சட்டத்திற்குப் புறம்பான வகையில் அனுமதியின்றி சூதாட்ட விடுதிகள் நடத்துவது ஆக்ராவில் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வரும் துயரங்களில் ஒன்று. 18 வயது நஸியா கான் இந்த முறைகேட்டைப் பற்றி எப்படியாவது ஆதாரங்களுடன் காவல்துறை கவனத்துக்கு எடுத்துச் செல்ல உறுதி கொண்டார். அதனபடி கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் தேதி போதுமான ஆதாரங்களை சேகரித்து சட்டத்துக்குப் புறம்பான முறையில் அனுமதியின்றி நடத்தப்படும் சூதாட்ட விடுதிகள் குறித்தும் அதன் உரிமையாளர்கள் குறித்தும் காவல்துறை கவனத்துக்கு எடுத்துச் சென்று வலிமையான புகாராகப் பதிவு செய்தார். இதையடுத்து அப்படிப்பட்ட சூதாட்ட விடுதிகளை நடத்தி வந்த 4 நபர்கள் கைது செய்யப்பட்டு விடுதிகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.
இதையடுத்து தங்களது முறைகேடான தொழிலுக்கு தடங்கல் ஏற்படுத்திய இளம்பெண் நஸியா மீது குற்றவாளிகளின் கோரக் கண் படிந்து நஸியாவைச் சார்ந்தவர்கள் மிரட்டப்பட்டனர். அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மோசமாகப் பொது இடங்களில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டனர். நஸியா வீட்டை விட்டு வெளியில் வந்தால் அவரது உயிருக்கே ஆபத்து எனும் படியான அளவுக்கு அவரால் அடையாளம் காட்டப்பட்டிருந்த குற்றவாளிகள் அவருக்கு இன்னலை ஏற்படுத்தி வந்தனர்.
இதனால் அஞ்சி அஞ்சி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்ட நஸியா, ஒரு கட்டத்தில் குற்றவாளிகளின் அழிச்சாட்டியத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத நஸியா, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தன்னையும், தன் குடும்பத்தையும் மிரட்டிக் கொண்டிருக்கும் அந்தக் கூட்டத்தைப் பற்றி சமூக ஊடகங்களில் பதிவு செய்தார். அவர்களது தொடர் அராஜகத்தைப் பற்றி அன்றைய உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் ட்விட்டரில் மெசேஜ் தட்டி விட்டார். அப்புறம் தான் குற்றவாளிகள் தங்களது அராஜக மிரட்டலைத் தவிர்த்து சற்றே அடக்கி வாசிக்கத் தொடங்கினர். சமூக ஊடகங்களைப் பொழுது போக்குக்கு பயன்படுத்தி வருவோர் பலர் இருக்க அவற்றின் உண்மையான நோக்கத்தை சரியாகப் பயன்படுத்திய விதத்தில் நஸியாவைப் பாராட்டலாம். தனது உயிர் மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்பைப் பற்றி யோசிக்காமல் சுற்றுப்புற ஒழுக்கக் கேட்டை தட்டிக் கேட்ட தைரியமான செயலுக்காகவும், அதற்காகத் தான் மிரட்டப்பட்ட போதும் அஞ்சி ஒடுங்காமல் சமூக ஊடகங்கள் வாயிலாக குற்றவாளிகளின் மிரட்டலை உலகுக்கு அடையாளம் காட்டிய சமயோசித புத்திக்காகவும் நஸியாவுக்கு துணிச்சலுக்கான தேடிய விருது வழங்கப்பட்டிருக்கிறது.