அரசு இப்படியொரு முடிவை எடுப்பதற்கு முன்பே இந்தியாவில் பஞ்சாப், கர்நாடகா, மிசோரம், கேரளா, ஜம்மு & காஷ்மீர், உத்தரபிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், மேகாலயா, ஒடிசா மற்றும் நாகாலாந்து உள்ளிட்ட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் ஒன்றுலுமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மின் சிகரெட்டுகளுக்கான தடை நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது. அதற்கான காரணம், இப்படியொரு முன்னெடுப்பை மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று மின் சிகரெட்டுகளுக்களின் மோசமான விளைவுகள் குறித்து எச்சரித்த காரணத்தால் தான்.
மின் சிகரெட்டுகள் என்பதன் உண்மையான பொருள்.. எலக்ட்ரானிக் நிகோடின் டெலிவரி சிஸ்டம் என்பதே. இவ்வகை மின் சிகரெட் வடிவமைப்புகளில் புகையிலை பயன்படுத்தப்படுவது இல்லை. அதற்கு பதிலாக பேட்டரியிலிருந்து ஆவி கசிவது போன்று வடிவமைத்திருக்கிறார்கள். இதில் பேட்டரி சொல்யூஷனில் இருந்து ஆவி வெளியேற அவர்கள் கையாண்டிருக்கும் வழிமுறை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. பேட்டரி சொல்யூஷன் தயாரிக்க புரொபிலீன் கிளைகால் மற்றும் கிளிசராலுடன் வாசனையூட்டிகளும் சேர்க்கப்படுகின்றன. இவை அனைத்துமே உடல் ஆரோக்யத்திற்கு குறிப்பாக நுரையீரல் ஆரோக்யத்துக்கு கேடு விளைவிக்கக்கூடிய அளவிலான நச்சுத்தன்மை கொண்டவையாகக் கருதப்படுகின்றன.