கர்மா, பூர்வ ஜென்மா, ஊழ்வினை, பிறவிப்பயன், பகவான் சேவை, போன்ற மந்திர வார்த்தைகளைக் கொண்டு முதலில் அப்பாவி மக்களை தங்களை நோக்கி சுண்டி இழுக்கும் இவர்களுக்கு ஏஜண்டுகளாகப் பணியாற்ற தனி பக்தாள் படையே இருக்கிறது. வாழ்வாதாரத்துக்கான ஊதியத்தை ஈட்டும் வேலை நேரம் போக மிச்ச மீதி நேரங்களிலெல்லாம் அவர்களது ஒரே வேலை இந்த வேலை தான். பகவான் அப்படிச் செய்தார், இப்படிச் செய்தார், தங்களுக்கு இப்படிக் காட்சி கொடுத்தார், தங்களிடமிருந்த இடத்தை கோயில் கட்ட தானமாக அளிக்கச் சொன்னார், உடனே மறுபேச்சின்றி ‘ பகவானே இது நீங்கள் எனக்களித்தது, எடுத்துக் கொள்ள என்னிடம் கேட்பானேன்... என்று கேள்விக்குறியாக வளைந்து வணங்கி காலில் விழுந்து அழுது புரண்டு தன்னிடமிருக்கும் கடைசிப் பைசா வரைக்கும் ஸ்வாமிஜீக்களுக்கு இறைக்கத் தயாராக இங்கு பல லட்சம் தாஸானுதாஸர்கள் இருக்கிறார்கள். அவர்களது ஒரே குறிக்கோள் எப்படியாவது தங்களது பாவக்கறைகளை இந்த ஸ்வாமிஜீயின் சேவா குறைத்து... கடைசியில் ஒன்றுமில்லாமல் போகச் செய்தால் சரி. அவ்வளவே! அப்படி ஏமாந்த சோனகிரிகளாக இந்த ஸ்வாமிஜீக்களையும், சாமியார்களையும், பகவான்களையும் நம்பி தங்களது முழுச் சொத்தையும் எழுதி வைத்து கடைசியில் சாகக் கிடைக்கையில் அனாதைகளாக வெளியேற்றப்பட்டு அழுது புலம்பியவர்களும் இங்கு அனேகம் பேருண்டு. ஆனால் எந்த உண்மைக்கும் ஆயுள் தான் குறைவாயிற்றே! பொய்யல்லவா இந்த பூமியை ஆண்டு கொண்டிருக்கிறது.