்கும் என்ற எண்ணம் அனைவரின் மனதில் எழுந்ததாகவே இருக்க முடியும்.

ஆனால், அந்தச் சம்பவம் நிகழ்ந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ந்த மற்றொரு சம்பவம் காவல் துறையினர் மீது பரிவு காட்டும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. 

முந்தைய சம்பவத்துக்கு காவல் துறையை சபித்துக் கொட்டியவர்கள் எல்லாம், தற்போது மணக்கரை காட்டுப்பகுதியில் ரெüடி துரைமுத்துவை துணிச்சலுடன் பிடிக்க முற்பட்டு நாட்டு வெடிகுண்டு வெடித்து தலை சிதறிய நிலையில் உயிரிழந்த 27 வயதான முதல்நிலைக் காவலர் சுப்பிரமணியனின் உடலை புகைப்படத்தில்கூடப் பார்க்க முடியாமல் புலம்பித் தள்ளுகின்றனர் என்பதே உண்மை.

ஆம்!  7 கொலை வழக்குகள் உள்ளிட்ட மொத்தம் 10 வழக்குகள் உள்ள ஒரு ரௌடியைப் பிடிக்க துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 5 பேர் காட்டுப்பகுதிக்குள் தேடிச்  செல்லும்போது ஆயுதங்கள் ஏதும் அவர்கள் கையில் இருந்ததா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. 

 மோதல் கொலை எனப்படும் என்கவுன்ட்டர் சம்பவம் எங்கோ ஒரு மூலையில் நிகழ்ந்தால் அந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கூட்டம், சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது எப்படி ஆயுதப் பிரயோகம் செய்யலாம் என வழக்கம்போல காவல் துறையை எதிர்த்து கேள்வி எழுப்புவது உண்டு. 

அந்த சமூக (?) ஆர்வலர்கள் கூட்டமும் தற்போது மௌனத்தின் உச்ச நிலைக்குச் சென்றுவிட்டது. சாத்தான்குளம் சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய முற்பட்டவர்களும் தற்போது ஏதும் பேசாமல் மௌனம் காத்து வருகின்றனர்.
 ஒரு காட்டுப் பகுதியில் தனது கூட்டாளியுடன் 7 கொலை வழக்குகளில் தொடர்புடைய ரௌடி பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை உறுதி செய்த தனிப்படை குழு ஏன் கூடுதல் காவலர்களை அழைத்துச் செல்லவில்லை, ஆயுதங்களை எடுத்துச் சென்றார்களா என்ற அடிப்படையான சில கேள்விகள் தற்போது எழுப்பப்படுகிறது.

குறிப்பாக, போலீஸாரைக் கண்டதும் தப்பியோடிய ரெüடி, தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், போலீஸாரை மிரட்டவும் நாட்டு வெடிகுண்டை வீசியதும் அங்கு சென்ற போலீஸôர் ஏன் துப்பாக்கியைக் காட்டி அந்த ரௌடியை மிரட்டவில்லை என்ற கேள்வி எழாமல் இல்லை. ஒருவேளை அங்கு சென்ற காவல் துறையினரிடம் துப்பாக்கியே இல்லாமல் போயிருக்கலாம்.

இதற்கு காவல் துறை தரப்பில் ஒரு பதில் கூறப்படுகிறது. அதாவது, 7 கொலை வழக்குகளில் தொடர்புடைய ரெüடி மேலும் ஒரு கொலை சம்பவத்துக்கு திட்டமிட்டிருந்ததால் அவரை எப்படியாவது உயிரோடு பிடிக்க வேண்டும் என முனைப்புக் காட்டினோம் என்பதே அந்தப் பதில்.

ரௌடி ஆயுதத்தைப் பயன்படுத்த தயாராக இருப்பார் என்பதை அறிந்த போலீஸார் ஏன் பெயரளவுக்குக்கூட அங்கு துப்பாக்கியை எடுத்து மிரட்டவில்லை என்ற கேள்விக்கான பதிலில் பல ரகசியங்கள் ஒளிந்து கிடக்கின்றன.

தமிழகத்தில் சமூக விரோதக் கும்பலால் எந்தவொரு கொடிய சம்பவம் நிகழ்ந்தாலும் அதற்கு எதிர்வினையாற்ற காவல் துறைக்கு சில காலம் அவகாசம் தேவை என்பது எழுதப்படாத விதிமுறை.  அதற்குள் பல அரசியல் புதையுண்டுள்ளது.

தென் மாவட்டங்களில் பணிபுரிந்த அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் எந்தெந்தப் பகுதியில் நாட்டு வெடிகுண்டு சகஜமாக புழக்கத்தில் இருக்கும் என்ற உண்மை தெரியும். ரௌடி துரைமுத்துவை உயிரோடு பிடிக்க முயன்ற காவல் துறையின் முயற்சி பாராட்டுக்குரியது. இருப்பினும், அவர் நாட்டு வெடிகுண்டை வீசும் வரை அவகாசம் வழங்கியிருக்க வேண்டுமா? என்பது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

இங்கேதான் பிரச்னை எழுகிறது. ரெüடி துரைமுத்து தனது கூட்டாளி மூவருடன் ஒரு இடத்தில் பதுங்கி இருந்துள்ளார். 

போலீஸாரைக் கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்ற நிலையில், துரைமுத்து தவிர மற்ற மூவரும் பிடிபட்டுவிட்டனர். துரைமுத்து காட்டுப்பகுதிக்குள் தப்பியோடிவிட்டார். 

இவ்வளவு தொலைவு வந்தாச்சு.. எப்படியாவது துரைமுத்துவை கைது செய்துவிட வேண்டும் என அங்கு சென்ற தனிப்படை குழுவினர் முடிவு செய்த நிலையில், அங்கிருந்த இளம் காவலர் சுப்பிரமணியனின் துணிச்சலான வேகம், அந்த ரௌடியிடம் நாட்டு வெடிகுண்டு இருக்கிறது, தன்னிடம் எந்த ஆயுதமும் இல்லை என்பதை யோசிக்கவிடாமல் செய்துவிட்டது.  இன்று அவர் நம்மோடு இல்லை. அந்த ரௌடியும் இல்லை. 

காவலர் சுப்பிரமணியனை இழந்த அவரது மனைவி தனது 9 மாத கைக் குழந்தையுடன் கண்ணீர் சிந்தக்கூட உடலில் தெம்பில்லாத நிலையில் காட்சியளிக்கிறார். அந்தக் குடும்பத்தின் நிலையை யோசித்தால் அனைவரின் கண்களும் கலங்கும்.

தமிழக காவல் துறைத் தலைவர் திரிபாதி சென்னையில் இருந்து உடனடியாக திருநெல்வேலி விரைந்து பின்னர்  சுப்பிரமணியனின் உடல் அவரது சொந்த ஊரில் புதைக்கப்படும் வரை கூடவே இருந்தது சுப்பிரமணியனின் குடும்பத்துக்கு ஓர் ஆறுதல். அரசும் வழக்கம்போல ரூ. 50 லட்சம் இழப்பீடும், அரசு வேலை என்ற உறுதியையும் வழங்கி உள்ளது.

இருப்பினும், வரும் காலங்களில் எந்தவொரு ரௌடியையும் பிடிக்க முயலும்போது காவல்துறையினரிடம் கண்டிப்பாக ஏதாவது ஒரு ஆயுதம் இருக்க வேண்டும் என்பதை காவலர் சுப்பிரமணியனின் இறப்பு வெளிப்படுத்தியுள்ளது. அதை கண்டிப்பாக காவல் துறை பின்பற்ற வேண்டும். இல்லையெனில், சுப்பிரமணியன் இறந்த நாள் காவல் துறைக்கு ஒரு கருப்பு நாளாகவே அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.