நேற்று பிற்பகலில் தனி விமானம் மூலமாக சென்னை விமானநிலையம் வந்திறங்கிய சீன அதிபர் ஷி ஜின்பிங் சாலை மார்க்கமாகவே அங்கிருந்து மாமல்லபுரம் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தார். அவரது விருப்பத்திற்கிணங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிபரின் மாமல்லபுரப் பயணத்தின் போது வழிநெடுக தமிழர் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகளையும் கண் குளிரக் கண்டுகளித்தவாறு செல்ல பிரமாதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒயிலாட்டம் (கைகளில் கர்சீஃப் போன்ற சிறு துணியுடன் ஆடும் ஆட்டம்) மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், பறையாட்டம், மிருந்தங்கம், நாகஸ்வரக் கலைஞர்களது வரவேற்புடன் தொடங்கி மாமல்லபுரத்தைச் சென்றடையும் வரை பல இடங்களில் தமிழர் கலாசார மாண்பை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.