தனது ஆழமான இந்தக் காதல், ஓர் அழகான திருமண வாழ்க்கையை உண்டாக்கும் என்று காத்திருந்தாள் அந்த பெண். அந்த வாழ்வும் வந்தது. திறமையாய் மேளம் கொட்டும் அவள் கணவன் அவளையும் அவள் மூன்று குழந்தைகளையும் நிஜமான அன்போடு நேசித்தான். இந்த சின்னக் குடும்பம், தங்கள் சக்திக்கு மீறி வாங்கிய ரூபாய் 2500 முன்பணத்திற்காய் தாங்கள் வசித்த அந்த கிராமத்திலேயே கொத்தடிமைகளாய் விலைபோனார்கள். குழந்தை பெற்று தையலிடப்பட்ட அந்த சிறு உடலை தூக்கிக்கொண்டு கணவனுடன் சேற்றிலிறங்கி வேலை செய்யும் பொழுதெல்லாம் சாவையே விரும்பினாள் கௌரி. மருத்துவ செலவிற்காய் வாங்கின இந்தச் சிறு முன்பணம், தன்னையும், தன் குடும்பத்தையும் உணவின்றி உறக்கமின்றி, பிள்ளைகளுக்கு படிப்பின்றி முடக்கிப்போடும் என்று அவள் சிறிதும் சிந்தித்ததில்லை. இந்த அனுதின போராட்டத்தினிடையே தன் பெண்மையை பாதுகாக்கவும் அவள் வெகு பிரயத்தனப்பட வேண்டியதாயிருந்தது. ஒரு பொட்டுத்தூக்கம் நிம்மதியாகத் தூங்கினாளில்லை. எளிதில் பயந்துவிடும் கணவனிற்கும், கூட வேலை செய்யும் ஏழைகளுக்கும் சேர்த்து இவள் தான் அந்த முதலாளியிடம் நியாயத்தை தட்டிக்கேட்க வேண்டியிருந்தது. அப்படி கேட்டபோது வயிற்றிலிடப்பட்ட தையல் பிய்ந்துப்போகும் அளவுக்கு அடித்து துன்புறுத்தப்பட்டாள். அதனையும் துடைத்து திருட்டுத்தனமாக தன் கோரிக்கையை அரசாங்கத்திடம் கொண்டு சேர்த்து, இந்த கொத்தடிமையிலிருந்து விடுதலையாகும் நாளை எதிர்நோக்கி காத்திருந்தபோது... இவர்களின் சூழலை ஆய்வுசெய்ய வந்த அதிகாரிகள் பொய் வழக்கு என்று அறிக்கை தர மேலும் நரகமாகிப்போனது வாழ்க்கை.