கல்வியறிவின்மை, பொருளாதார நிலை, சமூக கட்டுப்பாடுகள் ஆகிவையே பெண் சுதந்திரத்திற்கு தடை கற்களாகப் பார்க்கப்படுகிறது. இதில் கல்வியறிவு பெற்று விட்டாலே மற்ற இரண்டு தடைகளும் தானாக ஒதுங்கிவிடும். ஆனால், பெண்களே சில சமயங்களில், 'இவ்வளவு தடைகளைத் தாண்டி தங்களால் எவ்வாறு முடியும்?' என்று செயல்களில் பின்வாங்குகின்றனர். எனவே, பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. பெண் கல்விக்காகவும், பெண்களின் பாதுகாப்புக்காகவும் பல்வேறு திட்டங்கள் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனை அவர்கள் உபயோகித்துக்கொள்ள முன்வர வேண்டும். என்னதான் பெண்கள் பல்வேறு துறைகளில் ஜொலித்தாலும், அடிப்படையில் ஆண்- பெண் பாகுபாடு குடும்பத்தில் இருந்து பொதுவெளிகள் வரை அனைத்து இடங்களிலும் பார்க்கப்படுகிறது.