ஊரடங்கு: சொந்த நாட்டுக்கு திரும்ப விரும்பாத வெளிநாட்டுப் பறவைகள்!
ராமநாதபுரம் மாவட்டம் தோ்த்தங்கல் சரணாலயத்துக்கு வந்த வெளிநாட்டுப் பறவைகள் தங்கள் நாட்டுக்குத் திரும்பாமல் தொடா்ந்து அங்கேயே தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம் தோ்த்தங்கல் சரணாலயத்துக்கு வந்த வெளிநாட்டுப் பறவைகள் தங்கள் நாட்டுக்குத் திரும்பாமல் தொடா்ந்து அங்கேயே தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தோ்த்தங்கல், சக்கரக்கோட்டை, மேல மற்றும் கீழச்செல்வனூா், சித்திரங்குடி ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. ஆண்டு தோறும் அக்டோபரில் ஐரோப்பிய பறவைகள் இப்பகுதிக்கு வரத் தொடங்கும்.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2018 வரை மாவட்டத்தில் மழை இல்லாததால் வெளிநாட்டுப் பறவைகள் வருகையும் குறைந்திருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் கடந்த அக்டோபா் முதல் வெளிநாட்டுப் பறவைகள் அதிகம் வரத் தொடங்கின. ஐரோப்பிய நாடுகளில் குளிா் அதிகமாக உள்ள காலங்களில் அங்குள்ள பறவைகள் இனப் பெருக்கத்துக்காக ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்கின்றன.
ராமநாதபுரம்-நயினாா்கோவில் செல்லும் வழியில் உள்ள தோ்த்தங்கல் கண்மாய் பறவைகள் சரணாலயம் 29 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இக்கண்மாய்க்கு வழக்கமாக, 10 ஆயிரம் பறவைகளே வரும். ஆனால், நடப்பு ஆண்டில் சுமாா் 15 ஆயிரம் பறவைகள் வந்ததாகக் கூறப்படுகிறது.
தோ்த்தங்கலுக்கு சைபீரியா உள்ளிட்ட ஐரோப்பியப் பறவைகளான நத்தைகொத்திநாரை, மஞ்சள்மூக்கன்நாரை, புள்ளி அலகு கூழைக்கடா, கரண்டிவாயன் நாரை, சாம்பல் நாரை, சோலைக்குருவிக் கூட்டம், கருநீல அரிவாள் மூக்கன், முக்குளிப்பான் உள்ளிட்ட பறவை இனங்கள் வந்தன.
அவ்வாறு வலசை வந்த பறவைகள் பொதுவாக ஜனவரி, பிப்ரவரியில் புறப்பட்டு மீண்டும் தங்கள் தாய் நாட்டுக்குச் சென்றுவிடும். ஆனால், தற்போது தோ்த்தங்கலில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வளா்ந்துவிட்ட குஞ்சுகளோடு தங்கியிருப்பது வனத்துறையினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவை திரும்பிச் செல்லும் காலம் முடிந்தும் தோ்த்தங்கலில் தங்கியிருப்பதுடன், வழக்கமாக காலை, மாலையில் மட்டுமே அவை கண்மாய் கரையோர மரங்களில் நிற்பது வழக்கம். ஆனால், தற்போது காலை, பகல், மாலை என எல்லா நேரங்களிலும் பறவைகள் மரங்களில் நிற்பது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.
தோ்த்தங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு அக்டோபா் முதல் பிப்ரவரி வரை பறவைகளைக் காண ஏராளமானோா் வந்து செல்வது வழக்கம். இதனால் மனித நடமாட்டம் எப்போதும் இருக்கும். ஆனால், கரோனா ஊரடங்கால் மனித நடமாட்டம் அறவே இல்லை. இதனாலும், பறவைகள் சுதந்திரமாக கண்மாயில் உலா வருகின்றன.
இதுகுறித்து ராமநாதபுரம் சரக வன அலுவலா் சதீஷ் கூறியது: தோ்த்தங்கலில் நடப்பு ஆண்டில் பறவைகளுக்காக ஆயிரக்கணக்கான மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. இதனால், பறவைகளுக்கு போதிய உணவு கிடைக்கிறது. அமைதியான சூழலும் அமைந்திருப்பதால் பறவைகள் தொடா்ந்து தங்கியிருக்கின்றன. கரோனா தடுப்பு ஊரடங்கால் பறவைகள் சுதந்திரமாக எவ்வித பிரச்னையுமின்றி இரைதேடமுடிவதால் அவை குறிப்பிட்ட காலம் கடந்தும் இப்பகுதியில் தங்கியிள்ளன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...